கேள்வி, பார்வை மற்றும் இருதயம் பற்றி புனித அல்குர்ஆன் கூறும் முக்கிய செய்தி என்ன?
இக்கட்டுரையின் தலைப்பினுள் நுழைவதற்கு முன்னர், ஈமான் சம்பந்தப்பட்ட சில விடயங்களை நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.
அல்லாஹுத்தஆலா நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய சில அற்புதங்களில் (முஃஜிஸாத்) மிக சிரேஷ்டமானது அல்குர்ஆன் ஆகும். முன்பு அருளப்பட்ட வேதங்களைப்போலன்றி, உலக முடிவு வரை மனிதனுக்குத் தேவையான முழுமையான வழிகாட்டல்களை அல்லாஹுத்தஆலா, எழுத வாசிக்கத்தெரியாத, எந்த ஆசானிடமும் கல்வி படித்திராத, உண்மை பேசுபவர், நம்பிக்கைக்குரியவர் என அக்கால மக்களினால் அழைக்கப்பட்ட முகம்மது நபி (ஸல்) அவர்களினூடாக இவ்வுலகிற்கு அருளினான்.
“இவ்வேதத்தை நாமே இறக்கி வைத்தோம்,மேலும் நாமே இதைப் பாதுகாப்போம்” என அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலேயே உத்தரவாதப்
படுத்துகின்றான். முன்னைய வேதங்களுக்கு இத்தகைய உத்தரவாதம் வழங்கப்படவில்லை. அவற்றை மனிதர்கள் பின்பு திருத்தம் செய்தது மட்டுமல்லாமல் சில பகுதிகளை மறைத்தும் விட்டனர். ஆனால் அல்குர்ஆன் எவ்வாறு இறக்கி வைக்கப்பட்டதோ, அதே வடிவத்திலேயே ஒரு அட்சரமும் மாறாமல், அல்லாஹுத்தஆலா அற்புதமாக அதனைப் பாதுகாத்துள்ளான்.
கோடிக்கணக்கான மக்கள் அல்குர்ஆனை ஓதுகின்றனர். மில்லியன் கணக்கானோர் அதனை மனனம் செய்துள்ளனர். யாராவது விஷமிகளால் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டால் கூட அது உடனடியாக வெளிப்பட்டுவிடும். மனித வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் அல்குர்ஆன் பேசியிருக்கின்றது. அதுபோலவே, அல்லாஹ்வின் நாட்டப்படி நபி (ஸல்) அவர்களினூடாக வெளியாகிய ஹதீஸ்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை நடைமுறை பற்றிய விபரங்கள் யாவும் மிகத் துல்லியமாகவும் ஆதாரபூர்வமாகவும் பதியப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் மனிதர்களால் பல கோட்பாடுகள், கொள்கைகள், கண்டுபிடிப்புக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆனால் காலப்போக்கில் அவற்றில் பல பிழையானவை அல்லது காலத்துக்கு ஒவ்வாதவை என்று மங்கி மறைந்து போவதை நாம் காண்கின்றோம். ஆனால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அல்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றில் எவ்வித தவறையும் அல்லது முரண்பாட்டையும் மனிதனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக அவற்றில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் உண்மையானவை, சரியானவை, அற்புதமானவை, மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துக்கொண்டே வருகின்றன.
சத்தியமான ஒரு வேதமும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் நம் கையில் இருக்கின்றன என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். “அவர்கள் இந்த அல்குர்ஆனை சிந்திக்கமாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (4:82) என்ற இறைவசனம் இதனை உறுதிப்படுத்துகின்றது. நவீன கண்டுபிடிப்புக்களும் ஆராய்ச்சிகளும் செய்யப்படும் இக்காலத்திலும் அல்குர்ஆனும் ஹதீஸ்களும் பொருத்தமானவையா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கும் பதில் இருக்கின்றது.
என்றும் நிலைத்திருப்பவனும், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி முற்றிலும் அறிந்தவனுமாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல்குர்ஆனிலும், மேலும் நபி (ஸல்) அவர்களினூடாக வெளியாகிய ஹதீஸ்களிலும், உலக முடிவு வரை எவ்வித மாற்றத்தையோ, திருத்தத்தையோ செய்வதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. அத்தகைய அவசியமும் ஏற்படாது.
மாறாக நவீன கண்டுபிடிப்புக்கள் அல்லது புதிய நிலைமைகள் ஏற்படும் போது, அவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவையா என கேட்கப்பட்டால், அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் வெளிச்சத்தில் இஜ்மா, கியாஸ் எனும் கோட்பாடுகளின்படி தகுதிவாய்ந்த உலமாக்களினால் மார்க்கத்தீர்ப்பு வெளியிட இஸ்லாம் அனுமதியளித்திருக்கின்றது. எனவே இஸ்லாம் எந்தவொரு நவீன காலத்திலும் “காலத்துக்கு ஒவ்வாதது” என்று கூறப்பட முடியாதது என்பது சத்தியமான உண்மையாகும்.
அல்குர்ஆனின் மகத்துவம் பற்றி மேற்கண்ட பந்தி எழுதப்பட்டதற்கான காரணம், அவ்விறை வேதத்தின் பெறுமதியை நம் மனதில் பதிய வைப்பதற்காகவே. “பயபக்தியுடையோருக்கு இது நேர் வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோரென்றால், மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள்” (2:3). “இஸ்லாமிய மார்க்கத்தில் பூரணமாக நுழைந்து விடுங்கள்” என அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் மேலும் கூறுகின்றான்.
இஸ்லாம் பூரண வாழ்க்கைத் திட்டமாக எமக்கு அருளப்பட்டிருக்கின்றது. எனவே வேறு அல்குர்ஆனுக்கு முரணான எந்த முன்மாதிரியையும், வேறு எவரின் போதனையையும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஈருலக வெற்றியையும் அடைந்து கொள்ள இலகுவான ஒரே வழியைப் பின்வருமாறு அல்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.
“ஆண் அல்லது பெண் - அவர் விசுவாசம் கொண்டவராக இருக்க, யார் நற்செயல் செய்தாரோ, நிச்சயமாக அவரை நல்ல வாழ்க்கையாக (ஹயாத்துன் தையிபா - மணமான வாழ்க்கை) வாழச்செய்வோம். இன்னும் நிச்சயமாக, அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றில் மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம்” (16:97). இந்த நல்வாழ்வுக்கு மாற்றமாக வாழத் தலைப்படுவதைப்பற்றி பின்வருமாறு அல்லாஹ் எச்சரிக்கிறான்.
“மேலும் எவர் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கின்றது. மேலும் மறுமை நாளில் நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். (அது சமயம்) அவன், ‘என் இரட்சகனே! ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்க்கின்றவனாக இருந்தேனே’ என்று கேட்பான். (அதற்கு) ‘அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன; நீ அவற்றை மறந்துவிட்டாய். (நீ மறந்த) அவ்வாறே இன்றைய தினம் நீயும் (நம் அருளிலிருந்து) மறக்கப்படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான்” (20:124-126).
எனவே, மணமான வாழ்க்கை அல்லது நெருக்கடியான வாழ்க்கை என்பவற்றில் ஒன்றைத் தெரிவுசெய்யும் சந்தர்ப்பத்தை அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கியுள்ளான். அல்லாஹுத்தஆலா வாக்கு மாறாதவன். நம்மைச் சுற்றி என்ன நிலைமை இருந்தாலும், எமது நாட்டில் அல்லது உலகில் எத்தகைய நெருக்கடியான நிலை காணப்பட்டாலும், தன்னை ஈமான் கொண்டு நற்செயல் செய்வோருக்கு, நிம்மதியான மணமான வாழ்க்கையை வழங்குவதற்கு அல்லாஹ் சக்தி பெற்றவன்.
இத்தகைய பின்புலத்தில் தான், கேள்வி, பார்வை மற்றும் இருதயம் பற்றி அல்குர்ஆன் என்ன கூறியிருக்கின்றது என்பதை நாம் பார்ப்போம்:
அல் முல்க் (67:23)
(நபியே) நீர் கூறுவீராக (ரஹ்மானாகிய) அவன் எத்தகையவனென்றால், உங்களை அவன் (ஆரம்பமாக) உற்பத்தி செய்து உங்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் அவன் ஆக்கினான். (இத்தகு பேரருட்களைச் செய்த அவனுக்கு) நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
அஸ்ஸஜ்தா (32:9)
இன்னும் உங்களுக்கு செவிப்புலனையும், பார்வை(ப்புலன்)களையும், இதயங்களையும் அவனே அமைத்தான். (இவ்வாறிருந்தும்) நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
அல்முஃமினூன் (23:78)
இன்னும் (அல்லாஹ்வாகிய) அவன் எத்தகையவ னென்றால் உங்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் உண்டாக்கினான். (இவ்வாறிருந்தும் அவனுக்கு) நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
பனீ இஸ்ராயீல் (17:36)
(நபியே) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின்தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப்பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.
அத்தஹ்ரு (76:2-4)
நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நாம் சோதிப்பதற்கு நாடியவர்களாக அவனைப் படைத்தோம். எனவே செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை நாம் ஆக்கினோம். நிச்சயமாக நாம் அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத் தெளிவு செய்தோம். (அதைப் பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றியற்ற (நிராகரிப்ப)வனாக இருக்கலாம். நிராகரிப்போருக்கு சங்கிலிகளையும், விலங்குகளையும் (ஜுவாலை விட்டு எரியும்) நரகத்தையும் நிச்சயமாக நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
ஹாமீம் ஸஜ்தா (41:20-25)
“இறுதியாக (நரகமாகிய) அதன்பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்களானால், (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களது செவியும் அவர்களது பார்வைகளும் அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.”
“அ(தற்க)வர்கள் தங்களின் தோல்களிடம் ‘எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?’ என்றும் கேட்பார்கள். அதற்கு அவைகள், ‘ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்தவனாகிய அல்லாஹ்தான் எங்களைப் பேச வைத்தான். அவன் தான் உங்களை முதல் தடவையும் படைத்தான், (இறந்த பின்னரும்) நீங்கள் அவனிடமே திருப்பபட்டிருக்கின்றீர்கள்’ என்று கூறும்.
“உங்களுடைய செவிப்புலனும், உங்களுடைய பார்வைகளும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கெதிராக சாட்சியங்கூறாமலிருக்க நீங்கள் (உங்களுடைய செயல்களை அவைகளுக்கு) மறைத்துக்கொள்ளக் கூடியவர்களாக நீங்கள் இருந்திருக்கவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் இருந்து அநேகமானவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள்.” அதுதான் உங்கள் இரட்சகனைப்பற்றி நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்களுடைய (தீய) எண்ணமாகும். அது உங்களை அழித்துவிட்டது. ஆதலால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள்” (என்றும் அவை கூறும்).
பின்னர் அவர்கள் பொறுத்துக்கொள்வார்களானால், அவர்கள் தங்குமிடம் நரகம் தான், இன்னும் அவர்கள் (நற்செயல்கள் செய்து அல்லாஹ்வைத்) திருப்திப்படுத்தத் தேடினால், (அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் எச்செயலையும் செய்ய) அவர்கள் சிரமப்படுத்தப்படுபவர்களில் உள்ளவர்களல்லர்.
மேலும், நாம் அவர்களுக்கு (ஷைத்தான்களிலிருந்து) தோழர்களை இணைத்துவிட்டோம். ஆகவே, (அத்தோழர்கள்) அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்கு பின்னிருப்பதையும் அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்தார்கள். இன்னும், இவர்களுக்கு முன் சென்று போன ஜின்கள், மனிதர்கள் ஆகிய சமூகத்தவர்களுடன் நம்முடைய (வேதனையின்) வாக்கு இவர்களின் மீது உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (யாவரும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகி விட்டனர்.
வெகு அற்புதமாக, ஆச்சரியமாக, வல்லவன் அல்லாஹுத்தஆலா, கேள்வி, பார்வை ஆகியன பற்றி திரும்பத்திரும்ப மனிதர்களுக்குத் தேவையான அத்தனை உபதேசங்களையும் மேற்கண்ட வசனங்களில் தெளிவாக வழங்கியுள்ளான். கேள்வி, பார்வை, நுகர்தல், ஸ்பரிசம், நாவின் சுவை ஆகிய ஐம்புலன்களில், கேள்வி, பார்வை என்பன சிரேஷ்டமானவை. ஒரு மனிதன் எதனைப் பார்க்கிறானோ, கேட்கிறானோ அவைதான் அவனது இதயத்தை நிரப்புகின்றன. இதயத்தில் தோன்றும் சிந்தனைகள் மனிதனை ஆட்கொண்டு அவனது செயல்களை வெளியாக்குகின்றன.
அல்லாஹுத்தஆலா எண்ணிலடங்காத அருட்கொடைகளை (நிஃமத்துக்களை) மனிதனுக்கு வழங்கியுள்ளான். ஆனால் ஒரு முஃமின் தான் விரும்பியவாறு இந்த அருட்கொடைகளைப் பயன்படுத்த முடியாது. அதற்கு சில வரையறைகளை அல்லாஹ் விதித்துள்ளான். மனிதனைப் படைத்தவனாகிய அல்லாஹுத்தஆலா, மனிதனின் இயல்புகளை முற்றிலும் அறிந்தவனாக உள்ளான். தான் கொடுத்த நிஃமத்துக்களை மனிதன் எப்படிப் பயன்படுத்தி உலகில் வாழ வேண்டுமென்பதை வழிகாட்டியுமுள்ளான்.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, அவற்றை அனுபவிப்பதுதான் மனிதன் அந்த நிஃமத்துக்களுக்குச் செய்யும் நன்றியாகும். அவ்வாறு நன்றியுடன் நடந்து கொள்ளும் போது, அந்த நிஃமத்துக்களில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக அல்லாஹ் அல்குர்ஆனில் வாக்களித்திருக்கிறான். அதற்கு மாற்றமாக, நன்றி கெட்ட முறையில் நிஃமத்துக்களைப் பயன்படுத்தி மாறு செய்யும் போது, அல்லாஹ்வின் பிடி கடுமையானது என அல்குர்ஆன் எச்சரிக்கை செய்கின்றது.
மேலும் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, எமது உடலுறுப்புக்களையும் அதற்கான நன்றி செலுத்துவதைப் பற்றியும் கேள்வி, பார்வை மற்றும் இருதயம் ஆகியவற்றை முதன்மைப்படுத்திப் பேசியது போன்று ஏனைய உடலுறுப்புகளின் பயன்பாடு பற்றி அல்குர்ஆன் பேசவில்லை. இதிலிருந்து இந்த மூன்று நிஃமத்துக்கள் பற்றிய முக்கியத்துவம் நமக்குத் தெளிவாகின்றது.
கேள்வி, பார்வை ஆகியவற்றைப் பேணுவதில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சவாலைப் பற்றி கட்டாயமாகப் பேசியாக வேண்டும். ஆம்! அதுதான் நவீன கைத்தொலைபேசி. சில காலங்களுக்கு முன்னர் இக்கருவி நம் கையில் இருக்கவில்லை. ஆனால் தற்போது ஸ்மார்ட் ரக தொலைபேசி இல்லாமல் ஒருவர் இயங்க முடியாது என்று கூறுமளவிற்கு அது இவ்வுலகை ஆக்கிரமித்துள்ளது. இதன் தீங்கு பற்றி நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
ஏனைய சமூகத்தினர் போலன்றி, முஸ்லிம்கள் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் இதனைப் பற்றி தெளிவாகவும், வெளிப்படையாகவும் பேசியாக வேண்டும். அல்லாஹுத்தஆலாவும் அவனது நபியும் எதனையும் பேச வெட்கப்படவில்லை. உதாரணமாக, அல்குர்ஆன் வசனம் (24:30) பின்வருமாறு கூறுகின்றது: “(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்.
அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்”. இதே போன்று ஒரு ஹதீஸில் “எவர் தன் இரு தாடைகளுக்கும் இரு தொடைகளுக்கும் இடையிலுள்ள உறுப்புகளுக்கு (நாவு, மர்மஸ்தானத்தை தவறாக உபயோகிக்காமலிருக்க) பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ, அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யுமாறு ஷைத்தானால் தூண்டப்பட்டு பாவம் செய்த போது மனிதனுக்குக் கிடைத்த முதல் தண்டனை, அவன் நிர்வாணமாக்கப்பட்டதாகும்.
அதே வழியில், நிர்வாண உலகொன்றை, திரை மறைவில் நவீன தொலைபேசி வடிவில் ஏற்படுத்துவதில் ஷைத்தான் வெற்றி கண்டுள்ளான். பலவீனமான மனிதன், ஷைத்தானின் இந்த சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டுள்ளான் என்பதே உண்மையாகும். இத்தகைய ஒரு கருவியை வைத்திருப்பவர்களில் நூறு பேரில் ஒருவர் கூட சபலத்துக்கு ஆளாகாமல், தனிமையிலும் தக்வாவைப் பேண முடியுமாவென்பது சந்தேகமான ஒன்று.
அல்குர்ஆன் வசனம் (24:21) இங்கு கவனிக்கத்தக்கது: “விசுவாசம் கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். எவன் ஷைத்தானுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றுகின்றானோ, அவன் மானக்கேடானதைக் கொண்டும், வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான். இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே ஒருபோதும் பரிசுத்தமாக முடியாது. எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தமாக்குகின்றான். மேலும் அல்லாஹ் செவியேற்கின்றவன். நன்கறிகிறவன்”.
கைத்தொலைபேசிப் பாவனையின் தீங்குகள் பற்றி வெளிப்படையாகப் பேசப்படாவிடினும், நம்மைச் சுற்றி நடப்பவை பற்றி பின்வரும் உதாரணங்கள் வெளிப்படுத்துபவையாக உள்ளன:
1. கடையொன்றில் வேலை செய்யும் எனது நண்பர், தனது சக ஊழியர் ஒருவர் நடுநிசியில் எழுந்து உட்கார்ந்து படுக்கை விரிப்பினுள் தன்னை முழுமையாக மூடிய வண்ணம் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றார்.
2. O/L படிக்கின்ற தனது பேரன், இரவில் மிக நீண்ட நேரம் தனது அறையில் தொலைபேசியினைப் பார்க்கின்றான் என்று இன்னொருவர் முறையிடுகின்றார்.
3. தனது மகளுக்கு கைத்தொலைபேசியினை ஒருபோதும் வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று நினைத்த ஒருவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் கல்வித்திட்டத்தின் கீழ், தான் விரும்பாத நிலையிலும் அதனை வாங்கிக்கொடுக்க வேண்டியேற்பட்டது என வருத்தம் தெரிவித்த போது, வானொலியில் பேசிய பெண் விரிவுரையாளர், கைத்தொலைபேசியுடன் தக்வாவைப் பற்றிய உபதேசத்தையும் கையளியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.
4. வானொலியில் கேட்டது : – நன்மை செய்கின்ற பலர் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுகின்ற வேளையில், இன்னும் சிலர் கைத்தொலைபேசியில் காலத்தைக் கழித்துவிட்டு உறங்கச் செல்கின்றனர்.
5. வானொலியில் கேட்டது : – பலர் தஹஜ்ஜூத் தொழுகின்றனர், அவ்வல் ஜமாஅத்தோடு ஐவேளையும் தொழுகின்றனர். ஆனால் அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவரைப் போன்று கைத்தொலைபேசியில் ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதற்கு அடிமைப்பட்டிருக்கின்றனர்.
6. வத்திக்கானில் இருந்து பரிசுத்த பாப்பரசர் அண்மையில் பேசும் பொழுது, பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் ஆபாச இணையத்தளங்களைப் பார்ப்பதாகவும் இந்தச் செயல் அவர்களின் இதயத்தில் தீய சிந்தனைகளை உருவாக்குவதன் மூலம் கெட்ட செயற்பாடுகள் வெளிப்படும் என்பதால், உடனடியாக அத்தகைய இணையத்தளங்களைப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென உபதேசிக்கின்றார்.
7. தொலைபேசியில் நாம் பார்க்கும் தீய காட்சிகளை நமது உள்ளம் படம் பிடித்து வைத்துக்கொண்டிருக்க, ஷைத்தான் நாம் தொழும் போது அதனை வெளிப்படுத்தி, தொழுகையினை முழுமையாக சிதைத்து விடுகின்றான் என பிரபல உலமா ஒருவர் கூறுகின்றார்.
8. ஆபாச இணையத்தளங்களைத் தேடுவதில் சில வருடங்களுக்கு முன்பு, இலங்கை தொடராக இரண்டு வருடங்கள் உலகமட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தது. இந்த முஸீபத்தின் காரணமாகத்தான் வறுமையான உலக நாடுகளின் பட்டியலில் தற்போது எமது நாடு முன்னிலையில் உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது!
Q
ஏற்கனவே குறிப்பிட்டவாறு, முஸ்லிம்கள் தமது இம்மை, மறுமையினைப் பாதிக்கும் இந்த விடயத்தினை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் எமது செயல்கள் யாவற்றையும் எம்மைப் படைத்த அல்லாஹுத்தஆலா கேட்பவனாக, பார்ப்பவனாக இருக்கின்றான். அனைத்து செயல்களும் பதியப்படுகின்றன. எமது அணுவளவு நன்மையும், தீமையும் மறுமை நாளில் வெளிப்படுத்தப்படுமென அல்குர்ஆன் நம்மை எச்சரிக்கின்றது.
எனவே தீர்க்கமான முடிவொன்றை உடன் எடுக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஏனெனில் மௌத்து எப்போது ஏற்படுமென எவரும் கூற இயலாது. பின்வரும் குர்ஆன் வசனங்கள் இங்கு கவனிக்கத்தக்கன:
நிச்சயமாக (தங்கள் இரட்சகனைப் பார்க்காதிருந்தும்) மறைவில் தங்கள் இரட்சகனைப் பயப்படுகின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்கு மன்னிப்பும் பெருங்கூலியுமுண்டு. (67:12)
“இன்னும் நீ அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்!” என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) கௌரவம் பாவத்தை(ச் செய்வது) கொண்டே அவனைப் பிடித்(திழுத்)துக் கொள்கின்றது. ஆகவே அவனுக்கு நரகமே போதுமானது; இன்னும் நிச்சயமாக தங்குமிடத்தில் அது மிகக் கெட்டது. (2:206)
(குறிப்பு – தனது கௌரவத்தினை, சமூக அந்தஸ்தினைப் பேணுவதற்காக மற்றும் “நாகரீகம் தெரியாதவன்” என பிறரால் கேலி செய்யப்படுவதைப் பயந்து பாவம் செய்யத்துணியும் மனிதனைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுவது, தற்காலத்துக்கு மிகப் பொருத்தமானது.)
இன்னும் அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடிப்பெறுவதற்காக தன்னை விற்றுவிடக் கூடியவர்களும் மனிதர்களில் இருக்கின்றனர். மேலும் அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள் மீது மிகவும் இரக்கம் காட்டுபவன். (2:207)
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்துவிட்டால் அல்லது (ஏதும் பாவமிழைத்து) தங்களுக்குத் தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். இன்னும் (அவனிடமே) தங்கள் பாவங்களுக்காக மன்னிக்கத் தேடுவார்கள் (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்). அல்லாஹ்வைத் தவிர (இத்தகையோரின்) குற்றங்களை மன்னிப்பவனும் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை(த் தவறென்று) அவர்கள் அறிந்துகொண்டே (அதில்) நிலைத்திருக்கவுமாட்டார்கள் (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்). (3:135)
ஆகவே (இதனை ஒதுக்கிவிட்டு) நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்? இது அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமேயன்றி வேறில்லை. உங்களில் (நேர்வழியில்) நிலைத்திருக்க நாடுகின்றவருக்கு (இது ஒரு அறிவுரையாகும்) இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள். (81:26-29)
நிச்சயமாக இது (சத்திய, அசத்தியத்தைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும். இன்னும் இது (வீண்) பரிகாசமன்று. (86:13,14)
நபி (ஸல்) அவர்கள், தஸ்பீஹ் செய்வது பற்றிய ஹதீஸ் ஒன்றில், “அவைகளை விரல்களால் எண்ணிக் கொள்ளுங்கள். ஏனெனில் விரல்கள் விசாரிக்கப்படுபவையாகவும் பேசவைக்கப்படுபவையாகவும் இருக்கின்றன ” என்று கூறினார்கள்.
சுப்ஹானல்லாஹ்! எத்தனை அற்புதமான வசனங்கள். நம்மை வழிநடத்த இவையே போதுமானவை.
ஏற்கனவே சூறா ஹாமீம் ஸஜ்தா (41:20-24) இல் “ஷைத்தான்கள் அவர்களுக்கு முன்னிருப்பதையும் பின்னிருப்பதையும் அழகாக்கிக் காண்பிக்கின்றார்கள்” என்று கூறப்பட்டது போன்று, நவீன கைத்தொலைபேசியின் சேவைகள் நாளாந்தம் விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டே (Value addition) வருகின்றன.
படம் பிடிக்கும் வசதி, வீடியோ பண்ணுதல், இலவசமாக உலகெங்கும் பேசுதல், தகவல்களைப் பெறுதல், கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல், அலுவலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே சேவைகளைப் பெறுதல், கொடுப்பனவுகளைச் செலுத்துதல், உலகம் பூராகவும் இருந்து மருத்துவ மற்றும் ஏனைய தகவல்களைப் பெற்றுக் கொள்ளல் என்பன இவற்றிற் சிலவாகும்.
இவ்வுலகம் கவர்ச்சியாக்கப்பட்டு, எவர் நற்செயல்கள் செய்கின்றார் என்று பரீட்சிக்கப்படுகின்றதோ, அதே போன்று, விரிவடைந்து கொண்டே செல்லும் பிரயோசனங்களைக் கொண்டதாகத் தோன்றும், அதே வேளை, 90 வீதமானவர்களினால் தீய வழியில் பயன்படுத்தப்படுகின்ற கைத்தொலைபேசியை நம் கையில் கொடுத்து, அல்லாஹுத்தஆலா நம்மை சோதிக்கின்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் எத்தகைய தக்வா உடையவரையும் பாவத்தில் வீழ்த்தி நரகில் தள்ளிவிடக்கூடிய ஒரு கருவி இது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தே ஆக வேண்டும்.
“நவீன தஜ்ஜால்” என்றும் சிலர் இதைக் கூறுகின்றனர். நம்மையும் நமது குடும்பத்தினரையும் ஏனையோரையும் இதன் தீங்கிலிருந்து நாம் பாதுகாத்தே ஆக வேண்டும். அல்லாஹுத்தஆலா, கேள்வி, பார்வை பற்றி இத்தனை வசனங்களிலும் மனிதனை எச்சரித்திருப்பது, நம் கண்களைத் திறக்க வேண்டும். எனவே நாம் அவனுக்கு நன்றியுடையவர்களாக வாழ்வோம். இக்கருவியின் பாவனையிலிருந்து முற்றாக விலகுவோம்.
ஏனையோரையும் விலக்குவோம். மிக அத்தியவசியமான தேவைகளுக்காகpp இதனைப் பாவிப்போர் அவதானமாக இருப்போம். “கண்ணிமைக்கும் நேரத்திற்குக் கூட என்னை எனது நப்ஸின் பக்கம் ஒப்படைத்து விடாதே” என்று அல்லாஹுத்தஆலாவிடம் பிரார்த்திக்குமாறு நபி (ஸல்) அவர்கள் தமது மகளாருக்கு உபதேசித்தமையை கவனத்திற் கொள்வோம்.
“(மனிதர்களே!) அல்லாஹ்வோ சாந்தி அளிக்கக்கூடிய (சுவன) வீட்டின்பால் (உங்களை) அழைக்கின்றான். மேலும் அவன் நாடியவர்களை (அதற்குரிய) நேரான வழியின்பால் செலுத்துகின்றான்” (10:25) என்ற அல்குர்ஆன் வசனத்தினூடாக அல்லாஹ் நம்மைpp அன்பாக அழைக்கின்றான். நாம் தயாராகுவோம், அவனை நெருங்குவோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்.
கட்டுரையாசிரியரின் மீள் பிரசுரத்திற்கான முடிவுரை:
இக்கட்டுரை சுமார் 4 வருடங்களுக்கு முன்பாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்திலும் இதன் முக்கியத்துவம் உணரப்படுவதனால் மீள் பிரசுரமாகின்றது.
ஒரு ஊடகத்திலேயே அதன் தீங்குகளைம் பற்றி எழுதுவது வித்தியாசமானது. இருந்தபோதிலும் இன்று மிக அதிகமானோர் பாவிக்கின்ற ஒரு ஊடகம் என்றவகையில் சில விடயங்களை சுட்டிக்காட்டுவது இக் காலகட்டத்தில் அவசியமானது எனக் கருதுகிறேன். Smart Phone அதாவது திறன்பேசி இன்று எல்லோரிடமும் வந்து சேர்ந்து விட்டது. இரண்டு வயது குழந்தை தொடக்கம் படுக்கையிலிருக்கும் வயோதிபர் வரை இந்தக் கருவி இல்லாமல் இயங்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு இதன் பயன்பாடு இன்று வியாபித்து விட்டது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் திறன்பேசி எனும் கருவி இருக்கவில்லை. ஆனால் வானத்தை மூடி மேகம் காணப்படுவது போன்று இன்று உலகத்தை ஆக்கிரமித்து விட்டது.
வாழ்வின் அத்தனை துறைகளையும் திறன்பேசி இலகுவாக்கி விட்டது. சுருங்கக் கூறின் உலகத்தையே நமது உள்ளங்கையில் கொண்டு வந்துவிட்டது. ஆனால் இதற்கு ஒரு மறைவான இருண்ட பக்கமும் இருக்கிறது. திறன்பேசி பாவனையினால் ஏற்படும் ஒழுக்க சீர்கேடுகள், குடும்ப பிரிவினைகள் இன்னும் எத்தனையோ தீய விளைவுகள் நாம் அறியாததல்ல. சில நாடுகள் திறன்பேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. இரவுநேர பாவனை, சிறுவர்கள், இளைஞர்கள் பாவனை என்பன கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வேலைத்திறன் ( work efficiency), மாணவர்களின் கல்வி கற்பதில் சோம்பல் தனம், தொழில் திறன் வீழ்ச்சி போன்றவற்றால் நாட்டில் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவது பற்றி உலக நாடுகள் கவலைப்படுகின்றன. ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நமது நிலைப்பாடு வேறுபட்டது. கேள்வி. பார்வை பற்றிய அல்லாஹ்வின் கட்டளை மீறப்படும் போது, உலகில் வாக்களிக்கப்பட்டுள்ள 'மணமான வாழ்க்கை' (ஹயாத்துன் தையிபா) மறுமையில் 'மகத்தான கூலி' என்பவற்றை இழந்துவிடும் பேராபத்து உள்ளமையை நாம் புறக்கணிக்க முடியாது.
மறுமை வாழ்வை மறந்துவிட்டு உலக இன்பங்களை மட்டும் மட்டும் அனுபவிப்பதில் காட்டும் பேராவல் காரணத்தினால் உலக முஸ்லிம்கள் வெள்ளத்தில் அடிபட்ட சருகுகளாக குப்பைகூழங்கள் போன்று கோளைகளாக வாழ்ந்து கொண்டிருப்பதை முழு உலகமும் இன்று கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறது.
ஆகவே ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திக்க வேண்டும். மறுமையில் அல்லாஹுத்ஆலா ஒவ்வொரு மனிதனுடனும் தனித்தனியாக பேசுவான் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. நமது சகல செயல்களையும் அல்லாஹ் அறிந்தவனாக உள்ளான். எதனையும் அவனுக்கு மறைக்க முடியாது. நமது உறுப்புக்களே நமக்கெதிராக மறுமையில் சாட்சியம் கூறவுள்ளன. எனவே மீண்டும் சிந்திப்போம்.
என்னுடைய தக்வாவை பேணுவதில் நான் வெற்றியடைந்தேனா? கண்ணிமைக்கும் நேரம் கூட அல்லாஹ்வுக்கு மாறு செய்யாமல் என்னை நான் பாதுகாத்துக் கொள்கிறேனா? இது அல்லாஹ்வுக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இடையிலான இரகசியம். வல்ல நாயன் எனக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரான வழியைக் காட்டுவானாக. ஆமீன்.
ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.
கட்டுரை ஆசிரியர்:
M.I.M. சலீம் B.A.
(ஓய்வு நிலை மக்கள் வங்கி உதவி பிராந்திய முகாமையாளர்)
30. தாவூத் வீதி
புதிய காத்தான்குடி.
(Mobile: 0774629347)
கேள்வி, பார்வை மற்றும் இருதயம் பற்றி புனித அல்குர்ஆன் கூறும் முக்கிய செய்தி என்ன?
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 10, 2025
Rating:

கருத்துகள் இல்லை: