இலங்கையின் மருத்துவத் துறையில், தனியார் மருத்துவத் துறை ஆற்றும் பங்கு மிகப் பெரியது.
இலங்கையின் மருத்துவத் துறையில், தனியார் மருத்துவத் துறை ஆற்றும் பங்கு மிகப் பெரியது.
தனியார் மருத்துவத் துறையை இன்று முழுமையாக நிறுத்திவிட்டால், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் அனைவரும் அரச மருத்துவத் துறையை நோக்கி வந்தால், நமது அரச மருத்துவத் துறையால் அந்த சுமையைத் தாங்கி இயங்க முடியாத நிலை ஏற்படும்.
இது இந்த நாட்டில் உள்ள அத்தனை கொள்கை வகுப்பாளர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒரு விடயம்.
ஆனால் ஒரு உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலாபம் இல்லாமல் தனியார் மருத்துவத் துறை இயங்காது. சம்பளம் இல்லாமல் இங்கே யாரும் வேலை செய்யவும் மாட்டார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு, அது அவர்களுடைய பிரதான தொழில் அல்ல. அரச மருத்துவ சேவையில் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றிய பின்னர், மேலதிகமாகச் செய்யும் இரண்டாவது பணியாகவே அது அமைகிறது.
சில நாட்களில் Surgery Theatre-ல் நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு, அதற்குப் பின்னர் சனலிங் செல்லும்போது ஏற்படும் உடல் மற்றும் மன சோர்வில்,
“நாம் ஏன் இந்தத் துறைக்கு வந்தோம்?”
என்ற எண்ணம் கூட சில நேரங்களில் தோன்றும்.
எனது அனுபவத்தில், குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் தனியார் மருத்துவத் துறை மேலும் முன்னேற வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
நோயாளி ஒருவர் வைத்தியசாலைக்குள் வரவேற்கப்படும் தருணத்திலிருந்து, அவர் சிகிச்சை பெற்று திருப்தியுடன் வெளியேறும் தருணம் வரை — சேவையின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றத்திற்கான இடம் இருக்கிறது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்ற ஒருவர், எமது பிரதேசத்தில் அதே அனுபவத்தைப் பெற வேண்டிய சூழ்நிலையில், அந்த வித்தியாசத்தை நிச்சயமாக உணர்வார்.
அதே நேரத்தில், ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் இலாபத்திற்காக செய்ய முடியாது.
அதேபோல், எல்லாவற்றையும் இலவசமாகவும் வழங்க முடியாது.
இந்த இரண்டிற்கும் இடையில், தரமான மருத்துவ சேவையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் ஒரு சமநிலை தேவை.
அந்தப் பின்னணியில்தான், ஒரு தனி மனிதனின் சிந்தனையில் இருந்து உருவான ஒரு முயற்சியாக நான் Ultra Hospital-ஐ பார்க்கிறேன்.
தனது உலக செல்வத்தை, தனது மறுமைக்கான செல்வமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான இந்த முயற்சி, இன்று காத்தான்குடியில் ஒரு வைத்தியசாலையாக திறக்கப்பட்டுள்ளது.
இது யாருக்கும் போட்டியாக உருவாக்கப்பட்டதல்ல.
இலாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுமல்ல.
ஒரு வைத்தியசாலையை உருவாக்குவதும், அதனை தொடர்ச்சியாக சிறப்பாகக் கொண்டு செல்வதும் எவ்வளவு கடினமானது என்பதை மருத்துவத் துறையில் இருப்பவர்கள் நன்றாக அறிவார்கள்.
பல சவால்களும், பல தடைகளும் நிச்சயமாக இருக்கும்.
ஆனால் அவற்றையெல்லாம் கடந்து, இந்த வைத்தியசாலை அதன் நோக்கத்தை அடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ்.
இந்த வைத்தியசாலையில் எனக்கு எந்தவொரு பொருளாதாரப் பங்கும் இல்லை.
ஆனால், இந்தப் பிரதேசத்திற்கு ஒரு சிறந்த வைத்தியசாலை வர வேண்டும் என்ற எண்ணத்துடன், இதன் பின்னால் இருந்து உழைத்த பலரில் நானும் என்னால் முடிந்த அளவில் சிறிதளவு பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இது ஒரு வைத்தியசாலை மட்டுமல்லாமல்,
இந்தப் பிரதேச மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கும் ஒரு சிறந்த நிறுவனமாகவும்,
மருத்துவத் துறையில் ஒரு முன்மாதிரியான முயற்சியாகவும்,
அதன் நிறுவுனரின் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு நீண்டகால நன்மையாகவும்
மாற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.
இந்த வைத்தியசாலை அதன் நிறுவுனரின் உயர்ந்த நோக்கத்திற்காக சிறப்பாக வளர்ந்து, பல ஆயிரம் மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்…
அல்லாஹ் இந்த முயற்சியை ஏற்றுக்கொண்டு, பரக்கத் செய்வானாக.
ஆமீன்.
இலங்கையின் மருத்துவத் துறையில், தனியார் மருத்துவத் துறை ஆற்றும் பங்கு மிகப் பெரியது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2026
Rating:

கருத்துகள் இல்லை: