புலிகளின் முகாம்களிலிருந்து 150 கிலோ தங்க ஆபரணங்கள் கைப்பற்றல்: உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடு
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, சபையில் இன்று (23) பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இலங்கை இராணுவத்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் இருந்து தங்கம் பெறப்படவில்லை.
எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது புலிகளின் முகாம்கள் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் இருந்து களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்க ஆபணரணங்கள் ( சுமார் 150 கிலோ) கைப்பற்றப்பட்டது.
இவற்றை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் அதற்குரிய பணி நிறைவுபெறும் என எதிர்பார்க்கின்றோம்.
அதன் பின்னர் மேற்படி தங்க ஆபரணங்கள் அதன் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் மீள கையளிப்பதற்குரிய உரிய நடவடிக்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும்.”- எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, 2014 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட 2,015 பேருக்கு, தங்க ஆபரணங்கள் மீள கையளிக்கப்பட்டது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 23, 2026
Rating:

கருத்துகள் இல்லை: