Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் "வளர்ந்து வரும் திறமையாளருக்கு கௌரவம்"



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (GMMS) ஏற்பாட்டில், Emerging Talents – Grade 5 Scholarship Achievers Day – 2025 எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற புலமையில் சாதனை நிலை நாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.


பாடசாலையின் கல்வி சார் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பாரம்பரியக் கலையான பொல்லடி எனும் கோலாட்ட குழுவினரால் அதிதிகள் அழைத்து வரப்பட்டு, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவமும், நினைவுமலர் வெளியீடும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம் இல்லியாஸ் தலைமையில் (18) இடம் பெற்றது. 


இந்நிகழ்வில், அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், தென் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர் கலாநிதி திருமதி எம்.ஏ.சி. சுலைஹா பீபி ஆதம்பாவா ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதிகளாகவும் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர்,  திருமதி எம்.எச்.றியாஸா, சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா ஏ.மலிக், ஆரம்பப் பிரிவு   ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்ஸார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்றட்டப் பொறியியலாளரும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான எம்.ஐ.எம்.ரியாஸ் மற்றும் சபாஷ் & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கட்டடக்கலை மற்றும் அளவையியல் வல்லுனருமான எம்.சி.எம். ஹசீர் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 126 மாணவர்கள் சான்றுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 28 மாணவர்கள் பதக்கம் அணிவித்து நினைவுச்சின்னம், பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்த வகுப்பாசிரியர்களும் பகுதித் தலைவரும் பாராட்டி கௌரவிக்கப்படனர்.


பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர் உட்பட  ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 


பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வில் அரங்கேறி பார்வையாளர்களை மேலும் பரவசப்படுத்தின.


நிகழ்வின்போது பாடசாலை அபிவிருத்திக் குழுவினரால் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களால் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் "வளர்ந்து வரும் திறமையாளருக்கு கௌரவம்" Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 21, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.