மட்டக்களப்பில் சஜீத் அணிக்கே ஆசனம் உறுதி: வண்ணத்துப்பூச்சி ஆசனத்தை இழக்கும் - முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆருடம்
மட்டக்களப்பில் சஜீத் அணிக்கே ஆசனம் உறுதி வண்ணத்துப்பூச்சி ஆசனத்தை இழக்கும்-முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆருடம்.
மட்டக்களப்பில் சஜீத் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கே தொலைபேசி சின்னத்திற்கே ஆசனம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நேற்று (16) இடம்பெற்ற Lankan Muslims இணைய தள நேர்காணலின் போது உறுதியாகத் தெரிவித்தார்.
குறித்த நேர்காணலில் நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலை, ஜனாஸா எரிப்பு விவகாரம், அதற்கெதிராக உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கு, மிக அண்மையில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தல் என பல்வேறு விடயங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதன் போது மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துல் றஹ்மான் எம்மோடு இணைந்துள்ளதன் காரணமாகவும், அவருக்கான தேசியப்பட்டியல் ஊர்ஜிதப்படுத்தப்படுள்ளதனால் எங்களுக்கான வெற்றி சாத்தியப்படும்.
தமிழ் தேசியக்கூடடமைப்பு மூன்று ஆசனங்களைப் பெறும் அதே வேளை, நான்காவது ஆசனத்தை தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் சஜீத் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ளும். அதற்காக சஜீத் அவர்களின் வேண்டுகோளின் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி முக்கியமான மிகவும் பலம் வாய்ந்த தமிழ் சகோதரர்கள் நேரடியாக சஜீதின் ஆலோசனையின் பேரிலும் வேண்டுதலின் பேரிலும் களமிறக்கப்பட்டுள்ளார்கள். எனவே, தொலையேசி சின்னத்தில் போட்டியிடும் சஜீத் அணிக்கு ஒரு ஆசனம் நிச்சயமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஐந்தாவது ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் மற்றும் பிள்ளையானுக்கிடையிலான கடும் போராட்டமாக இருக்கும். அந்த வகையில், பிள்ளையான் அணி சுமார் 27000 வாக்குகளைப் பெறும் படசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆசனத்தை இழக்கும் துரதிஸ்ட நிலை உருவாகுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.
தற்போது சூழ்நிலையில் தேர்தல் தொடர்பில் பேசுவதை விடவும், தேர்தல் நெருங்கிய பின்னர், தேர்தல் நடைபெற ஓரிரு வாரங்கள் உள்ள போது, பேசுவது பொருத்தமாக இருக்கும். அப்போது தான் சரியான கணிப்பீட்டைச்சொல்ல முடியும்.
முஸ்லிம் தரப்பைப் பொறுத்தவரை மட்டக்களப்பில் போட்டியிடுகின்ற சஜீத் அணி கூடுதலான வாக்கையும், இரண்டாவது முஸ்லிம் காங்கிரஸும் பெற்றுக்கொள்ளும் அதே வேளை, பஷீர், ஹிஸ்புல்லா இணைந்து வண்ணத்துப்பூச்சியில் போட்டியிடும் ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு அணி மூன்றாவது நிலைக்கு வரும். இரு ஆசனம் கிடைக்குமாக இருந்தால், வண்ணத்துப்பூச்சி ஆசனத்தை இழக்கும் நிலை வரலாம்.
கட்சித்தலைவர்கள் இணைந்து செயற்பட முன்வந்தாலும், பிராந்திய ரீதியாகவுள்ள குறுநில மன்னர்களின் போக்கு சற்று வித்தியாசமானது. சிறுபான்மைக்கட்சிகளில் தலைவர்களை விடவும் பிராந்தியத் தலைவர்கள் வெற்றி பெற வேண்டும். பாராளுமன்றத்துக்கு வந்து விட வேண்டுமென்பதற்காக தங்கள் செய்கின்ற தந்திரோபாயங்களும் விடயங்களும் தலைமைகளை சில வேளைகளில் தலை குனிய வைக்கின்றது.
அந்த வகையில் நாங்கள் பிரயாசைப் பட்டோம் இரு கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமென்று நினைத்தோம். புத்தளத்தில் ஒரு பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள அப்பிரதேச புத்திஜீவிகள், இளைஞர்கள், உலமாக்கள் இணைந்து அந்த மாற்றத்தைச் செய்துள்ளார்கள்.
அந்த மாற்றத்துக்கு இரண்டு கட்சிகளும் செவி சாய்க்க வேண்டியேற்பட்டது. உடன்பாட்டின் அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தோம். அம்பாறையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைப்பெறுமென்ற நிலையுள்ள போது, அதற்கான சரியான விட்டுக்கொடுப்பைச் செய்ய முன்வராத நிலையில், பிரிந்து கேட்க வேண்டிய நிலை உருவானது. அதற்குப்பதிலடி கொடுக்கும் செயற்பாடாகவே மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ளது.
புதிய உலகிலிருந்து வந்து அரசியல் செய்வது போன்று எங்களுக்கு எந்த அரசியலும் தெரியாதென்ற போக்கிலேயே அவர்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள். நாங்களும் தெளிவுபடுத்தினோம். அவர்கள் உடன்பாடு காணவில்லை.
தேர்தல் ஒன்று வருகின்ற போது இவைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவோம். கடந்த காலங்களிலும் தெளிவுபடுத்தியுள்ளோம். மக்கள் தெளிவுடன் நன்றாகச் சிந்திப்பார்களானால், அவர்களுக்கான நல்ல தலைவர்களைத்தெரிவு செய்து கொள்வார்கள். அரசியல் தலைவர்களை விடவும் மக்கள் பிழை விடுகிறார்கள்.
நல்ல அரசியல் தலைவர்களை இனங்கண்டு அவர்களைத் தலைவர்களாகத் தெரிந்து கொள்வதில் மக்கள் அசட்டையாக இருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் கிழக்கிலே பணம், அரிசி மூட்டைகளுக்கு சோரம் போகின்ற சமூகமாக மாற்றப்பட்டு வருகின்றார்கள் என்பது ஒரு துர்ப்ப்பாகிய நிலை.
இந்நிலை எதிர்காலத்திலும் நீண்டு செல்லுமாக இருந்தால், நிச்சயமாகா நல்லவர்கள், படித்தவர்கள் சமூகத்தைப்பற்றி உரைத்துப்பேச வேண்டியவர்கள் அரசியலிலிருந்து விடை பெற்றுச்சென்று விடுவார்கள். யாரோ ஒரு போதை வியாபாரி அல்லது வேறுபட்ட வியாபாரிகள் தான் முஸ்லீம் சமூகத்துக்கு எதிர்காலத்தில் தலைமை தாங்கிக் கொள்வார்கள் என்ற அச்சநிலையும் பயமும் என்னிடத்திலுள்ளது. நல்ல தலைவர்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்நாட்களில் பிரார்த்திக்கிறேன் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சஜீத் அணிக்கே ஆசனம் உறுதி: வண்ணத்துப்பூச்சி ஆசனத்தை இழக்கும் - முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆருடம்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 17, 2020
Rating:

கருத்துகள் இல்லை: