உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி மீண்டும் வாக்குகளை பெற அரசு முயற்சி –இம்ரான் எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி மீண்டும் வாக்குகளை பெற அரசு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
சிறிகொத்தவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் பொதுத்தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஒரு வருட நினைவு 21 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அந்த அனுதாபங்களை பயன்படுத்தி வாக்குகளை பெறவே 25 ஆம் திகதி தேர்தலை நடாத்த இந்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்போம் என்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அது தொடர்பான உரிய விசாரணைகளை கூட இதுவரை முன்னெடுக்காமல் உயிரிழந்தவர்களின் பிணங்களில் ஏறி மீண்டும் அரசியல் செய்ய முயற்சிப்பது இந்த அரசின் செல்வாக்கு பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
நாம் இந்த அரசுக்கு சவால் விடுகிறோம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி உங்களுக்கு உண்மையாகவே அக்கறை இருப்பின் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை தேர்தல் அறிவிக்க முன் மக்கள் முன் வெளிப்படுத்துங்கள். அத்துடன் முடிந்தால் தேர்தலை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்தி பெரும்பான்மையை பெற்றுக்காட்டுங்கள்.
மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு காணப்பட்ட செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகின்றது. எமது அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்ற அரச ஊழியர்களுக்கு எமது அரசால் இந்த வருடம் அதிகரிக்கப்படவிருந்த ஓய்வூதிய தொகை இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை. எமது அரசில் ஓய்வூதியத்தில் கையெழுத்திட்ட அடுத்த நிமிடம் அவர்களின் வங்கி கணக்கில் இந்த தொகை வைப்பிடப்பட்டது. ஆனால் இன்று ஒரு மாதம் கடந்தும் அவர்களால் அந்த தொகையை வழங்கமுடியவில்லை என தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி மீண்டும் வாக்குகளை பெற அரசு முயற்சி –இம்ரான் எம்.பி
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 06, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 06, 2020
Rating:

கருத்துகள் இல்லை: