சவேந்திர, கோட்டா பயம்: கொடுங்கோண்மையை தேசப்பற்றாக்கும் வேட்பாளரும் இராணுவத் தளபதியும்
காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் தாய்மார் குழுவொன்று தங்கள் கூட்டு எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது நான் மன்னாரில் இருந்தேன். அவசர கால சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் இராணுவத்திற்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கும் அதிவிசேட வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு எதிர்ப்பை வெளிக்காட்டுதல் எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பதைப் பற்றிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்திடம் தனது இளைய மகன் மஹிந்தனை ஒப்படைத்த பின்னர் மகன் வீடு திரும்பாத நிலையில் அதற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்திய பாலேந்திரன் ஜெயகுமாரி எனும் தாய், ராஜபக்ஷ அரசாங் கத்தினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டமை அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்றதொரு சம்பவமாகும். மஹிந்தன் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் இருப்பதை புகைப்படமொன்றில் காணக் கிடைத்தாலும் அந்த இளைஞன் ஒருபோதும் வீடு திரும்பவில்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் மிக மோசமான சட்டத்தைப் பயன்டுபத்தி தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் காரணமாக ஜெயக்குமாரி இன்றுவரை நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.
மேற்படி கூட்டத்திற்கு வருகைத் தந்த தாய் மார்களின் கோஷம் “எங்கள் பிள்ளைகளை காணாமல் போகச் செய்தவர்களுக்கு இராணுவத் தளபதி பதவிகளும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் சன்மானமாக வழங்கப்படுகிறது. இது தான் எங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நீதியா?” என்பதாகவிருந்தது.
கடந்த வாரம், கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் சட்டத்தின் சுயாட்சி ஆகியவற்றை தனது அகந்தையால் புறக்கணித்த ஒரு அடக்குமுறை யாளர் உயிர்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியினை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக முயற்சிக்கிறார்.
அன்று 2015ஆம் ஆண்டில் தனது உயிரைப் பணயம் வைத்து ராஜபக்ஷ ஆட்சிக்கு சவால் விட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம் தனது முழுமையான அடிபணிதலை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் யார்? தேசப்பற்றாளர்களா அல்லது தேசத்துரோகிகளா? இக்கேள்விக்கான பதில் சம்பந்தப்பட்ட தரப்புகளை சார்ந்துள்ளது. போர்க்குற்றங்கள், கொலை, காணாமல் போகச் செய்தல், சித்திரவதை மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் கொண்டாடப்பட வேண்டியவைகளா? இவர்கள் தான் இப்போது செய்திகளில் அதிகமாக காணப்படுபவர்களாக இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை மற்றும் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு ஆகியவை இலங்கையர்களுக்கு ஒரு ஆபத்தான கட்டமாகும்.
1980 களின் பிற்பகுதியில் நடந்த ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது மாத்தளையில், கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாக கோட்டாபய பணியாற்றினாரென சி.ஏ. சந்திரபெருமவினால் எழுதப்பட்ட “கோட்டாபய வின் யுத்தம்” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்திற்கு உரியதென சந்தேகிக்கப்படுகின்ற 154 எலும்புக் கூடுகளைக் கொண்ட பாரிய மனிதப் புதைகுழியொன்று 2012 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்பட்ட மண்டை ஓடு கள் மற்றும் கை எலும்புகள் சித்திரவதைக்கான அறிகுறிகளைக் காட்டுவதாக இருந்தபோதிலும், ராஜபக்ஷ அரசாங்கம் அச்சந்தர்ப்பத்திலிருந்த நீதவானை இடமாற்றம் செய்து, வினைத்திறனற்ற விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்ததன் மூலம் இந்த வழக்கை செயலிழக்கச் செய்தது.
இவ்விடயம் சார்ந்த ரேடியோகார்பன் பரிசோதனை பதில்களை விட அதிகமான கேள்விகளையே தோற்றுவித்தது. மேலும் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவவின் கரிசனைகள் புறக்கணிக்கப்பட்டன. (தர்ஷனி ரத்ன வல்லி, மாத்தளை மனிதப் புதைகுழிகள்: அலுமாரிகளிலும் எலும்புக்கூடுகள்?, கொழும்பு ரெலிகிராப் டிச.21, 2014).
கோட்டாபய வெளிநாட்டில் ஒரு தசாப்தத்தை கழித்து விட்டு 2005ஆம் ஆண்டில் இலங்கைக்குத் திரும்பினார். அவர் உடனடியாக பாதுகாப்புத் துறையை மறுசீரமைத்து வாராந்த புலனாய்வு அமைப்புகளின் கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதுடன் கைதுகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார் (கோட்டாவின் யுத்தம்: ப 357). போர் உக்கிரமடைந்ததால், எவ்வித சாட்சியும் இருக்காது என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார். அவர் 2008 செப்டெம்பர் மாதத்தில் ஐ.நாவை இலங்கையிலிருந்து வெளியேற்றியதுடன் சுயாதீன ஊடகங்களுக்கும் தடை விதித்தார்.
‘போர்வீரர்கள்’ மற்றும் “மனிதாபிமான நடவடிக்கைகளை” மகிமைப்படுத்துவதற்காகவே ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கண்மூடித்தன மாக மருத்துவமனைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுதல் மற்றும் தாக்குதல் நடாத்தப்படக்கூடாத பாதுகாப்பு வலயங்களில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்படுதல் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளும் அரசாங்க மருத்துவர்களும் அறிக்கையிட்டதையடுத்து செய்திகள் எப்படியோ கசியத்தொடங்கின.
பிரெட்ரிகா ஜான்ஸ் தனது கட்டுரையில் “கோட்டா, அவர்களே சுட உத்தரவிட்டார்” என்று சுட்டிக்காட்டியுள்ளவாறு, புலிகளின் தலைவர்களும் அவர்களது பிள்ளைகளும் நேரடியாக சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இது கோட்டாபயவின் உத்தரவின் கீழ் செயற்படுத்தப்பட்டதாக அறிக்கையிடப்பட்டிருந்தது. பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் சவேந்திர சில்வாவின் 58ஆவது படைப் பிரிவில் சரணடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் 2009 மே மாதம் அரசாங்கத்தால் இயக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்த மான பேருந்துகளில் ஏற்றப்பட்டார்களெனினும் அவர்கள் ஒருபோதும் திரும்பிவரவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட இலங்கை தொடர்பான புலனாய்வு அறிக்கையில் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் இடம்பெற்ற சட்டவிரோதமான கொலைகள் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவின் தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. யுத்த காலத்தில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் கட்டளை தொடர்பு முறையின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டதாகவும் “UAV கண்காணிப்புக்கு” உட்படுத்தப்பட்டதாகவும் ஏற்றுக்கொண்டதன் மூலம் கோட்டாபய ஒவ்வொரு கட்டத்தையும் அறிந்திருந்தார் என்பது புலனாகின்றது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து அதன் இறுதிக் கட்டங்களில் அற்புதமான வேலைகளை” செய்ததற்காக கோத்தாபய சவேந்திர சில்வாவின் மீது பாராட்டினை பொழிந்தார்.
அவரது அட்டூழியங்களை செயல்படுத்த கோட்டாபய பொய்களை உருவாக்கினார். ஐ.நா.வின் மனித உரிமை பிரதானியாகவிருப்பினும் அல்லது சமாதான ஆர்வலராக இருப்பினும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் புலிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். மருத்துவமனைகள் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லையென “ஒப்புதல் வாக்கு மூலம்” அளிக்கும் இடத்திற்கு தள்ளப்படும்வரை அரச மருத்துவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டார்கள். உண்மையை மூடி மறைக்க இயலாத சந்தர்ப்பத்தில், கோட்டாபய வெள்ளை வான்களை அனுப்பினார்.
இராணுவத்தை விமர்சித்தால், “அதை எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் உங்களை முடித்துவிடுவார்கள்” என்று கோட்டாபய தனிப்பட்ட முறையில் போத்தல ஜயந்தவை எச்சரித் ததையடுத்து கீத் நொயார் மற்றும் போத்தல ஜயந்த ஆகியோர் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் ஆங்கில பத்திரிகையாகிய “சன்டே ஒப் சோர்வர்” பத்திரிகையில் வெளிவந்த அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட குற்றச் செயல்” (ஜன. 20, 2019) கட்டுரைக்கு அமைவாக பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று பின்னர் கொலைசெய்யுமாறு கோட்டாபய இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் கனேடிய தமிழ் பிரஜையாகிய ரோய் சமாதானத்தின் மீதான சித்திரவதை ஆகியவற்றிற்கு தற்போது இவர் ஐக்கிய அமெரிக்காவில் வழக்குளை எதிர்கொண்டுள்ளார்.
போருக்குப் பின்னர் பல ஆண்டுகளாக, பொறுப்புக்கூறல் எனும் விடயம் எட்டாக் கனியாகவே இருந்தது. எல்.எல்.ஆர்.சி மற்றும் பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆர்வலர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி உயிருடன் இருப்பவர்கள் தங்களை பாலியல் துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தியவர்களின் பெயர்களை வெளியில் கூறக்கூடாதென அச்சுறுத்தப்பட்டதுடன் துன்புறுத்தப்பட்டனர்.
அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் பிற சரணடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஹேபியஸ் கோர்பஸ் வழக்குகள் நலிவடையச் செய்யப்பட்டன.
சிதாறா சிறீன் அப்துல் சறூர்
மீழ்பார்வை
சவேந்திர, கோட்டா பயம்: கொடுங்கோண்மையை தேசப்பற்றாக்கும் வேட்பாளரும் இராணுவத் தளபதியும்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2019
Rating:

கருத்துகள் இல்லை: