முன்பள்ளி ஆசிரியர்களை விழிப்புணர்வூட்டும் விதமாக அமைந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக சர்வதேச சிறுவர் தின நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால், சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்
“உலகை வழி நடாத்த சிறுவர்களை அன்பால் போஷியுங்கள் “எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களை பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபங்கு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து 125 முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கேற்புடன் இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபாகம் குறித்தும், பிள்ளைகள் தொடர்பாக தற்போதைய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதனால் முன்பள்ளிப் பிள்ளைகள் மற்றும் வெளிவாரி சமூகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற வன்முறைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் பிள்ளைகளுக்குத் தேவையான உதவிச் சேவைகளை வழங்குவதில் முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல், முன்பள்ளி ஆசிரியர்களிடையே பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல், பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளை அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் முன்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பல விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் வளவாளர்களாக சமூக உளவள மாவட்ட உத்தியோகத்தர் ஏ.பிரபாகர், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ.மதிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறார்களை சமூகமயப்படுத்தும் ஒரு பிரதான இடமாக முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: