கழுத்தை பிடித்தது மொட்டு கட்சி! கடுப்பாகி வெளியேறுவாரா தயாசிறி?
அரசின் தீர்மானங்களை ஏற்கமுடியாவிட்டால் , இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரசியிலிருந்து வெளியேறுவதே சிறந்தது,” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதான பங்காளிக்கட்சி அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
”பஸில் ராஜபக்ச மற்றும் பிபீ ஜயசுந்திர ஆகியோரின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவை அல்ல. சட்டிமுட்டி, பத்திக் என நகைச்சுவைத்தனமாக இராஜாங்க அமைச்சுகளைக்கூட பஸிலே உருவாக்கினார். அவர் நாடாளுமன்றம் வருவதால் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை.”–என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கடும் சீற்றத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,
”ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆளுந்தரப்பின் பிரதான பங்காளிக்கட்சி அல்ல. அரசின் தீர்மானங்களை ஏற்க முடியாவிட்டால் அரசியிலிருந்து வெளியேறலாம். அரசால் எடுக்கப்படும் தீர்மானங்களை உள்ளே இருந்து விமர்சிப்பதற்கு உரிமை கிடையாது. எனக்கு எதாவது அமைச்சு பதவி கிடைத்தால் அதனை சிறப்பாக செய்யவே முற்படுவேன். வழங்கப்பட்ட அமைச்சை விமர்சிப்பதென்பது கீழ்த்தரமான செயற்பாடாகும்.” – என்றார்.
அதேவேளை, சுதந்திரக்கட்சியில் உள்ள வேறு நபருக்கு இராஜாங்க அமைச்சு பதவியை வழங்குவதற்கு தயாசிறி ஜயசேகர முன்வர வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: