Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

என் எம் அமீனின் ஓய்வு: ஊடகப் பெருவெளியில் ஓர் ஆய்வு



அமைப்புக்களின் ஆயுள், தலைமைகளின் ஆளுமையில் தங்கியுள்ளதா? முதுமையுடன் முதிர்ச்சியும் முடிவடைகிறதா.....?

இயக்கங்களின் இயங்குதல்களுக்கு ஆளுமையும் அவசியமா? ஆளுமையும், முதிர்ச்சியும் தலைமைகளை திறம்படச் செதுக்குகிறதா? ஸ்தாபகத் தலைமைக்குப் பின்னரான தலைமைகள் தலையெடுத்துச் சாதித்திருக்கிறதா? இதுபோன்ற எண்ணக் கிளர்ச்சிகளில் எனது இதயம் சிறைப்பட்டிருக்கிறது. இத்தனை வருடகாலத்து அனுபவங்களை எடைதூக்கிப் பார்க்கிறேன். விடையைக் காண்பதுதான் கடினமாகவுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் 30 ஆவது வருடாந்த மாநாட்டுக்கான நேரம் நெருங்குவதால், என்னை நெருக்கும் கேள்விகளே இவை. என்.எம். அமீன், நான்கு தசாப்தங்களின் ஊடகநாயகன். முஸ்லிம் மீடியா போரத்துக்கென்றே உயிர் வாழும் பிறவி இவர். எதிர்வரும் மாநாட்டுடன் ஓய்வு பெறுகிறாராம். ஒய்வை விடுத்து தொடர்ந்தும் அமைப்புக்காக உழைக்குமாறும் சில வேண்டுகோள்கள். எத்தனையோ அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் அமீனுக்கு, அடையாளமாக விளங்குவது முஸ்லிம் மீடியாபோரம்தான்.

கொழும்பில் இயங்கிய பல இயக்கங்கள் 2002 ஆம் ஆண்டு வடக்கு முஸ்லிம் அகதிகளின் நலன்களுக்காக ஒன்றிணைந்து ‘நிவாரண மையம்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருந்தன. இதன் சிறப்பியல்புகளை கருத்திற் கொண்டு, பின்னர் "முஸ்லிம் கவுன்சிலாக" இது பெயர் மாற்றப்பட்டது. இந்த அமைப்புக்கும் எமது அமீன் நானாவே, தலைவராக்கப்பட்டிருந்தார். ஆனாலும் இவரை அடையாளப்படுத்தியது “ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம்" தான்.

முஸ்லிம் ஊடக அமைப்புக்களுக்கான தேவை 1985 ஆம் ஆண்டு உணரப்பட்டிருந்தது. அந்நேரத்தில், 'எக்கனமிக் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் மர்ஹூம் ஏ.சி.ஏ. கபூர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ‘முஸ்லிம் மீடியா எலையன்ஸுக்கு’ (Muslim Media Alliance) நமது அமீன்தான், செயலாளராக செயலாற்றியவர். பின்னொருகாலத்தில், நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையால் எந்த அமைப்புக்களும் செயற்பட முடியாமலாயிற்று.

இவ்வாறு செயலற்றுச் சுவாசம் தொலைந்திருந்த அமைப்புக்களுக்கு உயிரூட்டும் வகையிலேயே 1995 ஆம் ஆண்டு ஜுலை 19 இல், நமது "முஸ்லிம் மீடியாபோரம்” மூச்செடுத்தது. எஸ். பி. சி . ஹலால்தீனை தலைவராகவும் என்.எம். அமீனை செயலாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் மீடியா போரத்துக்கு, ஆரம்பகால உறுப்பினர்கள் பலரது உழைப்புக்கள் உரமாகின.

இந்த வகையில்,எம். பி.எம் . அஸ்ஹர், எஃப்.பைரூஸ், எம்.இஷட். அஹமட் முனவ்வர், ரஷீட்எம். ஹபீழ், எம்.கே .முபாறக்அலி , ஹில்மி மொஹமட், எம்.ரி எம். ரிஸ்வி, பி.எம்.முர்ஷிதீன், எம்.ஏ.எம்.நிலாம், எம்.எஸ்.அமீர்ஹுஸைன், எம்.எஸ்.எம். ஐயூப், தாஹா முஸம்மில் மற்றும் எம்.ஏ. அபுல்ஹஸன் ஆகியோர் அணிகலன்களாகினர்.

அடிக்கடி காணாவிட்டாலும் முஸ்லிம்மீடியா போரச் செயற்பாடுகளின் செய்திகள், அமீனை ஞாபகமூட்டும். தினகரன் பத்திரிகையின் இணைச் செய்தியாசிரியராக (Associate News Editor) என்.எம். அமீன் செயலாற்றிய காலத்தில்தான், அவரைக் காணக் கிடைத்தது. மாளிகாவத்தையில் நடந்த மீலாத் விழாவில், செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில், அமீனின் உறவு எனக்குள் ஊடுருவியது.

கொழும்பு மத்திய தினகரன் நிருபராக பணியாற்றிய நான், இந்தச் செய்தியை எழுதச் சென்றிருந்த காலமது. இத்தனைக்கும் , லேக்ஹவுஸ் பக்கமே செல்லாமல் அடிக்கடி தினகரன் பத்திரிகைக்கு செய்திகளை எழுதி வந்தேன். இதனால், தினகரனின் அப்போதைய பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் என்னைத் தேடிக் கொண்டிருப்பதை இச்சந்திப்பிலேயே அமீன் எனக்கு அறிவித்துவிட்டார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அப்போது பணியாற்றியிருந்த முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளர்களான பொத்துவில் அசாத் மௌலானா மற்றும் எம்.எம். இர்பான் ஆகியோரும் ஊடகத்துறையில் நான்,நுழைவதற்கு உந்து சக்தியாக இருந்தனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் NDT (Eng.) இறுதிப் பரீட்சையை முடித்து வெளியேறியிருந்த காலப்பகுதிக்குள்ளேயே, தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றத் தொடங்கினேன். பின்னொரு காலத்தில், அமீன் வகித்திருந்த அதே, இணைச் செய்தியாசிரியர் பதவியை நானும் வகித்திருந்தேன்.

கால நகர்ச்சியில், லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளின் முகாமைத்துவ ஆசிரியராக (Managing Editor) என்.எம். அமீனின் பதவி, உயர்வடைந்தது. இக்காலத்தில்தான், தினகரன் இணைஆசிரியராக (Associate Editor) நான், பணியாற்றினேன். லேக்ஹவுஸ் கால அமீனின் சகவாசங்கள், பல சுவாரஸ்யங்களை எனது நெஞ்சில் நிறைத்துள்ளன.

ஊடகத்துறைக்குள் நுழைந்ததால், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தை அமீன் வழிநடத்திய விதங்களின் விசித்திரங்களை என்னால் ஊடுருவி நோக்க முடிகிறது.

மர்ஹூமாகிவிட்ட எப்.எம். பைரூஸ், இறைவனின்அருளால் ஆயுளோடு உள்ள எம்.ஏ.எம். நிலாம் அமீர்ஹுஸைன், நான் உட்பட பிராந்திய நிருபர்களில் சிலரே முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகாலச் செய்திகளைத் திரட்டி தினகரனுக்கும் ஏனைய பத்திரிகைகளுக்கும் வழங்கியவர்கள்.முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சிக்கு தினகரன் பத்திரிகை ஒரு தாயாகவே செயற்பட்டது.

பெரும்பாலும் கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில்தான், வருடாந்த மாநாடு நடப்பதுண்டு. இலவசமாக இந்த ஹோட்டலை தந்துதவினார் பரோபகாரி மர்ஹூம் அப்துல் டபிள்யு. எம்.அமீர். மட்டுமல்ல சிற்றுண்டி உட்பட சகலதுக்கும் இவரது உதவிக்கரங்கள் முஸ்லிம் மீடியாபோரத்துக்கு உதவின. சேகரித்த செய்திகளை ஓட்டமும், நடையுமாக லேக்ஹவுஸுக்கு கொண்டுவந்த ஞாபகங்களை சில நேரங்களில், நான் மீட்டிப்பார்ப்பதுமுண்டு.

மர்ஹூம்களான முன்னாள் அமைச்சர்கள் எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் அலவிமௌலானா,வேதாந்தி ஷேகு இஸ்ஸடீன் ஆகியோரின் ஆற்றுப்படுத்தல்கள் முஸ்லிம்மீடியா போரத்துக்கு கனதியாகின. அதேபோல ஏ.எச்.எம்.பௌஸி, ரவூப்ஹக்கீம், எம்.எம்.சுஹைர் இன்னும் ஜீ.எல்.பீரிஸ், நீலன்திருச்செல்வம் ஆகியோர், முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் பங்கேற்று தெரிவித்த அரசியல் கருத்துக்கள் காலத்தால் நிலைக்கின்றன.

பெரும்பாலும் என்.எம். அமீனின் அழைப்பை கௌரவிக்கும் வகையில்தான், இவர்களின் பங்கேற்புக்கள் இருந்தன. புரவலர் ஹாசிம் உமர், இசைக்கோ நூர்தீன் ஆகியோரை முஸ்லிம் மீடியா போரத்தின் முதுசங்களாகப் பார்க்க முடியும்.

மொழித்திறமையும், அரசியல் பின்புலங்களும் பலதுறைகளில் அமீனைப் புடம் போட்டுள்ளது. அவரிடமுள்ள சமூகப் பிரியம் அவருக்குரிய தன்மானம். இதுவே, எனது திண்ணம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால் என்.எம். அமீன் ஒரு சமூகப்போராளி. ஊடகங்களூடாக சமூகக் குரலாக ஒலித்த உண்மையாளன்.

சிங்களச் சீமைக்குள் சிதறி வாழ்ந்த தென்னிலங்கை முஸ்லிம்களை, தேசப்பற்றுக்குள் உள்ளீர்த்த உத்தமன். இதனால், அசாதாரண காலங்களில்கூட, சிறுபான்மை சமூகங்களை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய அபார ஆற்றலாளராக அமீன் பார்க்கப்படுகிறார்.

தமக்கென ஓர் அரசியல் இருந்தாலும், முஸ்லிம் சமூகத்துக்காக பொதுத்தளத்தைப் பண்படுத்தி முஸ்லிம்அரசியல் தலைமைகளை, ஒரே மேடையில் முழங்கச் செய்திருந்தது அமீனின் தலைமைத்துவம். பொறுமை, எதிரிகளுடனும் இணங்கிச் செல்லும் அவரது அதிசய மனோபாவங்கள்தான், அமீனை உயர்த்திய ஏணிப்படிகளாகும்.

அமீனின் இத்தனை இயலுமைகளும் அவரது ஓய்வுக்குப் பின்னர், அமைப்பின் இயலாமைகளாகிவிடுமா?வரப்போகும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைமை, இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழுமா? சமூக அடிநாதத்தின் அடித்தளத்தில், புதிய செயற்பாடுகள் கட்டமைக்கப்படுமா? காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை. களத்தில் குதித்துள்ளோர், தமது உள்ளீடுகளை சுய பரிசீலனைகளுக்காக மனச்சாட்சி மேடைகளில் ஒப்படையுங்கள்.

ஓய்வுறும் அமீன் நானா, இனிமேல் ஊடகப் பெருவெளியில் நாவாலே நம்மை வழி நடத்தட்டும்.
-சுஐப் எம் காசிம்
என் எம் அமீனின் ஓய்வு: ஊடகப் பெருவெளியில் ஓர் ஆய்வு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 14, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.