Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நேபாளத்தில் 24 அமைச்சர்களுடன் இடைக்கால அரசு!

நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.

நேபாளம் முழுவதும் சமூக வலைதளங்களுக்கு அரசு கடந்த 4-ம் திகதி தடை விதித்தது. இதனால் மேலும் கோபம் அடைந்த இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

அதில் 75 பேர் உயிரிழந்தனர். 1,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைதொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றது.

நேபாளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப் பட்டது. பிரதமர் சர்மா ஒலி, மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதன்பிறகு, போராட்டக் குழுவினருடன் ராணுவ தளபதி அசோக் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.

இந்த சூழ்நிலையில், 2026 மார்ச் 5-ம் திகதி நேபாளத்தில் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இடைக்கால பிரதமர் சுசீலா தலைமையிலான நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதி ராம் சந்திரா கலைத்துள்ளார். செப்டம்பர் 12-ம் திகதி முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

ஆனால், இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம், ஜனநாயகத்துக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேபாளி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் நேபாள கம்யூனிச கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அதிபர் ராம் சந்திராவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்றுள்ள பிரதமர் சுசீலா, சிறிய அளவில் அமைச்சரவையை அமைக்க திட்டமிட்டுள்ளார்.

அதில், உள்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை உட்பட 24 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டதை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
ஜனநாயக மாற்றமானது அமைதியானதாகவும், பொறுப்புணர்வுடனும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

நீண்டகால கூட்டாளியாக, இந்த நேரத்தில் நேபாள மக்களை நாம் ஆதரிக்கின்றோம் என்று தனது எக்ஸ் தளத்தில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

நேபாளத்தில் 24 அமைச்சர்களுடன் இடைக்கால அரசு! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 15, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.