Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஐக்கிய நாடுகள் சபையின் (UNDP) உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

 


  • அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதி

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் இதன் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐ.நா சபை பிரதிநிதியினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் எனவும் பிரதிநிதி உறுதியளித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்தும் இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மட்டுப்படுத்தியிருப்பது நிதித் துறையில் குறிப்பிடத்தக்க சவால்களுக்கு வழிவகுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியது. மேலும், தேசியப் பொருளாதாரத்தில் விவசாயத் துறை குறைந்த பிரதிநிதித்துவத்தைக் காட்டுவதும் இதற்கு காரணமாகிறது.

ஆசிய வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் விவசாய உற்பத்தித் திறன் மோசமான நிலையில் காணப்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலான விவசாயிகள் சிறிய அளவிலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை தமது பிரதான வருமான வழியாக கருதவில்லை எனவும் ஜனாதிபதி எடுத்துக்காட்டினார் . இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பேரம் பேசும் சக்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த உதவியாக உள்ள விவசாய சங்கங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்த உதவிச் செயலாளர் நாயகம், ஊழலைக் குறைப்பதில் முக்கிய கருவியாக டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து இன மற்றும் மத சமூகங்களையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான சீர்திருத்தங்கள் அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

நுண்கடன் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்துறையின் வட்டி விகிதங்கள் நியாயமாக இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதிக பெண்களை உள்வாங்குவதன் மூலம் நுண்நிதித் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மூலதனத்தைப் பாதுகாப்பதற்காக பெண் தொழில்முயற்சியாளர்கள் முன்வைக்கும் சிறந்த முன்மொழிவுகளுக்கு திறைசேரி உத்தரவாதங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

புதிய அரசாங்க சீர்திருத்தங்கள், ஊழலுக்கு எதிரான முயற்சிகள் மற்றும் பொருளாதாரம் மற்றும் பாராளுமன்றம் இரண்டிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்பாடு இந்த சந்திப்பின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, மூலோபாய ஈடுபாடு, டிஜிட்டல் மற்றும் புத்தாக்கக் குழுவின் தலைவர் பாதில் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் (UNDP) உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 15, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.