Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங்

கச்/தேஜ்பூர்: நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாமின் தேஜ்பூரிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் இந்த தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது வீரர்களிடையே பிரதமர் கூறுகையில், "தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லாத அரசு இங்கு அமைந்துள்ளது. 21-ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு நாம் நமது ராணுவத்தை, பாதுகாப்பு படைகளை நவீன வளங்களைக் கொண்டு புதுப்பித்து வருகிறோம். உலகின் மிகவும் நவீனமான ராணுவத்துடனான போட்டியில் நமது ராணுவத்தை நிறுத்த விரும்புகிறோம். இதன் அடிப்படை நோக்கமே பாதுகாப்புத்துறை தன்னிறைவைப் பெறுவதுதான்.

நாம் 1 தரைப்படை, 1 வான்படை, 1 கடற்படையை பார்க்கிறோம். ஆனால் அவர்களுக்குள் கூட்டுப்பயிற்சி உண்டு அதன்படி நாம் அவர்களை 111 ஆக பார்க்கலாம்." இவ்வாறு பிரதமர் பேசினார்.


அசாமில் ராஜ்நாத் சிங்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாமின் தேஜ்பூரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது அமைச்சர் கூறுகையில், "எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் நிலவி வந்த பிரச்சினைகள் தொடர்பாக முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

நீண்ட காலமாக நடந்து வந்த ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமாக எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் சில பகுதிகளில் பிரச்சினை முடிவினை எட்டியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தினை எட்டியுள்ளோம். இது பெரிய அளவிலான முன்னேற்றம் தான்.

உங்களுடைய துணிச்சல் மற்றும் ஒழுக்கத்தினால்தான் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று நான் கூறுவேன். உங்களுடைய வீரத்தை உணர்ந்ததினால் தான் சீனாவுடனான பேச்சுவார்த்தை சாத்தியமானது என்று நான் நம்புகிறேன். ஒருமித்த கருத்தின் மூலம் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டுவதையே நாம் விரும்புகிறோம்.

நம் நண்பர்களை நாம் மாற்ற முடியும், அண்டை வீட்டாரை நம்மால் மாற்ற முடியாது என்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பய் கூறியதை நாம் மனதில் கொள்ள வேண்டும். நமது அண்டை நாட்டவருடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணவே விரும்புகிறோம். இது இந்தியாவின் தெளிவான கொள்கை.

ஆனால் சில நேரங்களில் சூழல் காரணமாக நமது எல்லைப் பாதுகாக்க நாம் சண்டையிட வேண்டியுள்ளது. நமது ஆயுத படைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதியை நிலை நாட்ட அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்" இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லைக்கட்டுப்பட்டு கோட்டில் இந்திய - சீன வீரர்கள் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 31, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.