அரச துறையில் சிறந்த இணையதளமாகவும் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தங்க விருது வென்றது
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk, அண்மையில் நடைபெற்ற "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழாவில் 'சிறந்த இணையத்தளத்திற்கான' (Best Website Overall) ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளது.
அத்துடன், 'சிறந்த அரச இணையத்தளம்' (Best Government Website) பிரிவில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தங்க விருதை (Gold Award) வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
LK டொமைன் பதிவகத்தினால் (LK Domain Registry) ஏற்பாடு செய்யப்பட்ட "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழா, 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள 'மொனார்க் இம்பீரியல்' (Monarch Imperial) மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டு 24 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் போட்டியில் பங்கேற்றன. தொழில்நுட்ப அமுலாக்கம், செயல்திறன், வடிவமைப்பு, உள்ளடக்கம், பாதுகாப்பு மற்றும் ஏனைய மேலதிக அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இணையத்தளங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதற்கு முன்னரும் BestWeb.lk போட்டியில் பல சந்தர்ப்பங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. நவீனமயப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு மீண்டும் இப்போட்டியில் பாராளுமன்ற இணையத்தளம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவில் பல முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் செயலாளர் திரு. ஜீ. பிரதீப் சபுதந்திரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 15, 2026
Rating:


கருத்துகள் இல்லை: