மட்டக்களப்பு காத்தான்குடி உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!
பள்ளிவாயல்களில் இமாம்களாக கடமை புரிவோர், அரபு மத்ரஸாக்களில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுவோர் மற்றும் வெள்ளிக்கிழமை குத்பாக்களை நிகழ்த்தும் கதீப்மார்களின் பேச்சுக் கலையையும், சமூகத்தின் நவீன சவால்களை எதிர்கொள்ளும் திறனையும், இளைய தலை முறையினருடன் உரையாடும் ஆற்றலையும் காலத்திற்கேற்ற வகையில் மேம்படுத்துவதற்காக, தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தில் நேற்று 2025/11/22 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தச் செயலமர்வின் முக்கிய நோக்கம், 'அல்ஃபா தலைமுறையினரை' (Alpha Generation) ஆழமாகப் புரிந்துகொள்ள உலமாக்களுக்கு உதவுவது மற்றும் பாரம்பரிய கற்பித்தல் மற்றும் பிரச்சார முறைகளைத் தாண்டி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விளைதிறன் மிக்க முன்வைப்புகளை வழங்குவதற்கான அணுகுமுறைகளைக் கற்றுக்கொடுப்பதாக அமைந்திருந்தது.
அத்துடன், இஸ்லாமிய தலைமைத்துவப் பண்புகளையும், நவீன தஃவா முறைகளையும் விஸ்தரிப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொடுக்கவும் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.
செயலமர்வில், நவீன சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் பல ஆழமான அமர்வுகள் இடம்பெற்றன.
ஆரம்பமாக அல்குர்ஆன் கிராஅத், வரவேற்புரை, மற்றும் செயலமர்வின் நோக்கம் பற்றிய உரை ஆகியவற்றுடன் நிகழ்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பின்னர்
காத்தான்குடி தள வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர்
எம்.எஸ்.எம்.நுஸைர் அவர்களால், அல்ஃபா தலைமுறையினரைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் உரையாடும் உத்திகள் குறித்து விளக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான பிரயோகத் தீர்வுகள் என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் சவால்களும் காரணங்களும் அடையாளம் காணப்பட்டு கலந்து கொண்ட உலமாக்களால் முன்வைப்புகள் நிகழ்த்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) அவர்களால், 21ம் நூற்றாண்டுக்கான தஃவா வழிமுறைகளை ஸீராவினூடாகப் புரிதல் எனும் தலைப்பில் விரிவுரை வழங்கப்பட்டது. இது சமகால சவால்களுக்கான ஸீராவின் தீர்வுகளைக் கண்டறிய உதவியது.
உலகளாவிய ரீதியிலான முன்னோடிப் பள்ளிவாயல்களின் காணொளிகள் மற்றும் காட்சிப் படங்கள் மூலம் வெற்றிகரமான இளைஞர் சமுதாயத்துக்கான ஆன்மீக சூழல் ஒன்றை பள்ளிவாசலில் உருவாக்குதல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எம்.பி.எம்.பைரூஸ் (பிரதம ஆசிரியர், விடிவெள்ளி வாரப் பத்திரிகை) அவர்களால், ஊடகத்தை முறையாகக் கையாளலும், நவீன தொழில்நுட்பத்தின் ஊடான புதிய தஃவா அணுகுமுறைகளும் பற்றி விளக்கப்பட்டது. இதில் சமூக ஊடக தஃவா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் தொடர்பில் சுருக்கமாக முன்வைக்கப்பட்டது.
செயலமர்வின் நிறைவில், உலமாக்கள் புதிய தலைமுறையுடனான சவால்களைப் புரிந்து, பொருத்தமான மொழியிலும் உதாரணங்களுடனும் உரையாடத் தொடங்குவார்கள் என்றும், தமது ஆன்மீக மற்றும் பிரச்சார செயற்பாடுகளின் போது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமூக ஊடகங்கள் அல்லது பிற தளங்களில் தஃவா செயற்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான உத்வேகத்தையும், அறிவையும் வழங்கும் வகையில் செயலமர்வு அமைந்திருந்தது.
இறுதியாக இளைய சமுதாயத்தினரை வலுவூட்டும் வகையில் கலந்து கொண்ட உலமாக்களினால் ஆற்றப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலான செயற்திட்ட முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டதோடு கலந்து கொண்ட அனைத்து உலமாக்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகள், குழுச் செயற்பாடுகள், விளையாட்டுச் செயற்பாடுகள் என்பன இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
ஊடகப் பிரிவு.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை.
மட்டக்களப்பு காத்தான்குடி உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2025
Rating:


















கருத்துகள் இல்லை: