සිංහල පරිවර්තනය සමග).நீதியை துரிதப்படுத்துவது சர்வாதிகாரமாகுமா?
සිංහල පරිවර්තනය සමග).
நீதியை துரிதப்படுத்துவது சர்வாதிகாரமாகுமா?
அதிகாரம்,பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களுக்கு சட்டம் மெதுவாகவும், சாதாரண மக்களுக்கு மட்டும் வேகமாகவும்செயல்பட்ட கால அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டிய தேவை இன்று எவறாலும் மறுக்க முடியாத ஒன்றாகியுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு அல்லது பணத்தின் காரணமாக சட்ட நடவடிக்கைககள் தாமதிக்கப்பட்டிருந்தால், அந்த கலாச்சாரத்திற்குமுற்றுப்புள்ளி வைப்பது மக்களுக்குஎதிரான நடவடிக்கையாக மாறாது.
றோஹன விஜேவீர தலைமையில்
தொழிலாளர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மீதான அநீதிகளை எதிர்த்து உருவான மக்கள் விடுதலை முன்னணி(JVP) எனும் இயக்கத்தின் வரலாற்றுத் தியாகங்களின் தொடர்ச்சியே, தற்போதைய அரசியல் சூழலில் ஒரு புதிய மாற்றத்தின் வடிவமாக வெளிப்பட்டுள்ளது.
"சூழ்ச்சிகள் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் எமக்கு இல்லை. நாங்கள் சுயநலமாக எதையாவது அடைந்துகொள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளோம்".
-செயலாளர் ரில்வின் சில்வா-
இலங்கையில் பல வருடங்களாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய வழக்குகளில் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்து சர்வாதிகாரத்தின் அடையாளமா என்ற கேள்வி இன்று புத்திஜீவிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.
நீதியை ஆண்டுக்கணக்கில் தாமதப்படுத்துவது யாருடைய உரிமையைப் பாதுகாக்கிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நீதித்துறை, மக்களுக்கு உரிய நேரத்தில் நீதியை வழங்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை எதிர்பார்ப்பாகும்.
கடந்த கால ஆட்சியாளர்களின் பாரம்பரிய அரசியல் அரசியல் கலாச்சாரத்தில் சாதாரண குடிமகனின் நீதியின் மீதான நம்பிக்கை பலவீனப்படுத்தப்பட்டதாக உள்ளது. குறிப்பாக அதிகாரம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களுக்கு சட்டம் மெதுவாகவும், சாதாரண மக்களுக்கு மட்டும் வேகமாகவும் செயல்பட்ட கால அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டிய தேவை இன்று எவறாலும் மறுக்க முடியாத ஒன்றாகியுள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எழுப்பப்படும் விமர்சனங்களையும் இதே அடிப்படையில்தான் மக்கள் ஆராய வேண்டும். ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பது ஜனநாயக உரிமையே. ஆனால், அது நீதித்துறையின் சுயாதீனத்தையோ அல்லது நீதிபதிகளின் உரிமைகளையோ பாதிக்கிறது என்று கூறுபவர்கள், எந்தப் பிரிவு எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெளிவான சட்ட ஆதாரங்களுடன் மக்களிடம் விளக்க வேண்டும்.
ஆட்சியாளர்கள் மாறுவது மட்டும் அரசியல் மாற்றமல்ல; “சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற நம்பிக்கையை நடைமுறையில் நிலைநாட்டுவதே உண்மையான மாற்றமாகும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னுள்ள முக்கியமான வரலாற்றுப் பொறுப்பும் இதுவாகவே உள்ளது.
கடந்த காலங்களில் அதிகாரம், அரசியல் செல்வாக்கு அல்லது பணத்தின் காரணமாக சட்ட நடவடிக்கைகள் தாமதிக்கப்பட்டிருந்தால், அந்தக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக மாறாது. அது மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகும். ஊழல் செய்தவர் எந்தப் பதவியில் இருந்தாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர் எவ்வளவு செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும், சட்டத்தின் முன் அவர் ஒரு சாதாரண குடிமகனாகவே நிற்க வேண்டும்.
ஆகவே, நீதியை விரைவுபடுத்துவதையும் ஊழல் வழக்குகளை துரிதப்படுத்துவதையும் “சர்வாதிகாரம்” என்ற அரசியல் முழக்கத்துக்குள் அடைத்து விடாமல், ஆண்டுக்கணக்கில் நீதிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரலைக் கேட்பதே ஜனநாயகத்தின் உண்மையான அளவுகோல் என்பதை முதலில் 22வது சீர்சிருத்தத்துக்கு எதிராக கூச்சலிடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் உரிமைகளையும் பாதுகாப்பதுடன், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உரிய காலக்கெடுவில் தீர்வு காண்பது எந்த இடத்தில் முரண்படுகின்றது? என்பதை அரசியல் ஞாணிகள் என தங்களை அடையாளப் படுத்திக்கொள்பவர்களும், அவர்களுக்கு பின்னால் மறைந்து கொள்ளும் தனித்துவ சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அதற்கான தெளிவினை தமது ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்கு தாயரில்லாதவர்களாகவே உள்ளார்கள். வெறும் அரசுக்கு எதிரான கோசங்களை கட்டவிழ்த்து விடும் சுயநல அரசியல் செயற்பாட்டாளர்களாகவே மக்களால் அவர்கள் அடையாளப் படுத்தப்படுகின்றனர்.
நீதித்துறையும், சட்டம் அனைவருக்கும் சமம் என இயங்கும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே இந்த நாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன் நிற்கும் மிகப்பெரிய சவாலாகும்.
ஊழல் செய்தவர் யார், அதிகாரத்தில் இருந்தவர் யார்? அதிகாரம் சட்டத்தின் சுயாதீன தன்மைக்கு எதிராக எவ்வாறு பாவிக்கப்பட்டது? என்பதைக் கருத்தில் கொள்ளாமல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நம்பிக்கையை மக்களிடம் மீண்டும் கட்டியெழுப்புது மிகக் கடிணமான விடயமாகும். நீதியை விரைவுபடுத்துவதை சர்வாதிகாரம் எனக் கூறுவதற்கு முன், ஆண்டுக்கணக்கில் நீதிக்காக காத்திருக்கும் மக்களின் கண்ணீரையும் எதிர்பார்ப்பையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இதனை நாட்டுக்கு மேலும் தெளிவுபடுத்தும் முகமாக, "மக்களை அடக்கி ஆள்வதற்கோ, சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதற்கோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தி, மக்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்” என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார சமீபத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், வலுவிழந்த எதிரணிகள் எத்தகைய அரசியல் கூச்சல்களை எழுப்பினாலும், மக்களின் நலனையும் நீதியையும் முன்னிறுத்திய அரசாங்கத்தின் பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மறுபக்கத்திலே, சூழ்ச்சிகள் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் எமக்கு இல்லை. மக்கள் எம்மை நிராகரித்தால், ஆட்சியைக் கைவிடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
“நாங்கள் சுயநலமாக எதையாவது அடைந்துகொள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளோம். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம். எனவே, மக்கள் எங்களை நிராகரித்தால், ஆட்சியில் தொடர வேண்டிய அவசியம் எமக்கு இல்லை” என்ற அவரது கருத்து, அதிகாரத்தை இலக்காகக் கொண்ட அரசியலுக்கும் மக்கள் தீர்ப்பை மதிக்கும் அரசியலுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள், சுயலாபம் தேடியவர்கள் மற்றும் தங்களது மோசடிகளை மூடிமறைக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியவர்கள், மக்கள் நிராகரித்த பின்னரும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக, உண்மையான மக்கள் ஆட்சியின் அடிப்படை என்பது அதிகாரத்தை தனிப்பட்ட சொத்தாகக் கருதாமல், மக்கள் வழங்கிய பொறுப்பாகக் கருதுவதிலேயே உள்ளது.
மக்கள் ஆதரவு இருக்கும் வரை மட்டுமே ஆட்சி செய்வதும், அதில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நல்லாட்சியை முடியுமானவரை ஏற்படுத்துவதும்,மக்கள் ஆதரவை இழந்தால் அமைதியாக அதிகாரத்திலிருந்து விலகுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை நெறியாகும் என்ற ரில்வின் சில்வாவின் கருத்தானது கொள்கை அரசியலின் உண்மையான தத்துவத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் படியாக உள்ளது.
அந்த வகையில், தோழர் றோஹன விஜேவீர தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி தோற்றுவிக்கப்பட்டபோது முன்வைக்கப்பட்ட அரசியல் நோக்கங்கள், பல தசாப்தங்களாக இடம்பெற்ற போராட்டங்களையும், தியாகங்களையும் கடந்து இன்று இலங்கையின் அரசியல் மாற்றமானது புதிய வடிவில் வெளிப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்புகளையும் எண்ணிலடங்காத தியாகங்களையும் கடந்து வந்த மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பயணத்தின் அரசியல் விளைவுகளை, இன்றைய தலைமுறை புதிய சூழலில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
தொழிலாளர் வர்க்கம், கீழ்மட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மீது நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார அநீதிகளுக்கு எதிராக உருவான மக்கள் விடுதலை முன்னணி எனும் இயக்கம், சுரண்டல், ஊழல், இனவாதம் மற்றும் மதவாத அரசியலுக்கு மாற்றான ஒரு சமூகக் கண்ணோட்டத்தை முன்வைத்தது.
றோஹன விஜேவீர உள்ளிட்ட பலரின் தியாகங்கள் அந்த வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாகவே உள்ளன. அந்த வரலாற்றுப் பின்னணியில் உருவான அரசியல் மாற்றத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் அதன் சீர்திருத்த முயற்சிகளையும் பார்க்க முடிகின்றது.
குறிப்பாக, நீதித்துறையின் செயற்பாட்டுத் திறனை வலுப்படுத்துதல், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளைத் துரிதமாக விசாரித்து மக்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை நடைமுறையில் மேலும் உறுதிப்படுத்துதல் ஆகியவை தற்போதைய அரசியல் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கங்களாக முன்னிறுத்தப்படுகின்றன.
22வது அரசியலமைப்புத் திருத்தத்தைச் சுற்றியுள்ள விவாதமும் இதன் ஒரு பகுதியாகவே உள்ளது. இச்சட்டமூலங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சம்பந்தமான மீளாய்வுகள் இடம் பெற்றதுடன், அதன் தீர்மானத்திற்குப் பின்னரே பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்பட்டன. 22வது திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு அவசியமில்லை என்றும், உரிய திருத்தங்களுடன் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த மாற்றங்கள் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள், நீதித்துறை மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கமும்,
பல தசாப்தங்களாக நிலவிய அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படும்போது, அதனால் பாதிக்கப்படக்கூடிய அரசியல் சக்திகளிடமிருந்து எதிர்ப்பும் விமர்சனமும் எழுவது இயல்பானதே.
ஆகவே, எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவை வெறுமனே அரசாங்கத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற குறுகிய அரசியல் கண்ணோட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்படாமல், மக்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், நீதித்துறையை மேலும் வலுப்படுத்தல், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் ஆகிய அடிப்படை இலக்குகளை இந்தச் சீர்திருத்தங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றுகின்றன என்பதைமே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
கடந்த கால அரசியல் அனுபவங்களும் தியாக வரலாறும் உருவாக்கிய பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது கொள்கை நிலைப்பாடுகளில் உறுதியுடன் செயற்படுகின்றது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்ற விடயமே அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாக மாறியுள்ளது.
அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக,
29-09-2026.
සිංහල පරිවර්තනය සමග).நீதியை துரிதப்படுத்துவது சர்வாதிகாரமாகுமா?
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 29, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 29, 2026
Rating:




கருத்துகள் இல்லை: