Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறைச்சாலையில் இருந்து தப்பிய 709 கைதிகள் தலைமறைவு: 5,000 மேற்பட்ட தொலைபேசிகள் பறிமுதல்

2019 – 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில், சிறைச்சாலைகள் தொடர்பான பல சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை.

மேலும், கணக்காய்வு உட்படுத்தப்பட்ட 2025ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 22 சிறைச்சாலைகளில் இருந்து 5,083 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றுடன், 2,432 கைப்பேசி மின்கலங்கள், 970 சார்ஜர்கள், 4,149 சிம் அட்டைகள் மற்றும் 3,111 பிற உதிரிப் பாகங்களும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சாதனங்கள் கைதிகளின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இவை கைதிகளுக்குக் கிடைப்பதனால் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பாதாள உலகச் செயல்பாடுகள் அதிகரித்து, பொதுமக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் அவதானித்துள்ளது.

இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 825 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மெகசின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வசதிகளின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரிகளும் கைதிகளும் கடும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹர மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளின் வசதிகளை மேலும் விரிவுப்படுத்தி, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பெண் கைதிகளை வட்டரக்க சிறைச்சாலைக்கும், சந்தேக நபர்களை மஹர சிறைச்சாலைக்கும் இடமாற்றம் செய்வதன் மூலம் இந்த நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் கணக்காய்வு அலுவலகம் யோசனை முன்வைத்துள்ளது.

சிறைச்சாலையில் இருந்து தப்பிய 709 கைதிகள் தலைமறைவு: 5,000 மேற்பட்ட தொலைபேசிகள் பறிமுதல் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.