Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு!

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரச சேவையை வலுப்படுத்துவது மற்றும் அரச சேவைக்கான செலவை நிர்வகிப்பதன் அவசியம் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில், அரச சேவையில் காணப்படும் அத்தியாவசியமான 30,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இ்ங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் நேர்முகப் பரீட்சைகள் தாமதமாகக்கூடிய வெற்றிடங்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைந்த அரச சேவை மூலம் மனிதவளத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது குறித்தும் கவனச் செலுத்தப்பட்டது.

அநுராதபுரம் மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம், காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், “City Branding” முறையை பயன்படுத்தி அனுராதபுரத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் அனுராதபுரத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பதற்கான பெரும் சாத்தியங்கள் காணப்படுவதுடன், இலங்கையின் முதல் இராசதானி மற்றும் முதலாவது குளம் கட்டப்பட்ட இடம் என்ற வகையில் வெளிநாட்டவரைக் கவரும் வகையில் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

சமூக மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த சமூகத்தை உருவாக்க “Clean Sri lanka” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார நவரத்ன, கலாநிதி சேன நாணயக்கார, சட்டத்தரணி ஏ.ஏ. ஜீவந்த பாக்ய ஸ்ரீ ஹேரத், திலின தாருக சமரகோன், பி.டி.என். பலிஹேன, ரோஹன பண்டார, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, அனுராதபுரம் மாவட்டச் செயலாளர் கே. ஜி. ஆர். விமலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு! Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 26, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.