பிள்ளையானுக்கு நீதிமன்றம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், நாளை மறுதினம் (20) பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் 3ஆவது சந்தேக நபராக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில், அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி பிள்ளையானின் சட்டத்தரணிகளால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த நகர்வு மனுவை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற மேலதிக நீதிபதி டி. சூசைதாசன், சிவநேசதுரை சந்திரகாந்தனை நாளை மறுதினம் வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கினார்.
இதனடிப்படையில் பிள்ளையானை, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் பாராளுமன்ற அமர்வுக்காக அழைத்துச் செல்லவுள்ளனர். பிள்ளையானின் சார்பில் சட்டத்தரணிகளான யு.ஏ.நஜீம், ஏ.உவைஸ், திருமதி மங்கேஸ்வரி சங்கர் ஆகியோர் ஆஜராகினர்.
பிள்ளையானுக்கு நீதிமன்றம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 18, 2020
Rating:

கருத்துகள் இல்லை: