ஊடகவியலாளர்களின் தொழில் நலனுக்காக புதிய திட்டங்கள் விரைவில் அறிமுகம் - வெகுஜன ஊடகப்பிரதி அமைச்சர்
ஊடகவியலாளர்களை ஊக்கமூட்டும் நிகழ்ச்சி நேற்று (31.07.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்தின, ஊடகவியலாளர்களின் தொழில் நலன், பாதுகாப்பு மற்றும் அவர்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு புதிய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாவட்ட மட்டத்தில் நேரடியாக கலந்துரையாடும் நோக்கிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
வெகுஜன ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி, கடந்த காலங்களில் பொதுமக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாற்றத்திற்கு மக்கள் வழங்கிய அங்கீகாரத்தின் அடிப்படை சமத்துவம் மற்றும் நல்லாட்சியாகும் என்றும், அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கடந்த காலங்களில் போதிய கவனம் பெறவில்லை என்பதையும், வரலாற்றில் ஏற்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்யும் நோக்கில் பல்வேறு துறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஊடகத் துறையுடன் மட்டுப்படுத்தாமல் கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்படுவதாக தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு நேரடியாக தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும், போராட்டங்கள் அல்லது பதாகைகள் ஏந்த வேண்டிய அவசியமின்றி உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும், தற்போது அது நிலையான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாகவும், பொருளாதார முன்னேற்றம் காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் குறைந்து வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிரதான நோக்கம் ஊழல், மோசடி மற்றும் பொதுமக்களின் நிதி துஷ்பிரயோகங்களை ஒழித்து நேர்மையான ஆட்சியையும் உறுதியான பொருளாதாரத்தையும் உருவாக்குவதாகும் என்றும் அவர் கூறினார்.
கருத்துச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஊடகங்களின் சுதந்திரமான செயற்பாட்டை உறுதிப்படுத்தும் புதிய ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஊடகத் தொழில் வாண்மை அபிவிருத்திச் சங்கம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அது ஊடகவியலாளர்களின் தொழில் நலன், கல்வி மேம்பாடு, சேவைத் தரம் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் சுயாதீன அமைப்பாக இயங்கும் என்றும் தெரிவித்தார். ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்ட பின்னர், அதன் நிர்வாகம் ஊடகத் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளும் பரிசீலனையில் உள்ளதாகவும், நடுத்தர வசதியுள்ள ஊடகவியலாளர்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்களுக்கு விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு அதிமேதகு சனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் முன்னுரிமை அளிக்கும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
ஊடகப் பிரிவு,
மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 01, 2026
Rating:

கருத்துகள் இல்லை: