Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் புதல்வர் ஜோசப் பரராஜசிங்கம் டேவிட் 20 வருடங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்த நிலையில் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் சிவம்பாக்கியநாதன், பிரதி மேயர் டினேஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவுத்தூபியில் அவரின் மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மேயர், பிரதி மேயர் ஆகியோர் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

“மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி போராட்டத்தை நடத்தி வருகின்றது.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் முக்கிய சந்தேகநபராகப்   பிள்ளையான் நல்லாட்சிக்காலத்திலே கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த விடுதலை பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. தென்னிலங்கையில் கூட நீதித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் இருந்தது. ஆனால், சட்டமா அதிபர் திணைக்களம் அந்த வலக்கைத் தள்ளுபடி செய்து குற்றவாளிக்  கூண்டில் இருந்து பிள்ளையானை நீக்கியிருந்தார்கள்.

ஆனால், காலம் மாறியிருக்கின்றது. அந்தப் படுகொலையைச் செய்ததாகச்  சந்தேகிக்கப்படும் ராஜபக்ஷ – ரணில் விக்கிரமசிங்க அரசு தற்போது ஆட்சியில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீண்டும் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பிள்ளையான் கைதானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலா அல்லது திரிபொலியுடன் இணைந்து மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் உட்பட ஏனைய கொலைகளைப் பற்றியா என்பது நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனாலும், ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

இது தொடர்பான விடயங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஜோசப் பரராஜசிங்கத்தினரின் குடும்பத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். இங்கு மூடிமறைக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட பல படுகொலைகளை விசாரணை செய்ய வேண்டும்.

இரு தினங்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வந்தபோது அவர் எங்களிடம் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார் அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பத்து விடயங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தார்.

இதன்போது நாங்கள் முதலாவதாக ஜோசப் பரராஜசிங்கத்தின்  விசாரணையை மீள ஆரம்பிக்க வேண்டும், ரவிராஜ் படுகொலை, திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள், மாணர்கள் கடத்தப்பட்டமை, இறுதிப் போர்க் காலப் பகுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டுக் காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன்.

இதேபோன்று அனந்தி சசிதரனின் கணவரின் வழக்கு போன்ற பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தேன். நாங்கள் நீதிக்கான போராட்டத்தைக் கைவிடமாட்டோம்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் நீதி கோரிய போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னெடுக்கும் என்பதை அவரின் மகனுக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம்.” – என்றார்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு... Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 28, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.