ராமஞ்ஞ மகா நிகாயவின் மகா நாயக்க பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டார் மக்குலேவே விமல தேரர்
ராமஞ்ஞ மகா நிகாயவின் மகா நாயக்க பதவி வழங்கப்பட்ட வண.மக்குலேவே விமல தேரர் அவர்களுக்கு கிடைத்த மகா நாயக்க பதவி, பௌத்த சாசனத்திற்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து பௌத்தர்களுக்கும் ஒரு ஆசிர்வாதமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் மகா நாயக்க அக்கமகா பண்டித வண.மக்குலேவே விமல தேரர் அவர்களுக்கு மகா நாயக்க பதவிக்கான நற்சான்றிதழ் பத்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நற்சான்றிதழ் பத்திரம் வழங்கும் நிகழ்வு (24) பிற்பகல் கொழும்பு சுதந்திர மண்டபத்தில் இடம்பெற்றது.
புதிய மகாநாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஜினி பத்திரத்தை வழங்கினார்.
மகா சங்கத்தினருக்கு வழங்கப்படும் மரியாதை சமூக மீட்சிக்கு வழிவகுக்கின்றது. சாசனத்தை நிலைநாட்டுவதற்கும் சாசன மறுமலர்ச்சிக்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி மீரிகம, மினிஒலுவ வித்யாவாச பிரிவேனாவில் தேரராக பௌத்த சாசனத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட வண. மகுலேவே விமல தேரர், பிராசீன ஆரம்ப மற்றும் பிராசீன மத்திய பரீட்சைகளில் சிறப்பாக சித்தியடைந்து புத்தசாவக்க தர்ம பீட பிக்கு பல்கலைக்கழகத்தின் திரிபிடகவேதீ பட்டத்தையும் பெற்றுள்ளார்.
சிறந்த தர்ம போதகரான வண, மகுலேவே விமல தேரர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தர்மப் பிரச்சாரத்திற்காக பெரும் சேவையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஏராளமான தம்ம நூல்களைத் தொகுத்துள்ள இவர், சிங்களம், பாலி, சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்.
ராமஞ்ஞ மகா நிகாயவில் பல்வேறு பதவிகளை வகித்த தேரர் அவர்கள், சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ, சாஸ்த்திர விசாரத்த, சாஹித்ய கீர்த்தி ஸ்ரீ பரயந்திதர , ஸ்ரீ சரணங்கரோபசேன வங்சாலங்கார, சாசனசோபன, சாசனவங்சாபிடஜ சத்தம்ம ஜோதிக்க போன்ற கௌரவ நாமங்களைப் பெற்றுள்ளதுடன் பர்மா நாட்டினால் வழங்கப்படும் அக்கமகா பண்டித்த கௌரவ நாமத்தையும் பெற்றுள்ளார்.
வண, நாபான பேமசிறி மகா நாயக்க தேரர் அவர்கள் காலமானதைத் தொடர்ந்து, 2021 ஜனவரி 29 அன்று ராமஞ்ஞ மகா நிகாயவின் புதிய மகாநாயக்க தேரராக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் வண, ரலுவே பத்மசிறி தேரரினால் எழுதப்பட்ட அபிநந்தன புலமைப் புத்தகமும் வெளியிடப்பட்டது.
மூன்று நிகாயாக்களினதும் மகா சங்கத்தினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், ராமஞ்ஞ மகா நிகாயவின் நிறைவேற்று சபையின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, செயலாளர், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோருடன் , அரச அதிகாரிகள், நிறைவேற்று சபையின் உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரரின் உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ராமஞ்ஞ மகா நிகாயவின் மகா நாயக்க பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டார் மக்குலேவே விமல தேரர்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2022
Rating:






கருத்துகள் இல்லை: