Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது

அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது

மார்ச் 31 ஆம் திகதிவரை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு 42% டீசலை சேமித்துள்ளது

 ஏப்ரல் 07 மற்றும் 09 ஆம் திகதிகளில் பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவம் குறித்த தெளிவூட்டல் வேலைத்திட்டங்கள்

 
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதேபோன்று, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
 
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, மார்ச் 31 ஆம் திகதி வரை 42% டீசலை சேமித்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரியவந்தது.

ஏப்ரல் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவம் குறித்த தெளிவூட்டல் திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் முடியுமான சந்தர்ப்பங்களில் இணையவழி ஊடாக இயங்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
 
கிராம உத்தியோகத்தர் நுழைவுப் பரீட்சைகள் உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்ததுடன், போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம், நீதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகள் அத்தியாவசிய ஊழியர்களை வரவழைத்தும், இணையவழி ஊடாகவும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
 
அரச நிறுவனங்களின் எரிபொருள் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்தைக் கண்காணிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக அரச நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சேமிக்கப்பட்டுள்ள வலுசக்தியின் அளவு குறித்து அடுத்த குழுக்கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
 
மேலும், நீர் விரயமாவதைத் தவிர்த்தல் மற்றும் மாற்று நீர் மூலங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசரத் திட்டமொன்றை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இணையவழி ஊடாகக் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக அமைச்சின் உடன்பாட்டுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்படி 2026 ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வழிகாட்டல்களின்படி செயற்படுவதற்குத் தேவையான சுற்றுநிருபங்களை வெளியிடுவதற்கும், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களும் இணையவழி முறையைப் பின்பற்றுவது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
 
மேலும், நாளாந்த வலுசக்தி நுகர்வு, கையிருப்பு அளவு, அரச ஊழியர்களின் வருகை போன்றவற்றை Dashboard ஊடாகக் காட்சிப்படுத்தி, உரிய பணிகளைக் கண்காணிப்பதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
 
2026 ஏப்ரல் 08 ஆம் திகதி குழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எம். எச். அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி,ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, 

வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி. எம். உதயங்க ஹேமபால, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் டி. ஆர். டபிள்யூ. எஸ். தனபால, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேரா,வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் குமுது லால் போகஹவத்த,ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். எஸ். ராஜகருணா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 02, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.