Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொரோனா நோயாளியின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் ஜனாஸா இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவ துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதை தடுப்பதற்கு அவசரம் அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மேற்படி ஜனாஸா நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிவகிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர்.

நல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால், தண்ணீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் ஜனாஸாவை கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை. மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்த நிலையில் நீதவானின் விசாரணைகூட ஒரு பொருட்டாக இருந்திருக்க மாட்டாது.

குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அறிகிறோம்.

எங்களது சமயரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதுதொடர்பில் “COVID-19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை அகற்றுதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான நீதியரசர் சலீம் மர்ஸுப் அவர்களின் ஆய்வறிக்கையை வாசித்தால் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கொரோனா நோயாளியின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 01, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.