அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிநெறி மட்டக்ளப்பில் ஆரம்பம்
பிரதேச மட்டத்தில் செயற்படுகின்ற சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை குறைப்பது தொடர்பாக விசேட பயிற்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் (13) கல்லடி கிரீன் காடன் ஹோட்டலில் இடம் பெற்றது
இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் பிரதேச மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பாக கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் இயற்கை அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எவ்வாறு பாதிக்கபடுகின்றார்கள், எவ்வாறு பாதிக்கப்படுவார்கள், அவர்களை எவ்வாறு பாதுகாக்கவேண்டும்,
இப்பாதிப்புகளிலிருந்து எவ்வாறு மீள்வது தொடர்பாக அறிந்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் பெற்றோரை இழந்த பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் அரவனைப்பற்ற பிள்ளைகளை எவ்வாறு அரவணைப்பது பற்றி ஆராய வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு யுனிசெப் நிருவனத்தின் நிதிப்பங்களிப்புடனும் செரி அமைப்பின் நிகழ்ச்சித்திட்டத்திலும் ஏற்பாடாகியிருந்தது.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனித செயற்பாடுகளினால் ஏற்படும் அனர்த்தங்களின்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பதற்குத் தேவையான பயிற்சிகள் இவ்வுத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இரண்டு நாள் செயலமர்வாக இடம்பெறும் இந்நிகழ்ச்சித்திட்டம் மன்முனை வடக்கு, ஏறாவூர் பற்று மற்றம் ஏறாவூர் நகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு முன்னோடித் திட்டமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என். அன்றூ லசாரஸ்;, செரி அமைப்பின் என்.ஈ. தர்சன், வளவாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பயிற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிநெறி மட்டக்ளப்பில் ஆரம்பம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 14, 2020
Rating:

கருத்துகள் இல்லை: