Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவு நமக்கு உள்ளது. ஆளும் தரப்பாக நமக்கு வழங்கப்பட்டுள்ள வகிபாகத்தை முறையாக இனங்கண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க முடியும்

சரிவடைந்துள்ள சமுதாயத்தை சீர்படுத்துவதில் மகா சங்கத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது.புதிய அஸ்கிரி அநுநாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறையால் சமூகத்தை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்ற பாதாள ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை ஒருபோதும் மாற்றியமைக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

அந்த சமூக மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதில் மகா சங்கத்தினருக்கு முக்கிய பங்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த காலங்களில், அரசுக்கு சவால் விடப்பட்ட போதெல்லாம், அதற்கு எதிராக முன்வந்தது மகா சங்கத்தினரே என்றும் குறிப்பிட்டார்.

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகுல் மடுவவில் இன்று (03) பிற்பகல் நடைபெற்ற சியம் மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரை தரப்பின் புதிய அனுநாயக்க அதி வணக்கத்திற்குரிய நாரன்பனாவே ஆனந்த நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பக்தியுள்ள, ஒழுக்கமான மற்றும் மிகவும் திறமையான, சிறந்த தேரரான அதி வணக்கத்திற்குரிய நாரன்பனாவே ஆனந்த நாயக்க தேரர் ஆற்றிய தேசிய, சமய, சமூக மற்றும் கல்விச் சேவைகளை ஜனாதிபதி பாராட்டியதுடன், இந்த யுகம் வணக்கத்திற்குரிய நாரன்பனாவே ஆனந்த அனுநாயக்க தேரர் போன்ற ஆயிரக்கணக்கான ஆன்மிகத் தலைவர்கள் தேவைப்படும் ஒரு யுகம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், கிராமங்களுக்குச் சென்று மக்களை விழிப்புணர்வூட்டுவதில் மகா சங்கத்தினர் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் போது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், நாட்டின் வரலாற்று பாரம்பரியம், இயற்கை அழகு, வனவிலங்கு பகுதிகள் மற்றும் இலங்கை மக்களின் விருந்தோம்பலுக்கு உலகளாவிய பாராட்டு போன்ற காரணிகளின் அடிப்படையில் சுற்றுலாத் துறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய அனுநாயக்க தேரருக்கு ஜனாதிபதி ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்கியதுடன், புதிதாக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய அனுநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

எமது சமூகமும் புத்த சாசனமும் பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் இந்த அனுநாயகப் பதவிக்கு நாரன்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தனித்துவமான குணங்களான பொறுமை, கருணை மற்றும் துணிச்சல் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக்குவதற்குப் பெரும் உறுதுணையாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

எமது சமூகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை எமக்கு மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆனால் ஒரு சமூகம் பெரும் அழிவை சந்திக்கும்போது, ​​அந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம்.

நமது சமூகம் பல வழிகளிலும் சரிந்துவிட்டது. மற்றவர்களின் துன்பங்களுக்கு அனுதாபம் இல்லாத, இரக்கமற்ற மக்களாக நாம் மாறிவிட்டோம். சேகரித்துள்ள செல்வமும் அதிகாரமும் நன்மை தீமைகளை அளவிடுவதற்கான அளவுகோல்களாக மாறிவிட்டன. எனவே, நமது சமூகத்திற்கு ஒரு சிறந்த ஒழுக்கக் கட்டமைப்பு தேவை.

பௌத்த மதம் நமக்கு ஒரு விழுமிய முறையைக் கற்றுக் கொடுத்துள்ளது. இன்று, அவை அனைத்தும் சிதைந்து, சமூகத்தில் மாற்றமடைந்த மதிப்புகளின் அமைப்பு உருவாகியுள்ளது. எனவே, இந்த சமூகத்தில் எது நல்லது என்பதை வரையறுக்கும் விழுமிய அமைப்பை மீண்டும் நிறுவுவது அவசியம். ஒரு அரசாக நமக்கு வழங்கப்பட்டுள்ள பங்கைப் புரிந்துகொண்டு நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இருப்பினும், இந்த சமூகத்தை சீர்படுத்தும் பணியில் மிகப்பெரிய பங்கு மகா சங்கத்தினருக்கும் உண்டு.

இன்று, எமது நாட்டில் அரசியலமைப்பால் நிறுவப்பட்ட ஒரு அரசாங்கம் உள்ளது. அதேபோல், எமது நாட்டில் ஒரு பாதாள ஆட்சி உள்ளது, அது அவ்வளவு சக்திவாய்ந்ததாக இல்லை, ஆனால் ஆயுதங்களின் சக்தியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மேலோட்டமான அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. எனவே, சட்ட மற்றும் அரசியலமைப்பு ஆட்சியின் பாதுகாப்பிற்காக, இந்த பாதாள ஆட்சியை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நமது அரசாங்கம் அந்த பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று உறுதியளிக்கிறேன்.

அண்மைய நாட்களில் நாம் பார்த்த செய்திகள், அந்தக் பாதாள ஆட்சியின் மூலம் நம் நாடு எவ்வளவு அழிவுகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. போதைப்பொருள், ஆயுதங்கள், சட்டவிரோத சொத்துக்கள், சேகரித்த செல்வம், அதற்காக ஆயுதங்களைக் கையாளக்கூடிய ஒரு சமூகம், அந்த ஆயுதங்களைக் கொண்டு மக்களைச் சுட்டுக் கொல்லக்கூடிய மனநிலை கொண்ட இளைஞர்கள் என ஒரு சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தை சீர்படுத்த, பாதாள ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். அதற்காக, ஒரு அரசாங்கமாக நாம் நமது பங்கை மிகவும் வலுவாக நிறைவேற்றுகிறோம்.

இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, சமூகத்தை தூய்மைப்படுத்தி புதிய மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்வதில் நமது மகா சங்கத்தினருக்கு பெரும் பங்கு உண்டு. எனவே, இந்த சமூகத்தை சீர்படுத்தும் பணியில் நமது தேரர்களின் அறிவுரைகளும் வார்த்தைகளும் மிக முக்கியமானவை.

இரண்டாவதாக, ஒரு சமூகமாக நமக்கு ஆன்மீகம் தேவை. நமது ஆன்மீக வாழ்க்கையை வளர்ப்பதற்கான அடித்தளம் பௌத்த கலாசாரம். பௌத்த கலாச்சாரத்தால் நமது ஆன்மீகத்திற்கு வரும் நன்மைகளை சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் அழிக்க முடியாது. அது ஒரு வரலாற்று பிணைப்பு.

நமது பௌத்த கலாச்சாரம் பல ஆண்டுகளாக நிலைத்து இருப்பதன் இரகசியம் என்னவென்றால், இந்த கலாச்சாரம் மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளதேயாகும். நமது பெருமைமிக்க மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தது மகா சங்கத்தினர்கள். இருப்பினும், இந்த மதத்தின் பாதுகாவலர்களான நமது தேரர்கள் பற்றி நாம் காணும் சில செய்திகள் மற்றும் நிகழ்வுகள் இந்த மதத்தின் இருப்புக்கு ஏற்றவை அல்ல என்று நான் நம்புகிறேன்.

அதற்குத் தேவையான சட்ட அடிப்படையைத் தயாரிக்க வேண்டும் என்று எங்கள் மகாநாயக்க தேரர்கள் எப்போதும் கூறியுள்ளனர். குறிப்பாக, விஹார தேவலகம் சட்டத்தின் பிரிவு 41 மற்றும் பிரிவு 42 க்கு தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை வழங்குமாறு அவர்கள் எங்களிடம் கோரினர். அந்தத் திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பப்பட்டன.

தேரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளுடன் இது திருத்தப்பட்டு, இப்போது சட்ட வரைவுத் திணைக்களத்தில உள்ளது. விரைவில் அந்தச் சட்டத்தை உருவாக்கி, சாசனத்தின் நிலைத்தன்மைக்காகப் பேணப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்களை பேணத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்குவோம். ஒரு அரசாங்கமாக நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பங்காக இதனைக் கருதுகிறோம்.

அது மட்டும் போதாது. நமது வணக்கத்திற்குரிய ஆனந்த அனுநாயக்க தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் தேவைப்படும் ஒரு சகாப்தம் இது. அவர் விரிவான கல்வி மற்றும் அறிவு கொண்ட தேரர். மேலும், சுமார் நான்கு தசாப்த கால பிக்கு வாழ்க்கையில், அவர் மக்களுக்கும், சமயத்தின் நிலைத்தன்மைக்கும், தாய்நாட்டின் பாதுகாப்பிற்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்தார். மேலும், அவர் மிகவும் கடினமான சவால்களை ஏற்றுக்கொண்டு சாதித்துள்ளார். சமயத்தின் நிலைத்தன்மைக்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் இத்தகைய தேரர்கள் இன்று அவசியம்.

நமது நாட்டின் சமூகத்தில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம், நமது மகாநாயக்க தேரர்கள் தீவிரமாக தலையிட்டு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவது அவசியம். அவ்வாறின்றி, நிறைவேற்று அதிகாரத்தையும், பாராளுமன்றத்தில் 2/3 பங்கையும் கொண்ட ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியும் என்ற மனநிலையுடன் ஒரு அரசாங்கம் முன்னேற முடியாது. ஒரு அரசாங்கம் முழு சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கமாக மாற வேண்டும்.

ஒரு அரசாங்கத்திற்கு, குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு, வரம்புகள் இல்லை என்றாலும், எங்களுக்கு வரம்புகள் உள்ளன. எனவே, அவற்றில் சில நடைமுறை வரம்புகளையும், சில சட்ட வரம்புகளையும் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறோம். எனவே, ஒரு அரசாங்கம் என்பது வரம்புகள் இல்லாமல் தாங்கள் விரும்பியதைச் செய்யக்கூடிய இடமல்ல.

நமது வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட நமது தேரர்கள், இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வரலாறு முழுவதும் ஆலோசனை வழங்கியுள்ளனர். அரசு அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதெல்லாம், அதன் பாதுகாப்பிற்காக அவர்கள் தலையிட்டுள்ளனர். தேரர்களின் பாரம்பரியம் அப்படித்தான். அந்த பாரம்பரியத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சுற்றுலாத் துறை குறித்த கலந்துரையாடலின் போது, ​​நமது வரலாற்று பாரம்பரியத்தில் இந்த சுற்றுலாத் துறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கலந்துரையாடப்பட்டது. மேலும், நமது நாட்டின் இயற்கை அழகு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாகும். மேலும், நமது வனவிலங்குப் பகுதிகள் மற்றும் நமது மக்களின் விருந்தோம்பல் மீதான உலகத்தின் பாராட்டு மிகவும் முக்கியமானது. அது இல்லாமல், ஏனைய விடயங்கள் நமது சுற்றுலாத் துறையின் மூலங்கள் அல்ல.

மேலும், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளதை அவதானித்துள்ளேன். முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட திருத்தத்தை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போதிலும் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இப்போது தேவைப்பட்டால் அதில் மேலும் திருத்தங்களைக் கொண்டுவரவோ அல்லது அதை அப்படியே விட்டுவிடவோ நமக்கு வாய்ப்பு உள்ளது. இந்தச் சட்டங்கள் எதுவும் நமது தனிப்பட்ட நலன்களுக்காகத் தயாரிக்கப்படவில்லை.

இந்தச் சட்டம் பொது நலனில் கவனம் செலுத்துகிறது. சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவு நமக்கு உள்ளது. ஆளும் தரப்பாக நமக்கு வழங்கப்பட்டுள்ள வகிபாகத்தை முறையாக இனங்கண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க முடியும். அதில் பெரும்பகுதி நமது மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலட்சக்கணக்கான இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் போதைப்பொருள் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர ஒரு பாரிய தேசியசெயற்பாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். எனவே, அதற்கு அடிமையானவர்களையும், அதை விற்பனை செய்பவர்களையும் அதை விட்டுவிடுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். அதற்காக, இந்த முழு சமூகமும் விழித்தெழ வேண்டும். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மகா சங்கத்தினர் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

மல்வத்து-அஸ்கிரி உபய மகா விஹாரையின் வணக்கத்திற்குரிய அனுநாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே, பஸ்நாயக்க நிலமேமார்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவு நமக்கு உள்ளது. ஆளும் தரப்பாக நமக்கு வழங்கப்பட்டுள்ள வகிபாகத்தை முறையாக இனங்கண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க முடியும் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 04, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.