Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வடகிழக்கு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு!


 “பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படைகள், சட்டம் ஒழுங்கை மீறிக் கொடூரச் செயல்களில் ஈடுபடுவது நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றது.

எனவே, நீதி, பொறுப்புகூறல் மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (18 ஆம் திகதி) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.” – என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இன்று சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

” முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகின்றது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படி கொடூரச் செயல்களைச் செய்வது, இந்த நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றது.

இப்படிப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதில் அரசின் இயலாமை அல்லது விருப்பமின்மை, பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, நிரபராதிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.

இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவெனில் அரசு இஸ்ரேலில் இருந்து பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கும் போக்காகும். இவர்கள் பலர் காசாவில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுப்பினர்களே.

இந்தச் சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (18 ஆம் திகதி) இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள ஹர்த்தாலை முழுமையாக ஆதரிக்க எங்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இது நீதி, பொறுப்புக்கூறல், மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாகும்.

வடக்கு, கிழக்கில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும் எதிர்வரும் திங்கட்கிழமை குறைந்தபட்சம் காலை நேரத்தில் தங்கள் கடைகள் மற்றும் தொழில்களை மூடுவதன் மூலம் இந்த ஒற்றுமைப் போராட்டத்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.” – என்றுள்ளது.

வடகிழக்கு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 17, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.