தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய மகளிர் அணி - Women’s WC
மும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தப் போட்டியில் 58 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் இந்தியாவின் தீப்தி சர்மா.
நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி விரட்டியது. அந்த அணிக்காக கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
23 ரன்களில் ரன் அவுட் ஆனார் பிரிட்ஸ். பீல்டிங்கில் அமன்ஜோத் அபாரமாக செயல்பட்டு ஸ்டம்புகளை தகர்த்தார். அன்னேக்கே போஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்ரீ ஷரணி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் சுனே லுஸ் உடன் இணைந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் லாரா. அந்த கூட்டணியை ஷபாலி பிரித்தார். தொடர்ந்து வந்த மரிசான் காப் விக்கெட்டையும் ஷபாலி கைப்பற்றினார்.
அன்னேரி டெர்க்சன் மற்றும் லாரா இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அந்த கூட்டணியை பிரித்தார் தீப்தி. அன்னேரி டெர்க்சனை அவர் போல்ட் செய்தார். சதம் கடந்து இந்தியாவின் வெற்றிக்கு தடையாக நின்ற லாரா வோல்வார்ட் விக்கெட்டை அதற்கடுத்து வீசிய ஓவரில் தீப்தி வீழ்த்தினார். அவர் 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார். பெரிய ஷாட் ஆட முயன்றார் லாரா. ஆனால், பந்து அமன்ஜோத் வசம் தஞ்சமானது. பந்தை தட்டி தட்டி பிடித்திருந்தார் அமன்ஜோத். அதே ஓவரில் குளோ டிரையானை எல்பிடபிள்யூ முறையில் தீப்தி வெளியேற்றினார். அயபோங்கா காக்கா 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நடின் டி கிளர்க் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 9.3 ஓவர்கள் வீசி, 39 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் தீப்தி. ஷபாலி 2, ஸ்ரீ ஷரணி 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 52 ரன்களில் வெற்றி பெற்று உலக கோப்பையை முதல் முறையாக வென்றது.
முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணிக்காக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன் குவித்தது. அதற்கடுத்த சில ஓவர்களில் பவுண்டரி பதிவு செய்ய முடியாத வகையில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் பந்து வீசி இருந்தனர்.
ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களத்துக்கு வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் இணைந்து 62 ரன்கள் கூட்டணி அமைத்தார் ஷபாலி. 78 பந்துகளில் 87 ரன்கள் அவர் ஆட்டம் இழந்தார். ஜெமிமா 24 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்களிலும், அமன்ஜோத் கவுர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் தீப்தி சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியினர் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
6-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் தீப்தி சர்மாவும், ரிச்சா கோஷும். 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ரிச்சா ஆட்டமிழந்தார். தீப்தி 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ராதா யாதவ் 3 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காக்கா 3 விக்கெட் வீழ்த்தினார். லாபா, குளோ டிரையான், நடின் டி கிளர்க் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய மகளிர் அணி - Women’s WC
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:

கருத்துகள் இல்லை: