Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட 'Silver Age Center' முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு


 
அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும், உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும், - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு வாழ்க்கையும், முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தையும் உருவாக்க வேண்டும் எனவும், அது அரசாங்கத்தினதும் சமூகத்தினதும் பொறுப்பாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

​நவீன வசதிகளுடன் கதிர்காமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'Silver Age Center' முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் 'Zoom' ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு மார்ச் 31ஆம் திகதி செத்சிரிபாய புதிய கட்டடத்தில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது, முதியோர்களுக்கான நிறுவன ரீதியான பராமரிப்பை வழங்கும் நிலையங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கட்டளைகள் மற்றும் வழிகாட்டல் வரைபினை, முதியோர்களுக்கான தேசிய சபையின் பிரதிநிதிகள் பிரதமரிடம் கையளித்தனர்.

​அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அந்தத் திட்டத்தை நாம் மீண்டும் ஆரம்பித்து இன்று மக்கள் பாவனைக்காகக் கையளிக்கின்றோம்.

​எமது கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, அனைவருக்கும் பாதுகாப்பான, உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் அந்த உரிமை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும்.

​சனத்தொகையின் அடிப்படையில், எமது நாட்டில் பெருமளவிலானோர் மிக வேகமாக முதியவர்களாக மாறி வருகின்றனர். ஆயினும் 60 வயது என்பது சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கக்கூடிய ஒரு சுறுசுறுப்பான வயதெல்லை ஆகும். அவர்கள் முதியவர்களாக இருந்தபோதிலும், அவர்களுக்கும் பல்வேறு தேவைகள் இருக்கவே செய்கின்றன. திறமையும் அனுபவமும் மிக்க அவர்களாலும் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற முடியும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

​முதியோர்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவை. இத்தகைய நிறுவனங்களை முறையாகப் பராமரிப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும். குடும்பத்தினரோடு சுதந்திரமாகவும், பல்வேறு நிறுவனங்களுக்குள்ளும் வாழும் அனைத்து முதியோர்களுக்கும் பாதுகாப்பையும் தேவையான சேவையையும் வழங்கி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிக அவசியமானதாகும்.

​முதியோர்களுக்கான ஆரோக்கியம், போக்குவரத்து, முதியோர் கல்வி, சுதந்திரம், மகிழ்ச்சி போன்றே அவர்களின் உரிமைகள் மற்றும் ஆன்மீக நல்வாழ்வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

​வழக்கமான 'முதியோர் இல்லம்' என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, முதியோர்களின் தேவைகளுக்கேற்ப சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனங்களாக, அவர்கள் தமது அந்திமக் காலத்தைக் கௌரவமாகக் கழிக்கக் கூடிய வகையில் இந்நிலையங்களைப் பராமரிப்பது அவசியமாகும், என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

​வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் 'Silver Age Center' முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க உள்ளிட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் பிரதமருடன் இணையவழிக் கூடாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட 'Silver Age Center' முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.