ஆட்சி கவிழ்ப்புக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்!
“ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எதிரணிகள் காத்திருக்கின்றன. எனினும், நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.” – என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ரணில் மற்றும் சஜித் ஆகியோர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென நினைத்தால் அது அவர்களது நிறைவேறாத கனவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய ரில்வின் சில்வா,
” இவ்வாண்டு டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என கபீர் ஹசீம் கூறுகின்றார். இவ்வாண்டு தேர்தலொன்று இல்லாத நிலையில் அவர் எவ்வாறு இந்த கருத்தினை வெளியிட்டார்?
வாய்ப்பொன்று கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றனர். அதில் இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவடையவில்லை.
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு மாத்திரமின்றி, அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மக்கள் எமக்கு வாக்களிப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது.” – எனவும் குறிப்பிட்டார்.
எமது ஆட்சி முற்று முழுதாக மக்களின் ஆணையையும் நம்பிக்கையையும் பெற்ற ஆட்சியாகும். எனவே எவருக்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மக்கள் இடமளிக்கப் போவதில்லை என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.
மே 6ஆம் திகதி தேர்தலின் பின்னர் நாம் அதனை உறுதிப்படுத்திக் காண்பிப்போம். நாம் இந்த நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம். தற்போது எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருப்பதைப் போன்று நாம் ஒருபோதும் பொய் கூறவில்லை.” எனவும் ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: