ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்குவதற்காக மாணவர்களிடம் பணம் திரட்டப்படுவதை கல்வி அமைச்சு கடுமையாகத் தடை செய்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது
பரிசுகள் சேகரிப்பது தொடர்பான குழுக்களை அமைத்து மாணவர்களிடம் பணத்தைச் சேகரிப்பது அல்லது பரிசுப் பொருட்களைத் திரட்டுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இதற்கான முக்கிய காரணங்கள்:
பரிசுப் பொருட்களைத் திரட்டுவது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது. கல்வி பெறும் ஏற்பாடுகளுக்காக அதிகரித்துள்ள செலவீனத்துடன் இந்த செலவும் சேரும் போது நிலமை மோசமடைகிறது.
சக மாணவர்களுடன் ஒப்பிடும்போது, வறுமை அல்லது இதர காரணங்களால் அன்பளிப்பு வழங்க முடியாத மாணவர்களுக்கு மன உளைச்சலையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகிறது. மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறே ஆசிரியர் தம்மீது கொண்டுள்ள அபிப்பிராயம் பாதிக்கப்படும் எனவும் மாணவர்கள் அச்சம் கொள்கின்றனர்.
இது மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையை பாதிக்கிறது. அரசாங்க கல்வி முறைமையின் மிக முக்கிய வழிகாட்டல் கொள்கையாக இலவசக் கல்வி நோக்கப்படுகிறது. பணம் அறவிடல் அல்லது பெறுமதியான பரிசுகளை பெறுதல் இந்த அடிப்படை விதியை நலிவடையச் செய்கிறது.
ஆசிரியர்களின் நடத்தையில் பரிசுப் பொருட்கள் தாக்கம் செலுத்தும் போக்கு கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. அதிக பெறுமதியான பரிசு தரும் மாணவர்கள் ஆசிரியரின் அன்புக்குரியவராக மாறும் அதே வேளை பெறுமதி குறைந்த பரிசு தரும் அல்லது பரிசு தராத மாணவர்கள் ஒதுக்கப்படலாம். (இது பொதுவானதல்ல. ஒரு சில ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாம்.)
எனவே, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இத்தகைய அன்பளிப்புகள் அல்லது பணத்தைச் சேகரித்தல், வழங்குதல் அல்லது பெற்றுக்கொள்வதில் எந்த வகையிலும் ஈடுபடக் கூடாது என்பது அமைச்சின் கடுமையான அறிவுறுத்தலாகும். இந்தச் செயற்பாடுகள் இலஞ்சமாகக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை முற்றாகத் தவிர்ப்பது அனைவருக்கும் ஆரோக்கியமானது.
இவ்வாறான சிக்கல்களை தவிர்ப்பதற்கான சில பாடசாலைகள் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க முனைகின்றனர்.
பாடசாலைகள் பாடங்களை படிப்பதற்கான இடம் மாத்திரமல்ல. மாறாக முன்மாதிரிகளை போதிக்கும் இடமாகவும் மாணவர்களிடம் வாழ்க்கை்கான, அதன் பிணைப்புக்கான உணர்வுகளை வலுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் இடமாகவும் அமைகிறது. எனவே ஆசிரியர் தின நிகழ்வுகளைத் தவிர்ப்பதை விட அதனை அர்த்தமுள்ளதாகவும் எளிமையாகவும் கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும்.
அன்பளிப்பை விடவும் மேலான கொண்டாட்டங்கள்.
ஆசிரியர் தினத்தின் உண்மையான நோக்கம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், சேவையையும் கௌரவிப்பதாகும். பணத்தை மையப்படுத்திய பரிசுகளைத் தவிர்த்து, இதயபூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் கொண்டாடுவது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் என்றென்றும் நினைவில் நிற்கும் மகிழ்ச்சிகரமான நாளாக மாற்றுவதற்கு முயற்சிக்கலாம்.
இதயபூர்வமாக நன்றி பாராட்டுதல்.
மாணவர்களே சொந்தமாகத் தயாரிக்கும் நன்றியுணர்வுக் கடிதங்கள் அல்லது அட்டைகள் (Gratitude Notes) ஒரு விலையுயர்ந்த பரிசை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம் பற்றி அதில் எழுதுவது உணர்வுப்பூர்வமானது. அவ்வாறான அட்டைகள் அல்லது கடிதங்களை குறிப்பிட்ட தினத்தில் ஆசிரியருக்கு பகிர்வது ஆசிரியர் மாணவர் தொடர்பை மேலும் அர்த்தப்படுத்தும். ஆசிரியருக்கு மிகப் பெறுமதியாக தமது பணி அடையாளப்படுத்தப்படுவதை உணர்வு பூர்வமாக அனுபவிக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
2. நன்றியுணர்வுப் பதாகை அமைத்தல்.
பாடசாலை வளாகத்தில் ஒரு 'ஆசிரியர் நன்றியுணர்வுச் சுவரை' (Wall of Appreciation) உருவாக்கி, ஆசிரியர்களைப் பற்றிய பாராட்டுக் குறிப்புகள், கவிதைகள் அல்லது சிறிய ஓவியங்களை மாணவர்கள் ஒட்டுவதற்கு முயற்சிக்கலாம். இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். மாணவர்கள் வழங்கும் பாராட்டுக்குறிப்புக்களை விட பெறுமதியானதாக எந்தப் பரிசும் திருப்தி தராது.அவ்வாறே மாணவர்களின் பிரார்த்தனைகளை விட ஆசிரியர்களுக்கு பெறுமதிமிக்க எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. எனவே பகிரங்கமான இந்த சுவரில் மாணவர் ஆசிரியர்கள் தொடர்பான பிரார்த்தனைகளை அழகிய வடிவில் எழுதி ஒட்ட முடியும்.
இந்த சுவர் அல்லது பதாதைகளை பாடசாலையின் வாயில் பகுதியில் அல்லது முக்கியமாக அனைவரும் கூடும் இடத்தில் வைக்கலாம். இதனை ஓரிரு வாரங்களுக்கேனும் பாதுகாப்பது பொருத்தமாக இருக்கும்.
3. ஆக்கபூர்வமான கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
ஆசிரியர் தினத்தில் விசேட மன்றம் ஒன்றை மாணவர்களே .ஏற்பாடு செய்து, ஆசிரியர்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் நாடகங்கள், கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றை அரங்கேற்ற முடியும்.
மாணவர்களை அமரச்செய்து ஆசிரியர்கள் தமது திறமைகளை வௌிப்படுத்தி மாணவர்களை மகிழ்விக்கும் விதமான போக்கு பொதுவானதாகிவிட்டது. உண்மையில் அன்றைய தினம் ஆசிரியர்களைக் கௌரவிப்பதே நிகழ்வுகளின் முக்கிய குறிக் கோளாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, மாணவர்கள் முன்னால் ஆசிரியர்கள் சேர்ந்து நடனமாடல், மற்றும் சினிமாப் பாடல்களைப் பாடுதல் முதலானவற்றைத் தவிர்த்துக் கொள்வது நல்ல முன்மாதிரிகளை ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் சமூகத ஊடகத் தளங்களில் பரவி பல ஆசிரியர்கள் சங்கடங்களை சந்தித்தமை நினைவுபடுத்தத் தக்கது.
4. நீண்டகாலப் பெறுமதி மிக்க செயற்பாடுகளைத் திட்டமிட முடியும்.
ஆசிரியர்களின் கௌரவத்தைக் குறிக்கும் வகையில் பாடசாலை வளாகத்தில் ஒரு மரம் நடுதல் அல்லது மலர்த் தோட்டம் அமைத்தல் திட்டத்தை மாணவர்கள் முன்னெடுக்கலாம். இது நீண்ட கால பலன்தரக்கூடியதாக அமையும். நீண்ட கால நினைவுகளுக்கானதாகவும் அமையும்.
அவ்வாறே ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைப் பாராட்டும் வகையில், மாணவர்கள் குழுவாக இணைந்து ஒரு சமூக சேவைத் திட்டம் (உதாரணமாக பாடசாலை நூலகத்தைச் சுத்தம் செய்தல், முதியோர் இல்லத்திற்குச் செல்லுதல்) ஒன்றைத் திட்டமிடலாம். ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்திற்கென இவ்வாறான திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.
இறுதியாக, ஆசிரியர் தினக் கொண்டாட்டம் என்பது பணத்தின் மதிப்பால் நிர்ணயிக்கப்படுவது அல்ல. அது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் இதயபூர்வமாக அங்கீகரிக்கும் ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும். கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு மதிப்பளித்து, பொருளாதாரச் சுமைகளைத் தவிர்த்து, பண்பு, அன்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர் தினத்தை அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சியானதாகவும் கொண்டாடுவதுதான் ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசாகும்.

கருத்துகள் இல்லை: