Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மஹிந்தவின் திடீர் போர்நிறுத்தம் குறித்து விசாரணை கோருகிறார் பொன்சேகா!


”பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களை தப்பிக்க வைப்பதற்காக இறுதிக்கப்பட்டப்போரின்போது மஹிந்த ராஜபக்சவால் 48 மணிநேர போர் நிறுத்தம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், 2005 ஆம் ஆண்டு புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டமை குறித்தும் விசாரணை அவசியம். இதற்காக ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ராணுவத்தினர் தொடர்பில் ராஜபக்சக்கள் தற்போது அதிக அக்கறையுடன் கதைக்கின்றனர். தன்னை மஹிந்த ராஜபக்ச சிறை வைத்ததுகூட தவறு எனக் நாமல் ராஜபக்ச கூறிவருகின்றார். பிரபாகரன்கூட எமது குடும்பத்தினரை இலக்கு வைக்கவில்லை. நாம் உக்கிர போரில் ஈடுபட்டிருந்த தருணத்தில்கூட படையினரின் குடும்பத்தை பிரபாகரன் இலக்கு வைக்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் எனது குடும்பத்தினரைக்கூட விட்டுவைக்கவில்லை.

எனக்குகீழ் வேலை செய்த படையினர் ஓய்வூதியம் இன்றி வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியே சென்ற பிறகுகூட அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இடமளிக்கப்படவில்லை. தடையேற்படுத்தப்பட்டது. இதனால் சிலர் மாரடைப்பு வந்து மரணித்துவிட்டனர். இப்படி செய்த ராஜபக்சக்கள்தான் தற்போது படையினருக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.

2009 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 1 வரை 48 மணிநேரம் போர் நிறுத்தம் வழங்குமாறு மஹிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்தார். அக்காலப்பகுதியில் நாம் முல்லைத்தீவை பிடித்துவிட்டோம். புதுகுடியிருப்பையும் மும்முனையில் சுற்றிவளைத்துவிட்டோம். இன்னும் 10 கிலோ மீற்றர்வரைதான் பிடிக்க வேண்டி இருந்தது. இதற்காகத்தான் இரண்டரை வருடகாலம் போர் நடந்தது. 4 ஆயிரத்து 500 வரையான படையினரை இழந்திருந்தோம்.

குறித்த போர் நிறுத்தத்தை மஹிந்த ராஜபக்ச வழங்கி இருக்காவிட்டால் 2009 மார்ச் நடுப்பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவந்திருப்போம். போர் நிறுத்தம் வழங்கப்பட்ட பிறகு புலிகள் எம்மை திருப்பி தாக்கினர். நாம் ஆயுதங்களை கீழே வைத்திருந்தோம். ஐந்து கிலோ மீற்றர்வரை பின்னால் வரவேண்டி ஏற்பட்டது. பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. 500 வரையான படையினரை இழந்தோம்.

எதற்காக போர் நிறுத்தம் வழங்கப்பட்டது? பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களை தப்பிக்கவைப்பதற்காகவே இது நடந்திருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எம்மை தாக்கலாம் என பிரபாகரன் சிந்தித்து தாக்குதல் நடத்தினார். அவர் வாய்ப்பை தவற விட்டிருந்தார்.
போர் முடிவடையப்போகின்றது என தெரிந்தும் எதற்காக போர் நிறுத்தம் வழங்கப்பட்டது?
மஹிந்தவின் இந்த தேசத்துரோக செயல் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பிருந்தால் நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும்.

2005 ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கு விழுவதை தடுக்கும் நோக்கில் மஹிந்த தரப்பு பணம் வழங்கியது. அந்த பணத்தை வைத்தே கடற்புலிகளுக்கு கப்பல் கொள்வனவு செய்யப்பட்டது. புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் பஸில் ராஜபக்சவும் என்னிடம் தெரிவித்திருந்தார். எனவே, இது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது உயர்மட்டக்குழுவொன்றை அமைத்தேனும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்றார் பொன்சேகா.

மஹிந்தவின் திடீர் போர்நிறுத்தம் குறித்து விசாரணை கோருகிறார் பொன்சேகா! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 07, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.