Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரதமரின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

"உலகை வெற்றி பெற - எம்மை அன்போடு அரவணையுங்கள்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


ஒரு நாட்டின் உயிர்நாடியாக இருப்பது சிறுவர்களே. அவர்களுக்குப் பரிபூரணமான சிறுவர் உலகை உருவாக்குவது நமது கடமையாகும்.


நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 31% வீதமான சிறுவர் சமுதாயத்தைக் கொண்ட நாடு என்ற வகையில், சிறுவர்கள் பற்றிய ஒரு முக்கியமான பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.


அந்தப் பொறுப்பை உரிய விதத்தில் உணர்ந்திருக்கும் எமது அரசாங்கம், "பாதுகாப்பான சிறுவர் உலகம் - படைப்பாற்றல் மிக்க எதிர்காலச் சந்ததி" என்ற நோக்குடன், சிறுவர்களின் பாதுகாப்பிற்குத் தேவையான வளங்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம் சிறுவர்களின் பிள்ளைப்பருவத்தை அவர்களுக்கு உரித்தாக்குவதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றோம்.


சிறுவர்கள் எத்தகைய பின்னணியில், எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும், "அனைத்துச் சிறுவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி" எந்தவொரு சிறுவரையும் கைவிடாமல், அவர்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் உளவியல் ரீதியாகப் பாதுகாப்பான அதேவேளை சிறுவர் நேயச் சூழலில் அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அறிவால் அவர்களைப் பூரணப்படுத்துவதற்கான பணியை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றது.


சுதந்திரமான அதே நேரம் அமைதியான சூழலில் வாழும் கருணைமிக்க சிறுவர்களை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்காக சிறுவயது தொழிலாளர்களைச் சுரண்டுதல், சிறுவர் துஷ்பிரயோகம், பாதகமான அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றை ஒழிப்பதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.


அத்தோடு இன்றைய தினத்தில் இடம் பெறும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, அனைத்து முதியோர்களுக்கும் ஆரோக்கியமும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன். நமது நாட்டின் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, உளவியல் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் அக்கறை செலுத்தி, அவர்களுக்குக் கௌரவமான சமூக வாழ்க்கையை வாழ்வதற்கு உகந்த சூழலை அரசாங்கம் உருவாக்கி வருகிறது என்பதையும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.


முதியோரின் பொருளாதாரப் பாதுகாப்பையும், அவர்களது பராமரிப்பையும் தனது கடமையாகக் கொண்டிருக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும், அப் பணிகளை முன்னெடுத்து வரும் நிறுவனங்களுக்கும் பக்கபலமாக இருப்பதோடு, அடைக்கலம் தேவைப்படும் முதியோருக்கு அடைக்கலம் வழங்கும் பொறுப்பிற்கும் முன்னுரிமை அளிப்பது அரசாங்கம் என்ற வகையில் எமது கடமையாகும்.


சிறுவர்களுக்கு முழுமையானதொரு சிறுவர் உலகையும், முதியவர்களுக்குக் கௌரவமான சமூக வாழ்க்கையையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய "வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும்" உருவாக்க நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.


கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு
2025 அக்டோபர் 01


பிரதமரின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 01, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.