Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லை அதிகரிப்பும் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடும்:


அரசாங்கமானது நீதித்துறை சார்ந்த நீதிபதிகளின், குறிப்பாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையினை அதிகரிக்கும் பிரேரணையைத் தயாரித்து, தற்போது அது அமைச்சரவையிலும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது.


குறிப்பாக, இவ்வயது எல்லை அதிகரிப்பானது நீதிமன்றங்களில் தேங்கியிருக்கின்ற அண்ணளவாக 11 இலட்சம் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தரப்புகள் தெரிவிக்கின்றன.


எனினும், இப்பிரேரணைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மாபெரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.


அண்மைய நாட்களில் சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றதோடு, அதில் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டு, இந்த நீதிபதிகளின் ஓய்வு வயது எல்லை அதிகரிப்புக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். 


மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் முக்கிய அங்கத்தவர்களுக்கும், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றுள்ளது.


ஊடகங்கள் வாயிலாக சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்த எதிர்ப்பிற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்டாலும், குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும் எனத் தங்கள் ஆதரவுகளையும் ஆசிகளையும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் பல்வேறு முக்கிய சட்டத்தரணிகளும், நாட்டுக்காகப் பல்வேறு இக்கட்டான முக்கிய சந்தர்ப்பங்களில் நீதித்துறை ஊடாகத் தங்கள் பங்களிப்பை ஆற்றிய பிரபலமான சட்டத்தரணிகள் பலரும் இப்பிரேரணைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையொன்றும் காணப்படுகின்றது. 


எனவே, இதனை முற்றுமுழுதாக அரசியல் காரணமாகக் காட்டி கடந்து செல்வது பொருத்தமற்றது.


ஓய்வு பெறும் வயது எல்லை அதிகரிப்பு சாதகமான விளைவுகளையும் பாதகமான விளைவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


குறிப்பாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் பணியாற்ற இளம் வயதுடைய ஒருவர் தெரிவு செய்யப்படுவாராயின், அவர் மிக நீண்ட காலம் பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும். 


குறிப்பாக, உயர் நீதிமன்றம் என்பது இலங்கையின் உச்சமான இறுதியான நீதிமன்றம் என்பதால், அங்கே பணியாற்றுபவர் வேறு எந்த இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புகளும் இல்லை.


நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக இருந்தாலும், நீதிமன்றங்களின் நடைமுறைகள் இன்னமும் பாரம்பரிய முறையிலேயே பின்பற்றப்பட்டு வருவதும், புதிய நவீனமயமான நடைமுறைகளுக்கு இன்னமும் மாற்றமடையாமையும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு காணப்படுகின்ற அதிக பணிச்சுமை மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கைகள் போதாமை போன்றவை மிகப்பிரதானமான காரணிகளாகும்.


இந்த வயது எல்லை அதிகரிப்பு பிரேரணையானது அரசாங்கத்திற்குப் பாரியதொரு சவாலாக மாறியுள்ளதுடன், இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அரசுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், அதேபோல அரசுக்குச் சார்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முயற்சிகள் மேற்கொண்ட சட்டத்தரணிகளுக்குமிடையிலான உறவில் ஒரு விரிசல் ஏற்படும் என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.


நீதிமன்றச் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. மக்களுக்குக் குறுகிய காலப்பகுதிக்குள் தங்களுக்குரிய தீர்வுகள் நீதித்துறையில் கிடைப்பது பெரும் வரப்பிரசாதமாகும். 

ஆனால், இந்தத் துரிதப்படுத்தல் செயல்பாடானது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதினால் மட்டும் சாத்தியமாகிவிடாது என்பது தெளிவான உண்மையாகும்.

(ஆதம்லெப்பை ஆதிப் அஹமட்)
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லை அதிகரிப்பும் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடும்: Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 31, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.