காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மாவினால் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான பிரேரணை சமர்பிப்பு
ஏ.எல்.டீன்பைரூஸ்
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான பிரேரணை காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர்ஹம்சாவினால் இன்று (25) சபை அமர்வின் போது சமர்பிப்பு.
இலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஏனைய பெரும்பான்மை சமூகங்களோடு ஒற்றுமையாகத் தேசப்பற்றுடன் வாழ்பவர்கள் என்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள சமூகமாக முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்துவருகின்றோம்.
இந்நாடு பல சவால்களை எதிர்கொண்ட போதெல்லாம் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு சமூகமாகவே முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது.
ஆயினும் துரதிஷ்டவசமாக அண்மைக்காலமாக எமது சமூகம் இந்நாட்டில் பலசவால்களை எதிர்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் எமது தனியார் சட்டங்களை இல்லாமலாக்குவதற்கான முயற்சி. அந்தவகையில் இலங்கையில் ஒரேநாடு ஒரேசட்டம் என்ற எண்ணக்கருவின் கீழ் தனியார் சட்டங்கள் இல்லாமல் ஆக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மற்றொருபுறம் எமது தனியார் சட்டங்களில் ஒன்றான முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் காலத்திற்கு ஏற்றவாறான திருத்தங்கள் பல செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் மார்க்கத்திற்கு முரணான திருத்தங்களையும் மேலும் சமூகத்தை, குறிப்பாகப் பெண்களைப் பல புதியபிரச்சினைகளில் தள்ளிவிடக் கூடியதுமான திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் நீதிஅமைச்சினால் செய்யப்படுகின்றன.
அவை தொடர்பாக எமது உயரியசபையின் கவனத்திற்கு கொண்டுவருவதும், அதன்மூலம் இவ்வாறான சட்டத்திருத்தங்களுக்கு மக்களின் பிரதிநிதிகளாக, எமக்கு வாக்களித்த மக்களின் எதிர்ப்பினை இவ்வுயரியசபையில் முன்வைப்பதும், அத்தோடு சமூகமாக இக்குறித்த சட்டதிருத்த முன்மொழிவுகளுக்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கப்போகும் ஜனநாயக ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்கக்கோருவதும் இந்தப்பிரேரணையின் நோக்கங்களாகும்.
மேலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஒரு வெளிப்ப டிடைத்தன்மைகாணப்படவில்லை என்பதையும், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்பொது வெளிகளில் ஆழமாகக்கருத்தாடப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் சபையில் தெரிவித்துக்கொள்கிறோம்.
இருந்த போதும் உத்தியோகப்பற்றற்ற வகையில் நீதி அமைச்சரினாலும் அவரது ஆலோசனைக் குழுவினாலும் வெளியிடப்பட்ட சில உத்தேசத்திருத்தங்கள் தொடர்பில் எமக்குள்ள அதிருப்தியை சபையில் முன்வைக்கின்றோம்.
1.திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயதெல்லையை 18ஆக நிர்ணயம் செய்தல்.
சிறுவர் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்தத்திருத்தம் முன்வைக்கப்படுவதாக அறிகின்றோம்.
ஆனால் எமது நாட்டின் தண்டனைச்சட்டக்கோவையில் ஒருபெண் ஒருஆணுடன் உறவை மேற்கொள்ள சம்மதம் வழங்க தகுதியுடையவயதாக 16வயது சொல்லப்பட்டிருக்கின்றது.
எமது மார்க்கத்தில் திருமணம் இல்லாமல் உறவு கொள்ளுதல் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் பல புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இலங்கையில் 18வயதுக்கு முன்னரான திருமணங்கள் முஸ்லிம் சமூகத்தைவிட மிக அதிக அளவில் பெரும்பான்மை சமூகத்தில் நடக்கிறது.
அவர்கள் பின்பற்றும் பொதுசட்டத்தில் 18 வயது திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிகழ்கின்றது என்றால்,18 வயதுக்கு முன்னரான திருமணங்கள் சமூகத்தில் ஏதோ காரணங்களுக்காக அவசியமாகின்றது என்பதே நிதர்சனம். எனவே சட்டம் அதை இனங்காண மறுக்கும் போது பல சமூகப் பிரச்சினைகள் ஏற்படும்.
எனவே 18வயதுக்கு முன்னர் திருமணம் செய்வதற்கான விசேட சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது பயன்படுத்தக்கூடிய வகையில் இப்பிரிவிற்கு விதிவிலக்கு வாசகம் ஒன்று அவசியம் என்பது எமது கோரிக்கை.
திருமணம் ஒன்றின் போது மணமகளின் சம்மதம் வெளிப்படையாகப் பெறவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையின் அடிப்படையில், மணமகள் வெளிப்படையாகத் திருமணப்பதிவு சான்றிதழலில் கையொப்பமிட வேண்டும் என புதிய உத்தேச்ச்சட்ட திருத்தம் ஏற்பாடு செய்கிறது.
அதே போல மணமகள் வெளிப்படையாக கையொப்பம் இடுவதினால் வலியினுடைய கையொப்பம் இந்த ஆவணத்தில் கட்டாயமானதல்ல என்ற ஏற்பாட்டையும் இதில் உள்ளடக்கியுள்ளனர். இது எமது இஸ்லாமிய விதி முறைகளுக்கு மாற்றமான ஏற்பாடாகும்.
வலியினுடைய சம்மதமற்ற திருமணம் வலிதற்றது என்பதற்கான அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்கள் வெளிப்படையாக இருக்கின்றபோது, வலியின் சம்மதம் கட்டாயமானதல்ல என்ற சட்டதிருத்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாது.
முஸ்லிம் தனியார் சட்டம் என்பது மார்க்க விதிமுறைகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் அச்சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள் மார்க்க விதி முறைகளை மீறுபவையாக இருக்க முடியாது.
பெண்கள் காதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திருத்தமானது எந்த இஸ்லாமிய ஆதாரங்களுடன் எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரியவில்லை.
எமது விவாக விவாகரத்து சட்டத்தை திருத்தவென, மிலிந்த மொரொகொட அவர்கள் நீதி அமைச்சராக இருந்த போது நியமிக்கப்பட்ட குழுவிலே இருந்த மார்க்க அறிஞர்கள் இந்த ஏற்பாட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக 'இஜ்திஹாத்' செய்பவர்கள் மார்க்கச்சட்ட அறிஞர்களாக இருக்க வேண்டுமே ஒழிய மார்க்கத்தோடு சம்பந்தம் அற்றவர்களாக இருக்கமுடியாது.
மேலும் ஒரு திருமணத்தில் மணமகளுக்கு 'வலி' இல்லாத போது அங்கு காதியே வலியாக செயல்பட வேண்டும். ஆனால் ஒரு பெண் மற்றொரு பெண்ணிற்கு வலியாக இருக்க முடியாது.
எனவே பெண்ணொருவர் காதியாக நியமிக்கப் படுவதில் சிக்கல் இருக்கிறது. இவற்றை வைத்துப்பார்க்கின்ற போது, இத்திருத்தமானது அங்கீகரிக்கப்பட்ட மார்க்க அறிஞர்களின் அனுமதியோடு நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.
4.பலதாரமணத்தை இல்லாமல் ஆக்குதல் அல்லது கடுமையான நிபந்தனைகளோடு அனுமதித்தல்
பலதாரமணம் என்பது எமக்கு அல்குர்ஆனில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்ட ஒரு விடயம். அது எவ்வாறு செய்யப்பட முடியும் என்பதற்கான நிபந்தனைகளும் அல்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பலதாரமணம் என்பது ஆண்களுக்கான ஒருசலுகை என்ற எண்ணப்பாடு தவறானது. அது சமூகத்தில் நிகழ்கின்ற பலசீர்கேடுகளுக்குத்தீர்வாக அமைவது. பலதாரமணம் மறுக்கப்பட்ட சமூகங்களில் விபச்சாரம், நெறிமுறை அற்ற பிள்ளைகள் போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
பிள்ளைகளுக்கான தாபரிப்புத் தொடர்பான 'தாபரிப்புச்சட்டத்தின்' பிரிவுகளில் நெறிமுறை அற்ற பிள்ளைகளுக்கான தாபரிப்பு என்று ஒரு ஏற்பாடு காணப்படுகின்றது. எமது மார்க்கத்தில் இதற்கு அனுமதி இல்லை.
ஒரு பெண்ணுடன் ஆண் உறவினை ஏற்படுத்த வேண்டுமாயின் அவளைத் திருமணம் செய்வதன் மூலம் அவளுக்கும், அந்த உறவில் கிடைக்கும் வாரிசுகளுக்கும் அந்த ஆண்மீதான சகல உரிமைகளும் முதலில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
சட்டத்தால் பலதாரமனம் இல்லாமல் ஆக்கபட்டாலும், பலதாரமணம் அவசியமாகும் சந்தர்ப்பங்களில் வழக்காற்றுத் திருமணம் ஒன்றினை செய்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஏனெனில் எமது நாட்டின் தண்டனைச்சட்டக் கோவையின்படி வயதுவந்த ஆணும் பெண்ணும் திருமணம் ஒன்று இல்லாமல் சேர்ந்து வாழ்தல் குற்றமல்ல.
இந்தநிலையில் குறித்த ஆண், பின்னரான திருமணத்தில் உள்ள மனைவியையோ பிள்ளைகளையோ கைவிட்டால் அல்லது மரணித்து விட்டால், அந்த மனைவியும் அவளது பிள்ளைகளும் அந்த ஆணின் சொத்துக்கள் மீது எந்த சட்டரீதியான உரிமையையும் பெறமாட்டார்கள்.
இவ்வாறு பெண்களும் குழந்தைகளும் நிர்க்கதியாக விடப் படுவதை எமது மார்க்கம் அனுமதிக்க வில்லை.
மேலும் பலதாரமணத்தை நிபந்தனைகளோடு அனுமதிப்பதானால் அந்த நிபந்தனைகள் எவை என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும். அவை மார்க்க விதி முறைகளுக்கு உட்பட்டவையா என்பதை மார்க்க அறிஞர்கள் பரிசீலிக்க வேண்டும்.
பல தாரம்மணம் என்பதை நடைமுறைச் சாத்தியமற்றதாக கூடிய நிபந்தனைகளாக அவை இருப்பின் அல்லது மார்க்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு புறம்பானவையாக இருப்பின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
5.காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குதல் அல்லது அதிகாரக்குறைப்புச்செய்தல்.
நீதி மன்றங்கள் இலங்கையில் ஏறத்தாழ ஒருசகாப்த வரலாற்றினைக் கொண்டது. காதி என்ற சொல் நீதிபதியை குறிக்கும் அரபுச்சொல் ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரை அது முஸ்லிம்களின் விவாக விவாகரத்து தொடர்பான விடயங்களை கையாள்கின்ற ஒரு நீதிமன்றத்தின் நீதிபதியே குறிக்கின்றது.
எனவே இந்த காதி என்ற சொற்பிரயோகம் இல்லாமல் ஆக்கப்படுவதானது இந்த நாட்டிலே சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழுகின்ற ஒரு சிறுபான்மை இனத்தின் நீண்டகால இருப்புக்கான அடையாளத்தை அழிக்கும் முயற்சி. இது அனுமதிக்க முடியாததுமட்டுமல்ல கண்டனத்துக்குரியதும்கூட.
மேலும்---"MarriageConciliator" என்ற பெயரின்கீழ் காதியினுடைய அதிகாரங்கள் குறைக்கப் படுவதையோ வழக்குகள் மாவட்ட நீதி மன்றங்களுக்கு அனுப்பப்படுவதையோ வரவேற்க முடியாது.
அவ்வாறு செய்யப்படுமாயின் எமது பெண்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர்.
நேரவிரயம், பணச்செலவு, சட்டத்தரணிகளின் உதவியை நாடுவதில் உள்ள சிரமம், நீதிமன்றங்களில் தங்களது குடும்ப வழக்குகள் பகிரங்கமாக விசாரிக்கப்படுவதில் உள்ள உளவியல் அழுத்தங்கள் எனப்பலகாரணிகளால் தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதியினை கூடப்பெறுவதற்கு முன்வர மாட்டார்கள். இது எமது பெண்களுக்கு செய்யப்படுகின்ற அநீதி.
தற்போதுள்ள காதிநீதிமன்றங்களில் குறைபாடுகள் இல்லை என நாங்கள் கூறவில்லை. ஆனால் அக்குறைகள் திருத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப் படுத்தப்படும் வகையில் தரம் உயர்த்தப்பட வேண்டுமே ஒழிய, அதுதரவிறக்கம் செய்யப்படுவதற்கு ஏதுவாக முன்மொழியப்படும் திருத்தங்களை எதிர்க்கின்றோம், வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே மேலே சொல்லப்பட்ட திருத்தங்கள் எமது சமூகத்தின், குறிப்பபெண்களின் நன்மை கருதிச்செயற்படுவது போன்று ஒரு விம்பம் தோற்றுவிக்கப்பட்டாலும், உண்மையில் அவை சமூகத்தையும் குறிப்பாக பெண்களையும் பல புதியபிரச்சினைகளின் பக்கம் தள்ளிவிடக்கூடியது என்பதேநிஜம்.
எனவே இத்திருத்தங்களைச்சமூகத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாடு ஒரு இக்கட்டான பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் தமது அன்றாட வாழ்க்கையினைக் கொண்டு நடத்துவதற்காக சிரம்ப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆயினும் இந்த நிலைமை எமது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தம் தொடர்பில் பாராமுகமாக இருக்க இடமளிக்க முடியாது.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்கள் சட்டமாக்கப்படுமானால் அது எமக்குப்பின்னால் வரப்போகின்ற பல தலைமுறையினரைப் பாதிக்கும்.
எனவே எமது எதிர்கால சந்த்திகளுக்காக எமது சட்டத்தைப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமது தோள்களிலே சுமத்தப்பட்டுள்ளது.
மார்க்கத்திலே பர்ளுகிபாயா என்று சொல்லப்படுகின்ற சமூகக்கடமையாகவே இதுகாணப்படுகின்றது. இக்கடமையில் இருந்து தவறும் பட்சத்தில் முழுச்சமூகமும் இறைவனிடம் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவோம்.
எனவே இதற்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கும் சகலவிதமான முயற்சிகளுக்கும் சமூகத்தின் அக்கறைகருதி இவ்வுயரியசபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றோம்.
மேலும் இதுதொடர்பில், பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் விருப்பினைக் கருத்திற்கொள்ள வேண்டும் என, சட்ட திருத்தத்தோடு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் கேட்டுக் கொள்கின்றோம்..

கருத்துகள் இல்லை: