கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையேயன்றி, சலுகை அல்ல. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
’நெண இசுர’ புலமைப்பரிசில், அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னெடுக்கும் திட்டத்திற்குப் பாரிய பக்கபலமாகும்.
கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையேயன்றி, அதுவொரு சலுகை அல்ல என்றும், மாணவர்கள் கல்வியை இடையில் கைவிட்டுச் செல்ல நேரிடுகின்ற சூழலை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ’நெண இசுர’ புலமைப்பரிசில் பாரிய பக்கபலமாக அமைகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆகஸ்ட் 02 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற அதிவணக்கத்துக்குரிய கல்போட சிறி ஞானிஸ்ஸர தேரர் நினைவாஞ்சலி "நெண இசுர - 2026" புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் ஆலோசனைக்கு அமைய, அதிவணக்கத்துக்குரிய கல்போட சிறி ஞானிஸ்ஸர தேரர் நினைவாஞ்சலி புலமைப்பரிசில் நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 460 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு க.பொ.த (உயர்தரக்) கல்வி நிறைவடையும் வரை இப்புலமைப்பரிசில் நிதி இந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கி வைத்து, அங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
காலம் சென்ற பொடி ஹாமுதுருவோ (சின்னத் தேரர்), விகாரை என்ற எல்லைக்கு அப்பால் சென்று சமூகச் சேவையைத் தனது பிரதான பொறுப்பாகக் கொண்ட ஒரு மகத்தான தேரர் ஆவார்.
அவர் ஒரு பிக்கு என்ற வகையில் மத ரீதியான மற்றும் புத்த சாசன ரீதியான பணிகளை ஆற்றியதைப் போன்றே, நாட்டின் ஆதரவற்ற, பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாரிய நிழலாக இருந்து வந்தார்.
குறிப்பாக, தொழிற்கல்வி, இளைஞர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் நலன்புரி ஆகியவற்றிற்காக அவர் கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு ஆற்றிய சேவையை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. இன்று செயற்படுத்தப்படும் இந்த ’நெண இசுர’ புலமைப்பரிசில் நிதியம் என்பதும் அவரது மனிதநேய மற்றும் தொலைநோக்குத் தரிசனத்தின் நேரடிப் பிரதிபலிப்பாகும்.
பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியிலும் தளராது உயர்தரம் வரை முன்னேறிச் செல்லும் இந்தப் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கு இப்புலமைப்பரிசில் உதவி பாரிய பக்கபலமாக அமையும்.
தற்போது நாட்டின் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தையும், புதிய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசாங்கம் என்ற வகையில் எங்களது தெளிவான தொலைநோக்கு என்னவென்றால், கல்வியானது சகல பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையே தவிர, அதுவொரு சலுகையாக இருக்கக்கூடாது என்பதேயாகும்.
நாட்டில் எத்தகைய பொருளாதாரச் சிரமங்கள் இருந்தபோதிலும், ஒரு பிள்ளையின் கல்விக்காகச் செய்யப்படும் முதலீடானது இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகச் செய்யப்படும் மிகச் சிறந்த, அதே நேரத்தில் மகத்தான முதலீடாகும். நமக்கு இருக்கும் மிக வலுவான வளம் மனிதவளமேயாகும். அரசாங்கம் என்ற வகையில் நாம் கல்வித்துறைக்காகப் பல முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காகக் கலைத்திட்டங்களைப் புதுப்பித்து, தற்போதுள்ள பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைமைக்குப் பதிலாகப் பிள்ளைகளின் திறமைகள், கண்காணிப்புத் திறன் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவற்றை வளர்க்கும் நடைமுறைசார் கல்விச் சூழலை உருவாக்குவதே எமது பிரதான இலக்காகும்.
அத்தோடு, புத்தகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, நாட்டிற்குத் தேவையான மனப்பாங்குகள் மற்றும் நடைமுறைச் சாத்தியமான கல்வி முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டியதே நமது தேவையாக இருக்கின்றது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு, கிராமப்புறப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்கவும் நாம் அதிக நிதியை ஒதுக்கியிருக்கின்றோம். ஏனெனில் நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்திருப்பினும் பிள்ளைகளுக்குச் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
அதேபோல், நீண்டகாலமாக முறையான திட்டமின்றிச் செயற்படுத்தப்பட்டு வந்த கல்வி முறைமையினால், கல்வி என்பது பரீட்சைகளை நடத்தும், பெறுபேறுகளை வெளியிடும் நிலைக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இன்று முறையான கால அட்டவணைக்கு அமைய முறைப்படி கல்வித்துறையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக எமக்கு உங்களது ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது.
நாம் எமது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாகப் பாடசாலைக் கல்வியின் முடிவில் எந்தவொரு பிள்ளையும் நடுத்தெருவில் கைவிடப்படாமல், தொழிற்கல்வி அல்லது உயர்கல்வியைக் கற்பதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் வாய்ப்புகளையும் விரிவாக்கி வருகின்றோம். கல்வித்துறையின் மனிதவளத்திற்காக முதலீடு செய்து, பாடசாலை மதிய உணவு, பாடநூல்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில் வேலைத்திட்டங்கள் ஊடாக வறிய குடும்பங்களின் பிள்ளைகள் கல்வியைக் கைவிட்டுச் செல்ல நிர்பந்திக்கும் சூழலை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
அந்த வகையில் ’நெண இசுர’ வேலைத்திட்டத்தை அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்திற்குக் கிடைக்கும் மற்றுமொரு பெறுமதிமிக்க ஆதரவாகவே நான் பார்க்கின்றேன். கங்காராம விகாரையும் ’நெண இசுர’ நிதியமும் இணைந்து மேற்கொள்ளும் இந்தச் சமூகச் சேவை, அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னெடுக்கும் திட்டத்திற்குப் பாரிய பக்கபலமாகும்.
காலம் சென்ற சின்னத் தேரரின் வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் கலாநிதி, வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் ஆற்றிவரும் மத மற்றும் சமூகப் பணிகளுக்காக அரசாங்கம் என்ற வகையில் எமது கௌரவத்தைத் தெரிவித்துக்கொள்வதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்கின்றேன்.
இதற்காக ஆலோசனைகளையும் உபதேசங்களையும் வழங்கிவரும் எமது கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அவர்களுக்கும், புலமைப்பரிசில் நிதியத்தின் அறங்காவலர் குழுவிற்கும், இதற்கு உதவி உபகாரங்களைச் செய்யும் அனைவருக்கும் எனது கௌரவத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பிள்ளைகள் பெறும் இப்புலமைப்பரிசில் என்பது வெறும் பணமோ அல்லது பௌதிக உபகரணங்களோ மாத்திரமல்ல. அது ஒட்டுமொத்த நாடும் உங்களது எதிர்காலத்தின் மீது வைக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாகும். எனவே எத்தனை சவால்கள் வந்தபோதிலும் உங்களது முயற்சியையும் அர்ப்பணிப்பையும் கைவிடாதீர்கள். கல்வியால் பலப்படுத்தப்பட்ட, இந்த நாட்டை நல்வழிப்படுத்தும், கருணையுள்ள, நற்பண்புமிக்க பிரஜைகளாக மாறுவதற்கு உறுதிபூணுங்கள், என பிரதமர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சியாம் மகா நிகாயவின் மகா நாயக்க தேரர் உட்பட மல்வத்து, அஸ்கிரி அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, முப்படைத் தளபதிகள், தூதுவர்கள், கொடையாளிகள், புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையேயன்றி, சலுகை அல்ல. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2026
Rating:

கருத்துகள் இல்லை: