Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்... ஜனாதிபதி

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா கொண்டாட்டம் ஜனாதிபதியின் பங்களிப்புடன் நடைபெற்றது.

பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்த்தையும் ஆன்மீக குணத்தையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகaம் முன்மாதிரியானது

-ஜனாதிபதி

பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  (07) கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் ஆன்மீகத்தை கட்டியெழுப்புவதற்காக பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள அன்னார், பாரிய சேவையாற்றும் ஒரு ராஜதந்திரி , பைபிளை மிக நன்றாக விளக்கி விடயங்களை முன்வைக்கக்கூடிய ஒரு வேத விற்பன்னர், சமூகத்தை எழுச்சியூட்டும் வலுவான ஆளுமை கொண்ட ஒரு பேச்சாளர் போன்ற பாத்திரங்களுக்கு அப்பால் உண்மையான மனிதநேயர் என்றும் ஜனாதிபதி கூறினார்.

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் இருந்து ஆராயப்பட வேண்டிய ஒரு சவால் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தனது 50 வருடகால அனுபவத்தை இதன் போது நினைவு கூர்ந்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை , 75 ஆண்டுகால சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியினால் முடிந்திருப்பது குறித்து பாராட்டுத் தெரிவித்தார்.அத்தோடு நாட்டில் பல்வேறு இனக்குழுக்களிடையே வெறுப்பை விதைக்கும் அரசியல் கலாச்சாரத்தை வேரோடு ஒழிக்க முடிந்திருப்பது குறித்தும் அன்னார் தனது நன்றியைத் தெரிவித்தார். நாட்டை ஒரு வளமான தேசத்தை நோக்கி இட்டுச் செல்வதில் ஒரு புதிய அணுகுமுறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்க்கையின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உறை என்பன இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு குருநாகல் பொல்கஹவெலயில் பிறந்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி பரிசுத்தப் பாப்பரசர் ஆறாம் பவுலினால் வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் பெசிலிக்கா பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1978 முதல், அவர் பங்கு உதவித் தந்தையாகவும், பதில் பங்குத் தந்தையாகவும், இறையியலில் கலாநிதியாகவும் பணியாற்றியுள்ளதுடன், அவர் இறையியல் ஸ்தாபனங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இந்தோனேசிய மொழிகள் உட்பட பல மொழிகளில் புலமை பெற்றவர்.

1991 ஆம் ஆண்டு, அப்போதைய பேராயர் நிக்கலஸ் மார்கஸ் பெர்னாண்டோவின் தலைமையில், தேவத்தை லங்கா அன்னையின் பசிலிக்காவில், கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, 2009 ஜூன் 16 ஆம் திகதி, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டதுடன், ஒரு வருடம் கழித்து, 2010 நவம்பர் 20, ஆம் திகதி, இத்தாலியில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் பசிலிக்காவில் கர்தினாலாக நியமிக்கப்பட்டார். அதன்படி, கர்தினால் பதவியைப் பெற்ற இரண்டாவது இலங்கை அருட்தந்தை மாண்புமிகு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆவார். அவர் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஏராளமான பதவிகளை வகித்துள்ளதுடன், சர்வதேச கூட்டங்கள் பலவற்றுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள அன்னார், அமெரிக்காவில் உள்ள தோமஸ் அக்வைனாஸ் கல்லூரியில் மத விவகாரக் கல்விக்கான தோமஸ் அக்வைனாஸ் பதக்கம் மற்றும் 2008 ஆம் ஆண்டு கலாசாரத் துறையில் சாதனைகளுக்காக இத்தாலியக் குடியரசின் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட 7 ஆவது Giuseppe Sciacca சர்வதேச விருதையும் பெற்றுள்ளார். ஒரு எழுத்தாளரான அவர் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இந்த நிகழ்வில் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண, நியங்கொட விஜிதசிறி தேரர் மற்றும் கலாநிதி வண, ஓமல்பே சோபித நாயக்க தேரர் ஆகியோர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மகா சங்கத்தினர், சர்வமதத் தலைவர்கள், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஹெரல்ட் அந்தோணி பெரேரா,இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி மொன்சிக்னோர் ரொபர்டோ லுகினி,கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா, அந்தோனி ஜயக்கொடி உள்ளிட்ட கத்தோலிக்க அருட்தந்தைகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்... ஜனாதிபதி Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 08, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.