2025-10-07 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2025-10-07 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01.அரச துறையில் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட முகாமைத்துவத்தை உருவாக்குதல்.
தற்போதைய அரசின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு, அரச துறையில் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட முகாமைத்துவத்தை உருவாக்குதற்காக திறைசேரியின் திட்ட முகாமைத்துவ மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தினால் 22 நிரல் அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான 2025-2028 காலப்பகுதிக்கு அமைச்சு ரீதியான பெறுபேறுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அமைச்சுக்கும் நிரலொழுங்குக்கு உரிய பொறுப்புகளுக்கு இணங்கும் வகையில் தொடர்புடைய விடயப்பரப்பில் அபிவிருத்தி இலக்குகள் உரிய காலப்பகுதியில் அடைதல், அதன்மூலம் எதிர்பார்க்கும் அடைவுகள் மற்றும் நன்மைகளை தாமதமின்றி மக்களுக்கு வழங்குவதனை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார பிரிவுகளுக்கிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதுடன், அரச முதலீடுகள் தொடர்பில் மக்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்காக அமைச்சுக்களின் பெறுபேற்று சட்டகம் உதவியாக அமையும்.
அதற்கமைய, அரச துறையில் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட முகாமைத்துவத்தை உருவாக்குதல் மற்றும் ஒவ்வொரு அமைச்சின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டம், வரவுசெலவு செயன்முறையின் மூலோபாய கட்டங்களுக்கு அமைச்சு ரீதியான பெறுபேற்று சட்டகத்தை ஒருங்கிணைத்து, எதிர்பார்த்த இலக்குகளை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
02. இலங்கை மற்றும் மோல்டா குடியரசுகளுக்கு இடையிலான இருதரப்பு ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
தீவு இராச்சியங்கள் மற்றும் பொதுநலவாய மன்றத்தின் உறுப்பு நாடுகள் என்ற ரீதியில் இலங்கை மற்றும் மோல்டா குடியரசு சமுத்திரம் சார் செயற்பாடுகள், காலநிலை மாற்றம் மற்றும் பேண்தகு அபிவிருத்தி உள்ளிட்ட பரஸ்பரம் முக்கியத்துவமான விடயங்கள் தொடர்பில் பல்தரப்பு குழுமங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்கமைய அரசியல், பொருளாதார, முதலீடுகள், கொன்சியூலர் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பரம் அக்கறையுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பான கருத்துக்களை பரிமாற்றம் செய்வதற்காக இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் மோல்டா குடியரசின் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் இருதரப்பு ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
03. மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிச்செல்லல் வரி தொடர்பாக வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தை நீடித்தல்
2025-01-06 திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்துக்கு நிச்சயிக்கப்பட்ட நேரஅட்டவணைக்கமைய பயணங்களில் ஈடுபடும் விமான சேவைகளுக்கு வெளிச்செல்லல் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வரிச் சலுகையின் கீழ் சில விமான சேவைகள் ஏற்கனவே விமான நிலையத்துக்கு வரும் மற்றும் வெளியேறும் நிச்சயிக்கப்பட்ட விமான பயணங்களை கொண்டுள்ள சர்வதேச விமான பயணங்கள் அமுல்படுத்தியுள்ள அதேவேளை, சில விமான சேவைகள் குறித்த விமான நிலையத்துக்கு விமான பயணங்களை செயற்பாடுகளை இயக்குவதற்காக தமது ஆர்வங்களை வெளியிட்டுள்ளன.
