“உண்மைக்கு உண்மையாக , மனசாட்சியுடன் பயணிக்காத ஜனநாயகம் நிறைவுபெறாது”
சுதந்திரமான பத்திரிகை என்பது உணர்வுள்ள மக்களின் உறங்காக்கண்; அவர்களது நம்பிக்கையின் உறைவிடம்; மக்களின் வெளிப்படையான வாக்குமூலம்; அது மக்கள் தம்மைத்தாமே பார்த்துக் கொள்ளும் ஆன்மீகக் கண்ணாடி ‘என்றார் கார்ல் மார்க்ஸ்.
தனது இருபத்து நான்காவது வயதில் ஜெர்மனியின் முற்போக்கான பத்திரிகையாக மதிக்கப்பட்ட ’ரைனீஸ் ஸெய்துங்’ என்ற செய்தி ஏட்டின் ஆசிரியராக இருந்த கார்ல் மார்க்ஸைப் பொருத்தவரை” பத்திரிகை என்பது மனித சுதந்திரத்தின் விளைபொருள்”
“ஒரு ஊடகவியலாளர் எப்போதும் பயமின்றிப் பொதுவாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்” என்கிறார் அண்ணல் காந்தி. அவரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் உண்மைகளை வெளிக்கொண்டு வர போராடி, தமது உயிரையே இழந்த ஒரு பத்திரிகையாளரால் உருவானது ‘உலகப் பத்திரிகை சுதந்திர நாள் இன்று’
“ஜனநாயகத்துக்கான ஊடகம் என்று வீர வசனம் பேசிக்கொண்டு, தவறான தகவல்கள் வழங்குகின்ற கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் !”
இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்க வேண்டிய ஊடகங்கள் அதனை விட்டு விட்டு , இனங்களுக்கிடையில் மத ரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனங்களை பலியாக்கின்ற ஒரு சில ஊடக ஸ்தாபனங்களால் ஒட்டு மொத்த ஊடக தர்மமும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .
உண்மையான தகவல்களை சொல்லவேண்டிய ஊடகங்கள், உண்மைக்கு மாற்றமாக பொய்களையே செய்திகளாக பரப்பிக்கொண்டிருக்கின்றன. அட்டூழியங்களையும், அப்பாவிகளுக்கு எதிரான கொடுமைகளையும் அம்பலப்படுத்தி தோலுரிக்க வேண்டிய ஊடகங்கள் அதற்கு நேர்மாறாக அரசியல் வாதிகளுக்கு சாமரம் வீசும் நிலையே நீடிக்கிறது.
ஒரு செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லும் நபர்கள் எல்லோரும் புனித மானவர்கள் அல்ல..!
பத்திரிகை சுதந்திரம் என்பது இலங்கையில் கேள்விக்குறியாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கின்றவர்கள் எல்லோரும் கழுத்தில் ஏதோ பட்டியை தொங்க விட்டு வலம் வருகின்றவர்களிடம் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் இது .
நேர்மையாக ஊடக தர்மத்தை நிலை நாட்டுகின்ற போது ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத் தல்களும் தடைகளும் ஏராளம்.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகை யாளர்களை நிறுவனங் களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து சம்பந்தபட்ட பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
கடந்த காலங்களில் காணாமால் ஆக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட மற்றும் அச்சுறுத்தல்களுக்குள்ளான ஊடகவிலாளர்களுக்கு இதுவரை நீதி நிலை நாட்டப்படவில்லை.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும்’ என
சுதந்திரஊடக கண்காணிப்பு மையம் ஒரு பணிவான வேண்டு கோளை முன் வைக்கின்றது .
ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத் திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக் கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 3 ம் தேதி இந்நாள் உலக பத்திரிக்கை சுதந்திரதினமாக கொண்டாடப்படுகின்றது.
“மனித உரிமைகள் சாசனம்” உறுப்பு 19 (1 ) (a ) என்பதால் உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தில் உள்ளடங்கிய ஒன்றாக அது உள்ளது. இதை உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் அங்கீகரித்துள்ளன.
பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.
ஒரு பத்திரிகையாளர் வழங்கும் செய்தியானது எப்படி அதை ஆங்கிலத்தில் ‘News’ என்று அழைக்கின்றோம் .இது எப்படி ஏற்பட்டது? என்றால் ? நான்கு திசைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது. அதைக் குறிக்கும் விதமாக வடக்கு (North) கிழக்கு (East) மேற்கு (West) தெற்கு (South)என்னும் சொற்களின் முதல் எழுத்துகள் இணைந்துதான் ‘நியூஸ் என்ற பதம் உருவானது .
ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.
”ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி பணியாற்றவும் போராட இந்நாளில் உறுதியேற்போம்”
ஒன்றிணைவோம்
உரிமைகளை மீட்டெடுப்போம்!
இப்ரான்சா பௌமி
செயலாளர் நாயகம்
சுதந்தி ஊடக கண்காணிப்பு மையம்.
“உண்மைக்கு உண்மையாக , மனசாட்சியுடன் பயணிக்காத ஜனநாயகம் நிறைவுபெறாது”
Reviewed by www.lankanvoice.lk
on
மே 03, 2020
Rating:

கருத்துகள் இல்லை: