கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தாதியர் உதவியாளர் ஊழியர்களின் சீருடை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அரச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தாதியர் உதவியாளர் ஊழியர்களின் சீருடை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அரச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
குறிப்பாக, தங்களுடைய சமய மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கு அமைவாகவும், அரசாங்க சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாகவும் உடை அணிந்து பணிக்கு வருவதற்கு முயற்சித்த சில ஊழியர்களை, உரிய முறையில் பணிக்கு அனுமதிக்காமல் அல்லது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சீருடை என்பது அரசாங்க சுற்றறிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக விதிமுறைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு விடயமாகும். அதேவேளை, எமது நாடு பல்மைத்துவமான சமூக, சமய மற்றும் கலாச்சாரப் பண்புகளைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் ஏனைய அனைத்து சமூகங்களையும் சேர்ந்த அனைவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டிய பொறுப்பு கொண்டவர்களாக இருக்கின்றோம்.
ஒவ்வொருவரும் தத்தமது மத, சமய மற்றும் கலாச்சார நம்பிக்கைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கை அரசியலமைப்பில் (1978) மிகவும் தெளிவாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 10, ஒவ்வொருவருக்கும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரத்தை உறுதி செய்கின்றது.
அதேபோன்று, உறுப்புரை 11, எந்தவொரு நபரும் சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்ற அடிப்படை உரிமையை உறுதி செய்கின்றது.
மேலும், அரசியலமைப்பின் உறுப்புரை 15 சில அடிப்படை உரிமைகளுக்கு சட்டத்தின் மூலம் விதிக்கக்கூடிய வரையறைகளைப் பற்றி குறிப்பிடுகின்றது. எனினும், உறுப்புரை 10 மற்றும் உறுப்புரை 11 ஆகியவற்றில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகள் விசேடமான பாதுகாப்பைக் கொண்டவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, மத, கலாச்சார சுதந்திரம் மற்றும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மிகவும் முக்கியமான அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகளாகும்.
எனவே, ஒரு ஊழியர் தனது தொழிலுக்குச் செல்வது அவருடைய வாழ்வாதாரத்தைப் பேணுவதற்காகும். ஆனால், அந்த வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தனது சமய அல்லது கலாச்சார அடையாளங்களை முற்றாகக் கைவிட வேண்டும் என்ற நிலையை ஒரு நிர்வாக அதிகாரி கட்டாயமாக்குவது நியாயமானதாக இருக்க முடியாது.
குறிப்பாக, ஒரு ஊழியர் தனது உடலின் தேவையான பகுதிகளை மறைக்கும் வகையில், தனது சமய மற்றும் கலாச்சார நம்பிக்கைகளுக்கு அமைவாக உடை அணிந்து பணிக்கு வருவதுடன், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சீருடை விதிமுறைகளையும் நடைமுறையில் பின்பற்றுகின்ற நிலையில், அவரை அவமதிக்கும் அல்லது தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒரு வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பது பொறுப்பும் உயர்ந்த பதவியும் கொண்ட ஒரு அதிகாரியாகும். வைத்தியத் துறையில் கல்வியும் தொழில்முறை அனுபவமும் பெற்ற ஒருவர், பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த ஊழியர்களுடன் பணியாற்றும் போது, அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மற்றும் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு மிகவும் நுணுக்கமான மற்றும் மனிதாபிமானமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அத்தகைய ஒரு நடவடிக்கையால் ஏற்படப்போகும் நன்மை என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். ஊழியர்களை அவர்களுடைய சமய அல்லது கலாச்சார அடையாளங்களை விட்டுவிட்டு பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதால் வைத்தியசாலைக்கும், நோயாளிகளுக்கும் அல்லது சுகாதார சேவைக்கும் எந்தவிதமான பயனும் ஏற்படாது.
மாறாக, பணிக்கு வருகின்ற ஊழியர்களின் சமய மற்றும் கலாச்சாரப் பின்னணியையும், அரசாங்க சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சீருடை தொடர்பான விதிமுறைகளையும் கருத்தில் கொண்டு, இரண்டிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் தமது மதத்தையும் கலாச்சாரத்தையும் மதிப்பதோடு, மற்றவர்களின் மத, சமய மற்றும் கலாச்சார உரிமைகளையும் மதிக்க வேண்டும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உரிமைகளை மதித்து நடக்கும் போதுதான் எமது நாடு உண்மையான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்ட நாடாக முன்னேற முடியும்.
குறிப்பாக, வைத்தியசாலை என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஒரு முக்கியமான நிறுவனமாகும். ஒரு வைத்தியர், தாதியர், தாதியர் உதவியாளர் அல்லது வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நோயாளியைப் பார்க்கும்போது, அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு சேவை வழங்குவதில்லை. அவர் ஒரு நோயாளி என்ற அடிப்படையிலேயே அவருக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குகின்றார்.
அவ்வாறான மனிதநேயமும் சமத்துவமும் நிலவ வேண்டிய வைத்தியசாலைச் சூழலில், ஊழியர்களின் சமய அல்லது கலாச்சார அடையாளங்களைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் உருவாக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
எனவே, இவ்வாறான நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சமயச் சுதந்திரம் தொடர்பான சட்டக் கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதேவேளை, எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் சீருடை தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுக்கக் கோவை ஒன்றை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.
அந்த வழிகாட்டுதல்களில், அரசாங்க சுற்றறிக்கைகளின் அடிப்படையிலான சீருடைத் தேவைகளுடன், இலங்கை அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மத, சமய மற்றும் கலாச்சார உரிமைகளையும் உரிய முறையில் கருத்தில் கொண்டு, நடைமுறைக்கு ஏற்ற சமநிலையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு ஊழியரின் சமய அல்லது கலாச்சார அடையாளத்தை மதிப்பதும், அதேவேளை வைத்தியசாலையின் தொழில்முறைத் தரத்தையும் சுகாதார சேவையின் ஒழுங்கையும் பேணுவதும் ஒன்றுக்கொன்று முரணான விடயங்கள் அல்ல. சரியான நிர்வாக அணுகுமுறையின் மூலம் இரண்டையும் சமநிலைப்படுத்த முடியும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனும் மனிதாபிமானத்துடனும் சட்டரீதியாகவும் அணுகி, புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தேவையற்ற சிரமங்களுக்கு உள்ளாகாமல், அவர்களின் உரிமைகளும் மதிக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தாதியர் உதவியாளர் ஊழியர்களின் சீருடை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அரச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: