Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேசிய பூங்காக்கள் சார்ந்து நிலையான வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுலா முகாமைத்துவ வேலைத்திட்டம்

புதிய நுழைவாயில்கள் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு வழங்கல் வினைத்திறனை அதிகரிக்க அறிவுறுத்தல்கள்.


தேசிய பூங்காக்கள் சார்ந்த சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல், உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை வினைத்திறன்மிக்கதாக்குதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருமான வழிகளை விரிவுபடுத்தல் தொடர்பில் ஆராயும் கண்காணிப்பு விஜயமொன்று கடந்த (12) ஆம் திகதி சூழல் பிரதி அமைச்சரின் தலைமையில் மின்னேரியா, கவுடுல்ல மற்றும் ஹுருலு தேசிய பூங்காக்களில் முன்னெடுக்கப்பட்டது.


மின்னேரியா மற்றும் கவுடுல்ல பூங்காக்களுக்கு நாளொன்றுக்கு 400-600 வரையான அதிகளவிலான ஜீப் வண்டிகள் நுழைவதால் வனவிலங்குகளுக்கும் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, நிபுணர் குழுவொன்றின் ஊடாக விஞ்ஞான ரீதியான கொள்ளளவு (Carrying Capacity) ஆய்வை உடனடியாக முன்னெடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.


மேலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக மின்னேரியா பூங்காவிற்குள் நுழைவதற்கு சீகிரியா-பேக்குளம் பகுதியில் புதிய நுழைவாயிலொன்றை உருவாக்குவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


மின்னேரியா தேசிய பூங்காவிற்குள் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் நுழையும் வாகனங்களை பட்டுஓயா (Batu Oya) வெளியேறும் வழி ஊடாக அனுப்பி நெரிசலைக் குறைப்பது தொடர்பாகவும் இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இணையவழி பயணச்சீட்டு (Online Ticketing) வழங்கும் முறைமையை மேம்படுத்துவதற்காக மின்னேரியா மற்றும் கவுடுல்ல பூங்காக்களுக்கு ஒரே இடத்தில் பயணச்சீட்டு வழங்கும் முறைமையொன்றும், ஹுருலு சூழல் பூங்காவிற்கு (Hurulu Eco Park) நகரப் பகுதியில் செயற்படும் வகையில் புதிய இணையவழி பயணச்சீட்டு முறைமையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பூங்கா நுழைவாயில்களில் வாகனங்களின் வருகை மற்றும் வெளியேற்றத்தை கண்காணிக்கும் இணையவழி முறைமையை (Online System) இற்றைப்படுத்தி, நுழைவாயில்களில் நிலவும் வாகன நெரிசலை உடனடியாகக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


அத்துடன் சுற்றுலா வசதிகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஹுருலு சூழல் பூங்காவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக உயர்தர உணவு மற்றும் பான வசதிகளைக் கொண்ட நிலையமொன்றை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மின்னேரியா மற்றும் கவுடுல்ல பூங்காக்களுக்குள் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்க வேண்டிய குறைந்தபட்ச கால அளவை நிர்ணயிப்பதற்கும், பூங்காக்களுக்குள் உள்ள அருங்காட்சியகங்களை நவீன அங்கங்களுடன் கவர்ச்சிகரமான முறையில் புனரமைப்பதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலதிக வருமானத்தை ஈட்டும் நோக்கில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வனவிலங்கு கருப்பொருளைக் கொண்ட ரீ-சேர்ட்கள் (T-shirts), நினைவுச்சின்னங்கள் (Souvenirs) மற்றும் உள்ளூர் தயாரிப்புகளை பூங்கா வளாகங்களில் விற்பனை செய்யும் புதிய முறையொன்றை ஆரம்பிக்க முன்மொழியப்பட்டது.

தொடர்புடைய அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் சூழலியல் நிபுணர்களை ஒருங்கிணைத்து இந்தத் தீர்மானங்களை துரிதமாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான சேவையை வழங்கவும், எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் வனவிலங்கு மற்றும் சூழல் தொகுதிகளைப் பாதுகாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது

தேசிய பூங்காக்கள் சார்ந்து நிலையான வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுலா முகாமைத்துவ வேலைத்திட்டம் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.