நாட்டில் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாகப் பிரார்த்திப்போம்.இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
நமது நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாக இந்தப் பெருநாள் தினத்தில் அனைவரும் பிரார்த்திப்போம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது வருடம் நாம் நிம்மதியாக ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2019 இல் சஹ்ரானின் மிலேச்சத்தனமான குண்டு வெடிப்பினாலும், அதன் பின் எற்பட்ட சூழ்நிலைகளினாலும் நாம் மிகவும் அச்சமடைந்த நிலையில் இருந்தோம். அதனால் அந்த வருடம் சந்தோசமாக பெருநாள் கொண்டாட முடியவில்லை.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு, பயணத்தடை, தனிமைப்படுத்தல் போன்றனவற்றால் நாம் வீடுகளுக்குள் முடங்கி இருந்தோம். அதனால் பலர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோம். எனவே, இந்த ஆண்டுகளிலும் திருப்தியான முறையில் பெருநாள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு மேலதிகமாக முஸ்லிம்கள் என்ற வகையில் ஜனாஸா எரிப்பு, காதி நீதிமன்றத்தடை, மத்ரசா தடை என இன்னும் பல பிரச்சினைகள் எமக்கு எற்படுத்தப்பட்டன. இதனால் நாம் பெருங்கவலையோடு வாழ்ந்து வந்தோம்.
இதனைவிட சகல பொருட்களினதும் விலை உயர்வினால் இந்நாட்டிலுள்ள சகல மக்களினதும் வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கும் முடிவு காணப்பட வேண்டும்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே இப்போது நாங்கள் மூன்றாவது வருடமாக மிகவும் எளிமையான முறையில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஹஜ்ஜுப் பெருநாள் இஸ்லாமிய வரலாற்றில் தியாகத் திருநாள். இப்ராஹீம் நபி அவர்களது குடும்பத்தினரது தியாகம் இப்பெருநாள் தினத்தில் நினைவு கூரப்படுகின்றது. ஹஜ்ஜுக் கடமைக்காக புனித மக்கா நகர் செல்லும் ஹாஜிகள் அனைவரும் இந்த வரலாற்று இடங்களை நேரில் தரிசித்து நல்லமல்கள் செய்து வருவார்கள்.
இந்தக் கொரோனா பெருந்தொற்றினால் ஹஜ்ஜுக்குச் செல்லும் பாக்கியம் கூட கடந்த இரு வருடங்களாக நமது மக்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே, இந்த நிலைமைகள் அனைத்தும் நீங்க வேண்டும். சகல மக்களும் மிகவும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும். இதற்காக நாம் அனைவரும் மனமுருகிப் பிரார்த்திப்போம்.
நாட்டில் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாகப் பிரார்த்திப்போம்.இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 20, 2021
Rating:

கருத்துகள் இல்லை: