2026 வரவுசெலவுத் திட்டத்தின் மூலோபாய நோக்கங்கள்
நிலைபேறான, சகலருக்கும் பயனளிக்கக்கூடிய பொருளாதார விருத்தி
ஒருசில வருடங்களில் 7 வீதத்தைத் தாண்டிய விருத்தியை அடைந்த வண்ணம் அதன் பயன்களை நாட்டின் சகல பிரதேசங்களுக்கும், சமூகங்களுக்கும் மற்றும் சமூகக் குழுக்களுக்கு இடையில் நியாயமான முறையில் பகிர்ந்து செல்வதை உறுதிப்படுத்துவதே எமது பிரதான உபாயவழி நோக்கமாகும்.
இதற்காக உற்பத்தித் திறனை அதிகரித்தல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல், தனியார் துறையை இணைத்துக் கொண்ட முதலீடும் விருத்தியும் என்பன எமது பொருளாதாரத்தை வழிநடாத்தும் பிரதான சக்திகளாக அமையும்.
வெளிப்படைத் தன்மையுடன் கூடிய, விதி முறைகளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறைகள் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று ஏற்றுமதிகளையும் பெறுமதிசேர்க்கப்பட்ட கைத்தொழில்களையும் பலப்படுத்திய வண்ணம், இலங்கையை உலகளாவிய பெறுமதிசேர் சங்கிலித் தொடருடன் இணைப்பதும் முக்கியமாகும்.
அரச – தனியார் கூட்டு முயற்சிகளையும் அரசதொழில் முயற்சிகளையும் நவீனமயப்படுத்துவது இம்முயற்சிகளுக்கு தொடர்ந்தும் பலமாக அமையும். அதே போன்று உபாயவழி ரீதியாக உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் மற்றும் பொறுப்புக் கூறுதலுடனும் அமுல் செய்வது கட்டாயமாகும்.
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலம் உயர் வருமானம்
இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை தொடர்ந்தும் அதிகரிக்கும் நோக்குடன் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் (2025-2029) – மூலம் ஏற்றுமதிப் பல்வகைப்படுத்தல், ஏற்றுமதிப் போட்டித் தன்மையை மேம்படுத்தல், உலகளாவிய சங்கிலித் தொடர்புடன் இணைந்து செயற்படுதல் மற்றும் புதிய ஏற்றுமதி சந்தைகளை கைப்பற்றுதல், அதேபோன்று ஏற்கனவே உள்ள சந்தையை விஸ்தரித்தல் முதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தற்சமயம் கைச்சாத்திடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்தல் மற்றும் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வருதல்போன்ற நடவடிக்கைகளின் பொருட்டு ஏற்கனவே நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. புதிய தீர்வை வரிக் கொள்கையை அறிமுகம் செய்வதற்கும் , புதிய ஏற்றுமதி உற்பத்தி மற்றும் சேவை மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் தேசிய தனிவர்த்தக கரும பீடத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்தல்
இலங்கையின் கடன் மட்டம் நிலைபேறானதல்லவென சர்வதேச நாணய நிதியம் 2022 ஆம் வருடத்தில் தெரிவித்திருந்தது. இதற்கான பிரதான காரணம், பொறுப்பற்ற வீணான கடன்பெறுகை, பெற்றுக்கொண்ட கடன்களிலிருந்து தேவையான சொத்துக்கள் உருவாக்கப்படாததும், கடன் முகாமைத்துவத்தை முறையான கொள்கைப் பணிச்சட்டத்தில் மேற்கொள்ளாதிருத்தலுமாகும்.
எவ்வாறாயினும், நாங்கள் இப்போது கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தெளிவான திட்டமொன்றை, குறிப்பாக அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தினூடாக வகுத்து வருகின்றோம். முடிவுறும் தருவாயிலுள்ள கடன்மறுசீரமைப்பு தொழிற்பாடு பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டை அடைவதற்கும் எமது தலையீடும் காரணமாக சந்தை மீதுள்ள நம்பிக்கை துரிதமாக விருத்திபெற்று வருகின்றது.
அதேபோன்று, இலங்கையின் கடன் தரப்படுத்தல் உயர்வடையச் செய்யப்பட்டுள்ள பின்னணியில், கடன் நிலைபேறு தன்மையை அடையும் திசையை நோக்கி, தெளிவான பாதையூடாக முறையானதும் நிலையானதுமான பாதையில் எமது அரசாங்கம் பயணிக்கின்றது.
மொத்த நிதி தேவையை நடுத்தர கால மொத்த தேசிய உற்பத்தியில் 13 வீதத்திற்கு குறைந்த மட்டத்திலும் வருடாந்த வெளிநாட்டு கடன் சேவையை மொத்த தேசிய உற்பத்தியில் 4.5 வீத்த்தை தாண்டாத மட்டத்தை பேணிச் செல்வது கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கான மற்றுமொரு உபாயவழியாகும்.
அதற்கமைய அரச நிதி நிலவரத்தை பலப்படுத்தும் அதேவேளை மொத்த தேசிய உற்பத்தியின் வீதமொன்றாக அரச கடன் படிப்படியாக குறைந்து செல்வதற்கு ஆரம்பித்துள்ளது.
2032 இல் அடைய வேண்டிய இலக்கான 95 வீதத்தை தற்போதே நெருங்கியிருக்கின்றது. இப்பெறுபேறுகளின் அடிப்படையிலும் எமது கடன் முகாமைத்துவ உபாய வழிகளுக்கு அமையவும், 2032 ஆம் வருடத்தில் கடன் விகிதம் மொத்த தேசிய உற்பத்தியின் வீதமொன்றாக 90 வீதத்திற்கு குறைந்த மட்டத்தில் வைத்திருக்கும் இலக்கை இலகுவாக அடைய முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும்.
2028 ஆம் வருடத்தில் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முடியாத நிலை தோன்றுமென அடிப்படையற்ற கருத்துக்களை ஒருசில தரப்பினர்கள் சமூகத்திற்கு எடுத்துரைத்த வண்ணம் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையான நிலை என்ன? நாங்கள் 2024 ஆம் வருடத்தில் 1,674 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணைப் பணமாகவும் வட்டியாகவும் செலுத்தி முடித்துள்ளோம்.
2025 செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதியாகும்போது 1,948 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ் வருடத்தின் டிசெம்பர் மாத 31 ஆந் திகதியாகும் போது மேலும் 487மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு ஆயத்தமாகவுள்ளோம். அதற்கமைய 2025 ஆம் வருடத்திற்கான மொத்த வெளிநாட்டுக் கடன் சேவை 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 761 மில்லியன் அதிகரிப்பாகும்.
2028 ஆம் வருடத்தில் நாங்கள் செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் சேவைகளின் அளவு 3,259 மில்லியன் டொலர் மட்டுமே. அதாவது, 2025 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது இது 824 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும். இக் கடன்களைச் செலுத்துவதற்கான இயலுமை எமக்கு உள்ளது. எனவே, இவ்வாறான பொய் பிரச்சாரங்களை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றோம்.
மேலும், அரசினால் பெறப்பட்டுள்ள சர்வதேச இறையாணமை முறிகளின் ஒரு பகுதி நல்லாட்சியுடன் தொடர்புபட்ட (Governance-Linked Bonds) முறியாக பெறப்பட்டுள்ளது. அவை 2034 மற்றும் 2035 வருடங்களுக்கிடையில் செலுத்தி முடிக்கப்பட வேட்டியவையாகும்.
கடன் மறுசீரமைப்பு செயன்முறையிலே இலங்கையினால் அடைந்துகொள்ளப்பட்ட இரண்டு சுட்டிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பின் போது சலுகை வழங்குவதற்கு கடன் வழங்குனர்கள் இணங்கியுள்ளனர்.
அதன்படி, 2026 – 2027 ஆண்டுகளிலே அரச வருமான இலக்கு முறையே மொத்த தேசிய உற்பத்தியில் 15.3 சதவீதம் மற்றும் 15.4 சதவீத்தினை விஞ்சியதாகப் பேணுவதற்கு மற்றும் குறித்த காலப் பகுதியினுள் அரசிரை மூலோபாய அறிக்கையினை வெளியிட வேண்டிக் காணப்பட்டது.
அந்த இலக்கினை அடையப்படுமாயின் 2028 ஆண்டிலிருந்து 2035 ஆண்டு வரை செலுத்த வேண்டிய வருடாந்த வட்டி விகிதத்தில் 0.75 சதவீத கழிப்பனவினை வழங்குவதற்கு அக் கடன் வழங்குனர்கள் இணங்கியுள்ளனர்.
அதன்படி, வருடமொன்றுக்கு அ.டொ. 7.9 மில்லியன் கடன் மீள்கொடுப்பனவு மிகுதியொன்று அரசாங்கத்திற்கு கிடைக்கும்.
உற்பத்திப் பொருளாதாரத்தை பலப்படுத்தல்
எமது பொருளாதாரம் பிரதானமாக இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற பொருளாதாரம் என்பதால் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதனால், உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
தற் சமயம் நாங்கள் இறக்குமதி செய்கின்ற பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு, எமது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்ட மானியங்கள், தேவையான தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அதேபோன்று பாரிய அளவிலான உற்பத்திகள் சார்பில் தனியார் துறையின் பங்களிப்பை விருத்தி செய்வதற்கும், உள்ளூர் உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்ப்பதற்கும் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதற்கும் மனிதவள அபிவிருத்திக்காக அரச – தனியார் கூட்டு முயற்சிகளை உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கிராமிய வறுமையை ஒழித்தல்
கிராமிய வறுமையை ஒழிப்பதாயின் மிகச் சிறிய அழகான கிராமத்தை, வளமான கிராமமாக மாற்றி அமைத்தல் வேண்டும். எமது பொருளாதாரத்தில் தேசிய மட்டத்தில் இடம் பெறுகின்ற விருத்தியின் நன்மைகள், கிராம மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறு பொருளாதாரத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லல் வேண்டும். இதற்காக உற்பத்தித் திறனுடைய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவாறு கிராம மக்களை வலுவூட்டுவது எமது பிரதான உபாய வழியாகும்.
இதற்காக, நவீன, நிலைபேறான அதேபோன்று, எவரொருவரும் கைவிடப்படாத அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்கீழ் பொருளாதாரத்திற்கான சந்தர்ப்பங்களை சுலபமாக்குதல், உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, உற்பத்திப் பொருளாதார மேம்பாடு, திட்டமிடப்பட்ட நகரமயமாக்கல், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் முதலான நிகழ்ச்சித்திட்டங்கள், நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களையும் இலக்கு வைக்கப்பட்ட அபிவிருத்திச் சட்டகத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்துடன், விசேட பாதுகாப்புப் பெற வேண்டிய தரப்பினர்களை தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பதும், பல்வேறு நெருக்கடிகளின் தாக்கத்தினால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட தரப்பினர்களுக்காகவும் பலமான சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அமைக்கப்படுதல் வேண்டும். வளமான நாடு அழகான வாழ்க்கை என்பதன் அடிப்படையில் இந் நோக்கங்களை அடையும் நோக்குடனேயே எமது கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை கூறிக்கொள்ள வேண்டும்.
டிஜிற்றல் மயப்படுத்தலை ஊக்குவித்தல்
டிஜிற்றல் மயமாக்கலானது எமது பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வை நிலையை மேம்படுத்துவதில் மிக முக்கியமான மூலோபாய பிரவேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எமது நாட்டில் டிஜிற்றல் பொருளாதாரத்தை ஐ.அ.டொ. 15 பில்லியன் வரை வளர்ச்சியடையச் செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேபோல், அரச ஆட்சி மற்றும் சேவைகளை வெளிப்படத் தன்மையுடன் மற்றும் வினைத்திறனாக பெற்றுக்கொடுப்பதில் இவ் டிஜிற்றல் மயமாக்களானது மிக முக்கியமான பங்களிப்பு செய்கின்றது.
ஆகவே, உறுதியான டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதற்கு அவசியமான நிதி ஆதரவுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சட்டரீதியான மற்றும் நிறுவக ரீதியாக சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 08, 2025
Rating:

கருத்துகள் இல்லை: