காசாவை கைப்பற்ற 60 ஆயிரம் படையினர் அழைப்பு: இஸ்ரேலின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இராணுவ அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக, 60 ஆயிரம் அவசரகால படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில், இதுவரை 62 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காசாவின், 75 சதவீத பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பிணைக் கைதிகளை விடுவித்து, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டால், போர் நிறுத்தத்திற்கு தயார் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.
இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்தது. இதற்கிடையே காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
முந்தைய போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸ் ஒப்புக் கொண்டபடி பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை. இன்னமும், 50 பிணைக்கைதிகள் காசாவில் உள்ளனர்;.
காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.
அதேவேளை, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவால் இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் கடும் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: