Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஊடகவியலாளர் ஜமால் கஷூகியை நினைவுகூர்தல்


ஃபயூமி அஹ்மத்
சவூதி பத்திரிகையாளரும் மத்திய கிழக்கு செய்தி முகவர் நிறுவனத்தின் (Mena) பிரபல பத்தியாளருமான ஜமால் கஷூகி கொலை செய்யப்பட்டு ஒக்டோபர் 02 உடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. சவூதி மன்னராட்சியின் விமர்சகரான ஜமால் 2018 ஒக்டோபர் 02 இல் துருக்கியிலுள்ள ஸ்தன்பூல் சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். மயிர்க் கூச்செறியும் அந்த ராஜ படுகொலைக்கு நீதி கேட்டு உலகமே உரத்துக் குரலெழுப்பியபோதும் ஒரு வருடமாகியும் எதுவும் கிடைக்கவில்லை. வல்லரசுகள் கஷூகிக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தடையாக உள்ளன. இலங்கையில் லசந்த, எக்னலிகொட போன்றோருக்கு நிகழ்ந்ததுதான் ஜமால் கஷூகிக்கும் நிகழ்ந்தது.
கஷூகி நீண்ட அனுபவம் முதிர்ந்த ஒரு பரம்பரைக்கு உந்துகோலாக இருந்த ஒரு முன்னணிப் பத்திரிகையாளர். அவரது தொழில்சார் ஆர்வம் தாய் நாடான சவூதி எல்லைகளைத் தாண்டி, சூடான், அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், பலஸ்தின் வரை ஊடுருவியது. அங்கெல்லாம் ஊடுருவிச் செல்லும் ஊடகவியலாளராக  அவர் பணியாற்றினார்.
தனிப்பிட்ட வகையில் செயல் ஆர்வமும் பணிவும் கொண்டவர் கஷூகி. Middleast Monitor இணையத்தளத்தில்  அதிதிப் பக்கத்தை அலங்கரித்தவர். மரணிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் லண்டனில் இவ்விணையம் நடத்திய மத்திய கிழக்கு தொடர்பான கலந்துரையாடலொன்றில் பங்குகொண்டவர். தனது தாய் நாட்டையும் வளைகுடாப் பிராந்தியத்தையும் நேசித்த கஷூகி, தனது எழுத்தினூடே ஒரு சிறந்த பத்திரிகையாளருக்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். கருத்துச் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி, அரசாங்கத்தின் வகைகூறல் மற்றும் வெளிப்படைத் தன்மை என்பனவே அவரது எழுத்தின் சாரமாக இருந்தது.
அவரது பிராந்தியத்தின் எண்ணெய் வளம், அதனூடே கிடைக்கும் வருமானம் ஒட்டுமொத்த மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் கஷூகி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கஷூகி உடலளவில் மௌனமாக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவரது நினைவும் சிந்தனைகளும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் இளம் தலைமுறையின் உள்ளங்களில் என்றைக்கும் நிலைத்திருக்கும். மத்திய கிழக்கிற்கு அப்பால் முழு உலகத்திலும் அவரது நினைவு நிலைத்து நிற்கும்.
கடந்த ஒக்டோபர் 02 இல் துருக்கியின் உள்ளூர் நேரம் பி.ப. 1.14 மணியளவில் ஸ்தன்பூலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்திற்குள் அவர் நுழையும் காட்சி CCTVயில் பதிவாகியுள்ளது. இதுவே அவர் உலகின் பார்வைக்குத் தோன்றிய கடைசிக் காட்சி. அவர் தூதரகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அவர் மணம் முடிப்பதற்கு உத்தேசித்திருந்த துருக்கியப் பெண்ணான சென்ஜிஸின் கையில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை ஒப்படைத்து விட்டே உள்ளே நுழைந்தார்.
அவர் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் இதுதான். “உள்ளே எந்தப் பிரச்சினையையும் நான் எதிர்கொள்ள மாட்டேன். நான் திரும்பி வரவில்லை என்றால் துருக்கிய ஜனாதிபதி அர்தூகானின் ஆலோசகர் ஒருவருக்கு நீங்கள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அதனைத் தெரிவியுங்கள்.”
இரண்டு தொலைபேசிகளை கையில் வாங்கிய சென்ஜிஸ் தூதரகத்திற்கு வெளியே 10 மணித்தியாலங்கள் அவரின் வருகைக்காகக் காத்திருந்தார். ஆனால் கஷூகி திரும்பி வரவில்லை. ஒரு வருடமாகியும் கஷூகி இன்னும் உலகின் பார்வைக்குத் தோன்றவில்லை என்பதுதான் துயரம் நிறைந்த கதை.
அவரைப் பற்றி சவூதி ஆட்சியாளர்கள் என்ன சொன்னார்கள்? இரண்டு வாரங்களாக ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னார்கள். கஷூகிக்கு என்ன நடந்தது என்று தமக்கு எதுவும் தெரியாது என்பதுதான் அந்தப் பொய்.
இளவரசர் முஹம்மத் பின் சல்மான் புலூம்பேர்க் எனும் செய்தி நிறுவனத்திடம் “சில நிமிடங்கள், கூடினால் ஒரு மணித்தியாலம். அதற்குப் பின்னர் அவர் திரும்பி விட்டார்” என்றார். ஆனால் கடந்த ஆண்டில் ஒக்டோபர் 20 இல் இன்னொரு கதையை இவர்கள் பரப்பினர். சவூதி அறேபியாவிற்கு அவரை திருப்பி அழைத்து வர அதிகாரிகள் முயன்றபோது நடந்த சண்டையில் அவர் இறந்து போனார். இது ஆட்சியாளர்கள் சொன்ன இரண்டாவது பொய். இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்ட அறிக்கைகளை அப்போதைய வெளிநாட்டமைச்சர் ஆதில் ஜபைர் விட்டுக் கொண்டே இருந்தார்.
நவம்பர் 15 ஆம் திகதி சவூதியின் பிரதி நிதிபதி ஷாலான், பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அணியின் தலைவரால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறியிருந்தார். அது கூட ஒரு பொய்யாகவே இருந்தது. அவர் தூதரகம் நுழைந்த சில கணங்களிலேயே ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்பதே உண்மையாக இருந்தது.
துருக்கிய ஜனாதிபதி அர்தூகான் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கொலை நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின்னர் 2018 நவம்பர் 02 இல் கஷூகி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்டது. இத்தகைய கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்ற கேள்வி முக்கியமானது. கஷூகியின் உடல் எங்கே? அந்த உடலை உள்ளூரில் பொறுப்பெடுத்த கைக்கூலி யார்? அவரைக் கொல்வதற்குக் கட்டளையிட்டவர் யார்? துரதிஷ்டவசமாக சவூதி அதிகாரிகள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு மறுக்கின்றனர். “இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் இப்படியொரு கொலைக்கு உத்தரவு போட்டிருப்பார் என்பதை தன்னால் கற்பனை செய்ய முடியாதுள்ளது” என அர்தூகான் எழுதுகிறார்.
ஐ.நா. இந்த ராஜ கொலை (Royal Murder) குறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் இது சட்டத்திற்குப் புறம்பான ஒரு கொலை எனவும், சவூதி அறேபியா இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அந்த அறிக்கையை வெளியிட்ட Agnes Callamard  குறிப்பிட்டார். அதற்கும் ஒரு படி மேலே சென்று “இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கும் அளவுக்கு தன்னிடம் நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன” என்று எக்னெஸ் அந்த அறிக்கையில் சவால் விடுத்தார்.
அதேவேளை, துருக்கியின் புலன் விசாரணை சர்வதேச தரத்தில் இல்லை என்றும் அவர் வாதாடினார். துருக்கி அரசாங்கம் கொலை குறித்த ஒரு வீடியோ காட்சியை அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மன், பிரான்ஸ் சவூதி அறெபியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறியது. ஆனால் ஐ.நா.வுக்கு துருக்கி அதனை உத்தியோபூர்வமாக அனுப்பவில்லை. அது தனக்குக் கிடைக்கவில்லை என எக்னெஸ் சுட்டிக்காட்டினார். கஷூகியின் உடலுக்கு என்னநடந்து என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
ஒக்டோபர் 02 கஷூகியைக் கொல்வதற்கென்றே ஒரு கொலைக் கும்பல் சவூதியிலிருந்து அரசாங்க விமானத்தில் ஸ்தன்பூல் வந்தது. அவர்கள்தான் மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள முடியாத கொரூரமான வழிகளில் கஷூகியை கொன்று குவித்தனர் என்பதுதான் இதுவரை முன்னிறுத்தப்படும் வாதமாகும்.
கஷூகி உலகத்தை விட்டுப் பிரிந்து ஓராண்டு உருண்டோடி விட்டது. ஆனால் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. ஜமாலுக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை. இப்படி நீதி கிடைக்காத நேர்மையான பத்திரிகையாளர்களின் பட்டியல் நீண்டு செல்வது, நாகரிகமடைந்த மனித சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா என்ற கேள்வியை மீள மீள எழுப்பிக் கொண்டே இருக்கின்றது. sor/mp
ஊடகவியலாளர் ஜமால் கஷூகியை நினைவுகூர்தல் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 06, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.