Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும்.


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.


ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான மற்றும் சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின் உள்ளங்களில் சகவுணர்வை விதைப்பதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும். 


அதாவது, மற்றவர்களின் பசி மற்றும் அதன் வலியைத் தனது சொந்த அனுபவமாக உணர்ந்து, சகோதரத்துவ உணர்வுடன் மற்றவர்களை அரவணைக்கத் தயங்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். 


இக்காலப்பகுதியில் ரமழானின் ஏனைய விழுமியங்களான அமைதி, சமத்துவம் மற்றும் சகவாழ்வு போன்ற உன்னத குணங்களால் முஸ்லிங்களின் நடத்தை பண்படுத்தப்படுகிறது. ஒரு மாத காலம் அவர்கள் நோன்பு நோற்பதோடு அந்தக் காலப் பகுதியானது , அவர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கான காலமாகும். 


எனவே, ரமழான் மாதம் என்பது உலகிற்கு வாழ்வியல் முன்மாதிரி மூலம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமென நான் நம்புகிறேன்.

முழு உலகமும் கடினமான மற்றும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் ஒரு தருணத்திலே இம்முறை ஈதுல் பித்ர் பெருநாளை நாம் கொண்டாட வேண்டியுள்ளது. ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்பு மற்றும் பிரார்த்தனைகளின் ஆசீர்வாதத்தால், இந்த இக்கட்டான நிலைமை விரைவில் நீங்கி, அனைவரும் எதிர்பார்க்கின்ற, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற, அமைதி, சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த ஒரு உலகம் உருவாக வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.


அதேபோல், ஏனைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது போலவே, இந்தச் சவாலையும் தைரியமாக எதிர்கொண்டு, அதனை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்புகள் அல்லது சரிவுகள் இன்றி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உறுதியான இலட்சியத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.


பேதங்களை மறந்து, இந்த வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து, அதற்குத் தேவையான பலமான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், இலங்கை வாழ் மற்றும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈத் முபாரக்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 மார்ச் 19 ஆம் திகதி

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.