மேற்குறித்த வெளியேறல் வரிச் சலுகையை தொடர்ந்தும் பேணுவதன் மூலம் போட்டியை அதிகரிப்பதன் ஊடாக குறித்த விமான நிலையத்துக்கு நிச்சயிக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகளை கவருதல் மற்றும் தற்போதுள்ள சர்வதேச விமானப் பயண செயற்பாடுகளை தொடர்ச்சியாக பேணலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய தற்போது செயற்படுத்தப்படும் வெளிச்செல்லல் வரி விடுவிப்பு காலத்தை 2027.06.26 திகதி வரை தொடர்ந்தும் நீடிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
04. மேல் மாகாண நகர திண்மக் கழிவு முகாமைததுவ பிரதான திட்டத்தை அமுல்படுத்துதல்
அபிவிருத்தி அடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும், இலங்கையிலும் நகர திண்மக் கழிவு முகாமைத்துவம் பல சவால்கள்; மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. குறித்த நிலைக்கு மிகவும் பயனுள்ள வகையில் தீர்வு காண்பதற்காக குறித்த நகர கழிவுகளை பாதுகாப்பாகவும், பேண்தகு மற்றும் சூழலுக்கு சாதகமான முறையிலும் சேகரித்து, தரம்பிரித்து, அகற்றுவதற்காக நகர கழிவு முகாமைத்துவ பிரதான திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2019-10-01 திகதி அமைச்சரவை அங்கீகரித்த தேசிய கழிவு முகாமைத்துவ கொள்கையையும் கருத்தில் கொண்டு மேல் மாகாண நகர திண்மக் கழிவு முகாமைத்துவ பிரதான திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றுக்கு இடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறித்த திட்டத்தின் மூலம் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் குறித்த பிரதான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேல் மாகாண நகர திண்மக் கழிவு முகாமைத்துவ பிரதான திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
05. இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம் மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அளவியல் தொடர்பான பெடரல் முகவர் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான உடன்படிக்கை
அளவையியல் மற்றும் உபகரண அளவீட்டுத் திருத்தங்கள் தொடர்பாக மிகவும் மேம்பட்ட மட்டத்திலுள்ள நிறுவனமான ரஷ்ய அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அளவியல் தொடர்பான பெடரல் முகவர் நிறுவனத்துக்கு உரிய 39,000 இற்கும் அதிகமான தேசிய தராதரங்கள் உள்ளன. இலங்கை கட்டளைகள் நிறுவனத்திடம் 4,500 அளவான தேசிய தராதரங்கள் உள்ளன.
அதற்கமைய ரஷ்யாவில் பயன்படுத்தப்படும் தராதரங்களை இலங்கையில் எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் தராதரங்களுக்காக பாவித்தல், இரண்டு நாடுகளுக்கும் இடையில் தராதரங்களை சமமப்படுத்துவதன் மூலம் வர்த்தக வசதிகளை வழங்கும் போது ரஷ்ய கூட்டரசாங்கத்துடன் நிலவும் தொழில்நுட்ப தடைகளை அகற்றுதல், இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்கு அளவையியல் மற்றும் உபகரண அளவீட்டுத் திருத்தத் துறைகளில் உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுதல்,
சர்வதேச சட்டங்கள், வழிகாட்டல்கள் மற்றும் தராதரங்களுக்கு ஏற்ற வகையில் தரப்படுத்தல் தொடர்பான ஒத்துழைப்புகளை விருத்தி செய்தல் போன்ற குறிக்கோள்களுடன் இலங்கை கட்டளைகள் நிறுவனம் மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அளவையியல் தொடர்பான பெடரல் முகவர் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
06. இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய வசதிகள் தொகுதியை அமைத்தல்.
இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய வசதிகள் தொகுதியை அமைப்பதற்காக பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக 2019.09.17 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், ஒன்பது விலைமனுதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், விலைமனு மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் குறைந்த விலைமனுதாரரான Sanken Construction (Private) Limited இற்கு குறித்த ஒப்பந்தத்தை 3,046.29 மில்லியன் ரூபாய்களுக்கு (பெறுமதி சேர் வரி உள்ளடங்காமல்) வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம்.
இயற்கை அனர்த்த நிலைமைகளால் தற்காலிக வீடுகளில் நீண்டகாலமாக வசித்து வருகின்ற 3,250 தோட்டக் குடும்பங்கள், பல படிமுறைகளுடன் கூடிய திட்டத்தின் கீழ் பாதுகாப்பான இடத்தில் மீண்டும் குடியேற்றும் நோக்கில் 'இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை' 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த காலப்பகுதியில் 1,400 புதிய வீட்டு அலகுகளை அமைத்து, பயனாளிக் குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாய்களாவதுடன், 2025 ஆம் ஆண்டில் 1,300 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனறாகலை போன்ற மாவட்டங்களில் தகைமை பெற்றுள்ள 495 பயனாளிக் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படாத எஞ்சிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை 2027.12.31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தல் மற்றும் இடைக்கால வரவு செலவு சட்டகத்தில் அதற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்வதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. ட்ரஸ்டுசுமெப் ஊசிமருந்து 440 மில்லிகிராம் (440அப) 20 மில்லிலீற்றர் (20அட) 28,000 ஊசிமருந்துக் குப்பிகள் (திரவத்துடனான) பெறுகை.
ஒருசில புற்றுநோய் வகைக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் ட்ரஸ்டுசுமெப் ஊசிமருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக ஐந்து விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்த விலைமனுதாரரான இலங்கையின், Cliniqon Biotech (Pvt) Ltd. (Manufacturer: AryoGen Pharmed, Iran) இற்கு 516.6 மில்லியன் ரூபாய் மொத்தத் தொகைக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. ஹியூமன் எல்பியூமின் சொலூசன் பிபீ/யூஎஸ்பீ/பீஏஎச் ஈயூஆர், 20% 50 மில்லிலீற்றர் போத்தல்கள் 400,000 இற்கான பெறுகை
குறைந்த குருதிக் கொள்ளளவு (Hypovolemia) மற்றும் குருதியில் குறைந்த எல்பியூமின் மட்டத்திற்கு மற்றும் சிறுநீரகம் செயலிழந்த மற்றும் ஈரல் அழற்சி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட ஊசிமருந்து 50 மில்லிலீற்றர் போத்தல்கள் 400,000 இற்கான பெறுகைக்கு சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 03 விலைமனுதாரர்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்த விலைமனுதாரரான சுவிட்சர்லாந்தின், TAKEDA PHARMACEUTICALS INTERNATIONAL AG (Part of Takeda Pharmaceutical Company Limited) (Manufacturer: TAKEDA Manufacturing Austria AG, Austria இற்கு 9.16 மில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. லயிபொசொமால் வகை எம்பொடெரிசின் பீ 50 மில்லிகிராம் ஊசிமருந்துக் குப்பிகள் 40,000 இற்கான பெறுகை
க்றிப்டொகொகல் மெனின்ஜய்டீஸ் மற்றும் அந்தரங்க லிஸ்மேனியாயிஸ் உள்ளிட்ட உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் பற்றீரியா தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்கும் போது, குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்புத் தொகுதியைக் கொண்டவர்களுக்குப் பயன்படுத்தும் மேற்குறிப்பிட்ட ஊசிமருந்துகள் 40,000 இற்கான பெறுகைக்கு சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக, 04 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்த விலைமனுதாரரான இந்தியாவின், டீhயசயவ ளுநசரஅள யனெ ஏயஉஉiநௌ டுiஅவைநன. (ஆயரெகயஉவரசநச: டீhயசயவ ளுநசரஅள யனெ ஏயஉஉiநௌ டுiஅவைநனஇ ஐனெயை) இற்கு 680,000 அமெரிக்க டொலர் தொகைக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 2025/26 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான பெறுகை.
2025/26 ஆம் ஆண்டுக்கான குறித்த 31 சிறைச்சாலை நிறுவனங்களுக்கு 11 உணவுப் பண்டங்களின் கீழ் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக விநியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் விலைமனுக்களைக் கோரியுள்ளது.
அதற்கமைய, கிடைக்கப்பெற்றுள்ள 945 விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைக்கமைய, 2025/26 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தங்களை 4,317 மில்லியன் ரூபாய் மொத்தத் தொகைக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 2026.01.01 தொடக்கம் 2026.04.30 வரையான காலப்பகுதியில் மெர்பன் வகை மசகு எண்ணெய்க் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை.
2026.01.01 தொடக்கம் 2026.04.30 வரை நான்கு மாத (04) காலப்பகுதிக்கான மெர்பன் வகை மசகு எண்ணெய்க் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக, களஞ்சியப்படுத்தப்பட்ட தாங்கிகளிலிருந்து விநியோகிக்கும் போதான செலுத்தல் முறைமை மற்றும் இலங்கை வங்கியால் வழங்கப்படும் கடன் பத்திரத்தின் மூலம் 30 நாட்களில் செலுத்தும் முறைமை போன்ற இரண்டு மாற்று முறைமைகளின் கீழ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன.
அதற்காக 06 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் மதிப்பீட்டின் பின்னர் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரையின் பிரகாரம், M/s BB Energy Asia Pte. Ltd இற்கு பெறுகையை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவுதல்
அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்நுழைவதால் அதன் நுழைவு வீதிகள் ஊடாக பாதை மாறுதல் போன்ற காரணங்களால் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுவதுடன், விமான நிலைய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அவ்வாறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை சீர்செய்வதற்காக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை), (தனியார்) கம்பனிக்கு ஏற்படுகின்ற செலவுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. அதனால், அவ்வாறான காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களை முற்கூட்டியே அடையாளங் கண்டு சரியான வகையில் முகாமைத்துவம் செய்து விமானப் பயணிகளின், விமான நிலையப் பணிக்குழாமினர் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும்,
விமான நிலைய நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைத்து தங்குதடையின்றிய விமான சேவைகளை பேணிச் செல்வதற்கும் இயலுமாகும் வகையில் அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விசேட வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 2025/26 பெரும்போக வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கான உர விநியோகத்திற்கான நிதியுதவி வழங்கல்.
2025/26 பெரும/போக வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கான உர விநியோகத்திற்கான நிதியுதவி வழங்குவதற்காக 33,500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2025/26 பெரும்போக செய்கைக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நெல் மற்றும் ஏனைய பயிர்களைப் பயிரிடும் மொத்த நில அளவைக் கருத்தில் கொண்டு உர விநியோகத்திற்கான நிதியுதவியை வழங்குவதற்காக மேலும் 05 பில்லியன் ரூபாய்கள் மேலதிகமாக ஒதுக்கீடு தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்;கமைய, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில் உர விநியோகத்திற்கான நிதியைச் செலுத்துவதற்காக 05 பில்லியன் ரூபாய்கள் மேலதிக நிதியொதுக்கீடு செய்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தற்காலிக உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர்களை நியமித்தல்.
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உயரிய சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஆணைக்குழுவுக்கே உரிய பணிக்குழாமினரை ஆணைக்குழுவுக்கு நியமிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்த சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச சேவையில், மாகாண அரச சேவையில், கணக்காய்வு சேவையில் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் ஏதேனுமொரு உத்தியோகத்தரை அல்லது தொழிலாளரை தற்காலிக அடிப்படையில் குறித்த ஆணைக்குழுவுக்கு ஆட்சேர்ப்பதற்கான ஏற்பாடுகளும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கான நிரந்தர பணியாளர்களை நியமிக்கும் வரைக்கும், குறித்த ஆணைக்குழுவின் பணிகளை வினைத்திறனாக மேற்கொண்டு செல்வதற்காக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் 26(4), 26(5), 26(6), 26(8) மற்றும் 26(9) பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய தற்காலிக அடிப்படையில் அரச சேவையில், பொலிஸ் சேவையில், கணக்காய்வு சேவையில் மற்றும் மாகாண அரச சேவை உள்ளிட்ட அரச கூட்டுத்தாபனங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களில் பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. திறைசேரி பிரதி செயலாளர் பதவிக்கு நியமித்தல்
திறைசேரி பிரதி செயலாளராக கடமையாற்றிய எச்.சீ.டீ.எல்.சில்வா அவர்கள் 2025.10.06 அன்று தொடக்கம் 60 ஆவது வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள குறித்த திறைசேரி பிரதி செயலாளர் பதவிக்கு தற்போது திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றுகின்ற இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர அதிகாரியான ஏ.என்.ஹப்புகல அவர்களை நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: