Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆபத்தின்றி மாற்றம் நிகழாது; மக்களுக்காக சவாலை ஏற்பேன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை – ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!


 
“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால் எனது பதவி பறிபோனாலும்கூட அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகத் தயார்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு ,

“எனது அணுகுமுறையானது எப்போதும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கும். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசமைப்பை மீறி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன்.

தற்போது முன்னெடுக்கப்படும் அரசமைப்பு மறுசீரமைப்பைத் தொடர்ந்தால் ஜனாதிபதி வீட்டிற்குச் செல்ல நேரிடும் என சிலர் கூறுகின்றனர். அதற்கு நான் தயார். பதவிகளில் நீடித்திருப்பதற்காக நான் இந்த இடத்திற்கு வரவில்லை.

நாட்டிற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு சவால்களையும் அபாயங்களையும் எதிர்கொள்ள நான் தயங்கப்போவதில்லை. ஆபத்துகளின்றி எந்தவொரு மாற்றமும் நிகழாது என்றே நான் கருதுகிறேன். மாற்றம் என்பது எப்போதும் சவால்களைத் தாங்கிக்கொண்டே நிகழ்கின்றது.

குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனது பாதுகாப்பிற்கும் அவர்களே பொறுப்பேற்றுள்ளனர். விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இதனுள் எனக்கு உயிராபத்துகள் உள்ளன என்பதை நான் அறிவேன்.

ஆனால், சவால்களை எதிர்கொள்ளாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அந்த ஆபத்துகளுக்கு மத்தியில் எனது பதவி பறிபோனாலும், அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு நான் வெளியேறுவேன்” என்று கூறினார்.

ஆபத்தின்றி மாற்றம் நிகழாது; மக்களுக்காக சவாலை ஏற்பேன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை – ஜனாதிபதி அநுர திட்டவட்டம்! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 13, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.