காசாவிலிருந்து படைகளை மீளப்பெற இஸ்ரேல் பச்சைக்கொடி...!
காசாவில் இருந்து படைகளை மீளப்பெறுவதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தி 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
250 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாலஸ்தீனம் மீது போர் தாக்குதல் அறிவித்தார். போர் தொடங்கி 2-ம் ஆண்டை நெருங்கும்நிலையில் போரில் 66 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்து நெதன்யாகு கடந்த 30- ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரண்டு தலைவர்களுக்கு இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக டிரம்ப் சார்பில் அமைக்கப்பட்ட குழு 20 அம்ச அமைதி திட்டத்தை பரிந்துரைத்தது. காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றுவதை முக்கிய அம்சமாக இந்த திட்டம் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக ஏற்றுக்கொண்டார். இந்த ஒப்பந்தந்தை ஏற்க ஹமாசுக்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது “இதுவே ஹமாசுக்கு இறுதி வாய்ப்பு. உடன்படாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார்.இந்த சூழலில் இஸ்ரேல் கைதிகளை விடுவித்து அமைதி உடன்படிக்கைக்கு ஒத்துபோவதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாசின் நிலைப்பாட்டை டிரம்ப் வரவேற்றுள்ளார்.
இந்தநிலையில் இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராக உள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து முதல்கட்டமாக படைகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில், “பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது,
அதை நாங்கள் ஹமாசிடம் காட்டியுள்ளோம், பகிர்ந்து கொண்டுள்ளோம். ஹமாஸ் உறுதிப்படுத்தியதும், போர்நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வரும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும், அடுத்தகட்டமாக மற்ற பகுதிகளில் இருந்தும் படிப்படியாக இஸ்ரேல் படைகள் திரும்பப்பெறப்படும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: