முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பிரவேசத்திற்கு முகவரி தேடி கொடுத்த அஷ்ரப்
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பிரவேசத்திற்கு முகவரி தேடி கொடுத்த எம்.எச்.எம்.அஷ்ரப்
சுதந்திரத்துக்குப் பின் இலங்கை அரசியல் வரலாற்றில் முகவரி அற்று இருந்த தருணத்தில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ குரலாய் மரத்தை உருவாக்கி அதன் கிளைகளை அகலப்பரப்பி அதன் நிழலில் பலரை நிலைகொள்ள செய்தவரே M.H.M அஷ்ரப். சரித்திர நாயகனாய் போற்றப்படும் இம்மகான் பன்முக ஆளுமை கொண்டு மிளிர்ந்தார்.
இவர் 1948.09.23 அன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை எனும் கிராமத்தில் பிறந்தார்.கல்முனை நகரில் வளர்ந்த இவர் பாடசாலை கல்வியை அங்கே முடித்தார். 1970 இல் சட்டக்கல்லூரிக்கு தெரிவாகி முதலாம் சிறப்பு வகுப்பில் சித்தியடைந்தார்.பின்னர் கொழும்பு பல்கலைகழகத்திலிருந்து சட்டமாணி, சட்ட முதுமாணி பட்டங்களை பெற்றுக்கொண்டார்.
1997 ஆம் ஆண்டு அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி சட்டத்தரணி என்று பட்டமளித்து கௌரவமளிக்கப்பட்ட முதல் நபராவார். தந்தை செல்வநாயகத்தை தனது அரசியல் குருவாக வகுத்துக் கொண்டார்.
அரசியலில் அஷ்ரப் சமூகத்தின் மீது பற்றின்றி சிங்கள பெரும்பான்மை கட்சிகளுக்கு எடுபிடிகளாக காக்கா பிடிப்போரையும் பதவி மீது கொண்ட மோகத்தினாலும் அமைச்சர் பதவி, பிரதியமைச்சர் பதவி,அரச கூட்டுத்தாபணங்களின் தலைவர்,பணிப்பாளர் பதவிகள்,வெளிநாட்டு தூதுவர் பதவிகள் என தம்மை பலப்படுத்திக் கொள்ள விரும்பும் குறுகிய அரசியல் மனப்பாங்கை விடுத்து, பரந்த சிந்தனையுடன் ஒரு சுயாதீன அரசியல் குரலாய் ஒலிக்க விரும்பினார்.மக்களும் இவரோடு கரம்கோர்த்து பெரும் பங்களிப்பை வழங்கினர்.
இவர் தேசிய மையநீரோட்டத்தில் இரண்டற கலந்து அரசியல் எல்லைகளை விரிவுபடுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் அடையாளத்தை உறுதியாகவும், தெளிவாகவும் நிலைநாட்ட வேண்டிய தேவையை உணர்ந்தார்.அதன் விளைவாகவே முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கினார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவராக, அரசியல்வாதியாக, சட்டத்தரணியாக , எழுத்தாளராக, கவிஞராக என பல துறைகளிலும் தடம் பதித்தார்.சிறந்த பேச்சாளராக, துணிச்சல் மிக்க வீரராக, கொள்கைவாதியாக, சிறந்த தலைவராக,சிந்தனையாளராக, சரியாக கணக்கு போடுபவராக, அர்ப்பணிப்பாளராக திகழ்ந்தார்.
முஸ்லிம் அரசியலில் புதிய தொலைநோக்கையும், புதிய பாதையும் வகுத்தார்.
சிறுபான்மை சமூகம் தம் உரிமைகளையும் தேவைகளையும் அடையாளப்படுத்தவும்,வென்றெடுக்கவும் பெரும்பான்மை சமூகத்திடம் கையேந்தி நிற்க கூடாது என்ற நிலை உணர்ந்து தனியான அரசியல் கட்டமைப்பை உருவாக்க தன்னையும் சமூகத்தையும் புடம் போட்டார். தமிழ் மக்களை அவர் தன் இரண்டு கண்களில் ஒன்றாகவே கருதினார்.
இரு சமூகங்களின் உறவும் பிட்டும், தேங்காய்ப் பூவும் இரண்டற கலந்திருந்தது என அஷ்ரப் அடிக்கடி குறிப்பிடுவார்.சிங்கள பெரும்பான்மை மக்களோடும் மிகவும் நெருங்கி பழகினார்.இன,மத, மொழி,பிரதேச எல்லைகள் என்ற சாக்கடையில் சிக்கியிருந்த மக்களை விடுவித்து மானுட மேம்பாட்டுக்காக ஒன்றுபட்டு இயங்கும் நோக்கில் தேசிய ஐக்கிய முன்னனியை உருவாக்கினார்.இதன் பின் அவர் ஒரு தேசிய தலைவராக உருவெடுத்தார்.
1989இல் முஸ்லிம் காங்கிரஸ் முதல் முறையாக போட்டியிட்டு 4 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது.1994 இல் உள்ளூராட்சி சபை தேர்தலில் குறைந்தது 6 உள்ளூராட்சி சபைகளையேனும் முஸ்லிம்கள் கைப்பற்ற வேண்டும். தவறுமெனில் தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் என சவால் விட்டார்.கட்சி 4 சபைகளையே கைபற்றியதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.இதன் மூலம் சொல் வீரன் மாத்திரமல்ல; செயல் வீரனும் தான் என்பதை நிரூபித்தார்.அத்தோடு எந்த சவாலை விடுப்பதற்கும், எந்த சவாலையும் ஏற்கவும் துணிந்தவர் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
அரசியலில் விட்டுக்கொடுப்புகள் தேவை என்பதையும் பிரதான கட்சிகளுடன் தந்திரோபாய கூட்டுக்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அஷ்ரப் உணர்ந்தார். இவர் மறைந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானிடமிருந்து சில அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.
சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுடன் தேர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். தொண்டமானைப் போலவே அஷ்ரபின் தந்திரோபாயமும் தேர்தல் உடன்படிக்கைகள் மூலம் தனது மக்களின் பிரதிநிதித்துவத்தை உச்சப்படுத்துவதாக இருந்தது.அரசியலில் இசைந்து போகும் ,விட்டுக் கொடுக்கும் ஆற்றல் அவரது பலமாக காணப்பட்டது.
அவரது கனவுகளில் பெரும்பான்மையானவை முஸ்லிம் சமூகத்தை எல்லாத்துறைகளிலும் அடுத்த படிநிலைக்கு எவ்வாறு உயர்த்துவது என்பதாகவே இருந்தது.ஆயுதமேந்த துணிந்த அன்றைய இளைஞர்களை அறவழியில் நெறிப்படுத்தி பலருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தார்.
மேலும் மாமனிதர் அஷ்ரப் அவர்களின் தென்கிழக்கு அலகு என்ற கோட்பாடு அப்போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒலுவில் துறைமுகம், தென்கிழக்கு பல்கலைகழகம், மேலும் பல துறைமுகங்களை விரிவுபடுத்தல், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் என பல சேவைகளை புரிந்தார்.
தூற்றுவோர் வாயாலே போற்றுமளவுக்கு மக்களை கவரும் வல்லமை பெற்றவர்.புதிய அரசியல் யாப்பை வரைவதில் அஷ்ரப் தீவிரமாக உழைத்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் நம்பிக்கைக்குறிய பாத்திரமாக திகழ்ந்தார்.
அதன்விளைவாக புதிய அரசியல் அமைப்பு யாப்பை பாராளுமன்றத்தில் சமர்பித்து மூன்று மணித்தியாலம் அவர் ஆற்றிய உரை இலங்கை அரசியல் வரலாற்றில் வியந்து கூறப்படுகிறது.
தமிழ் இலக்கிய துறையிலும்,கவிதை வரைவதிலும் திறன் பெற்று மிளிர்ந்தார்.இலங்கையில் வெளிவந்த கவிதை நூல்களில் மிக அதிக பக்கம் கொண்டு விளங்கியது மாமனிதர் அஷ்ரப் எழுதிய "நான் எனும் நீ" கவிதை நூலாகும்.
இரண்டு தாசாப்தங்களுக்கு முன்னர் இன்றுபோல் ஓர் நாளில்( 2000.09.16) எதிர்பாரா விபத்தினால் இவ்வுலகை விட்டு நீங்கினார்.அவர் விட்டுச்சென்ற விதைகள் இன்றும் விரூட்சகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன."அரிதரிது மானிடர் ஆதல் அரிது" என்பதற்கு ஏற்ப இவர் போல் தலைவர்கள் பிறப்பது மிகவும் அரிது.இறந்தாலும் இன்றும் மக்கள் மனங்களில் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்.அல்லாஹ் இவர்களுக்கு மேலான சுவனத்தை வழங்குவானாக.
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பிரவேசத்திற்கு முகவரி தேடி கொடுத்த அஷ்ரப்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 16, 2020
Rating:

கருத்துகள் இல்லை: