Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இணைய உலகின் இருண்ட பக்கம்: சிறார்களின் எதிர்காலம் ஆபத்தில்! யுனிசெப் எச்சரிக்கை!!

கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை வெளியிட்ட தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான சம்பவங்கள் சமூக வலைதளங்களிலேயே நடந்துள்ளன.

ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் 12 முதல் 17 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்களில் ஒருவர், தாங்கள் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஆண்டிற்குள் ஏதேனும் ஒரு வகையான இணையவழிப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நாடுகளில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் அவர்களின் விருப்பமின்றி பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களைப் பார்க்க நேரிட்டுள்ளது.

90 லட்சம் சிறுவர்கள் பாலியல் உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிர்ந்து கொள்ள வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 40 லட்சம் சிறுவர்களின் பாலியல் படங்கள் அவர்களின் அனுமதியின்றி இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

உலகளவில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும் என்று அவ்வறிக்கை எச்சரிக்கிறது.

கென்யா, பாகிஸ்தான், பிரேசில், செர்பியா உள்ளிட்ட 21 நாடுகளில் 2020 முதல் 2025 வரை இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 21,000 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களே முதன்மை காரணி

பதிவான துஷ்பிரயோக சம்பவங்களில் சுமார் 60% பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களிலேயே நடந்துள்ளன. ஆன்லைன் கேமிங் தளங்களில் 14% சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ வெளியிட்ட விளக்கத்தில், “இந்த ஆய்வு 2020 முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டது.

அதன்பின்னர், டீனேஜர்களின் கணக்குகளைத் தானாகவே ‘பிரைவேட்’ ஆக மாற்றுவது, அறிமுகமில்லாத பெரியவர்கள் குறுஞ்செய்தி அனுப்புவதைத் தடுப்பது போன்ற பல்வேறு பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் தளங்களில் குழந்தை சுரண்டலுக்கு எதிராகத் தொடர்ந்து தீவிரமாகப் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக் நிறுவனங்களும், சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையில் கணக்குகளை பிரைவேட் ஆக்குவது, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறிவது போன்ற பல்வேறு தொழில்நுட்பப் பாதுகாப்புகளைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த கவலை

பாதிக்கப்பட்ட சிறுவர்களில் பாதியாருக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் அல்லது காதலர்கள் மூலமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். 38% சிறுவர்கள் குற்றவாளிகளை முதன்முதலில் இணையத்திலேயே சந்திக்க நேரிட்டுள்ளது.

இருப்பினும், 1% க்கும் குறைவான சம்பவங்களே காவல்துறைக்கோ அல்லது உதவி எண்களுக்கோ புகாராகச் சென்றுள்ளன.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எழும் புதிய அச்சுறுத்தல்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆய்வுக்குட்பட்ட 9 நாடுகளில் மட்டும் சுமார் 11 லட்சம் சிறுவர்களின் புகைப்படங்கள், AI தொழில்நுட்பம் மூலம் ஆபாசப் படங்களாகவும் வீடியோக்களாகவும் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய இணையவழிப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் சிறுவர்கள் தற்கொலை எண்ணங்கள், சுய தீங்குகள் மற்றும் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பு மற்ற சிறுவர்களை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

“இந்தக் கொடூர அனுபவங்கள் சிறுவர்களுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. உதவிக்கு யாரை அணுகுவது என்று தெரியாமல் பலர் அமைதியாகவே வேதனையைச் சகிக்கின்றனர்” என யுனிசெப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, டிஜிட்டல் தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், AI அடிப்படையிலான துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ள சட்டங்களைப் புதுப்பிக்கவும், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தவும் அரசு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு யுனிசெப் கோரிக்கை விடுத்துள்ளது.

இணைய உலகின் இருண்ட பக்கம்: சிறார்களின் எதிர்காலம் ஆபத்தில்! யுனிசெப் எச்சரிக்கை!! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.